அம்பாறை அறநெறி மாணவர்களுக்கு ஓவியம் வரைதல், யோகா பயிற்சிகள் | தினகரன்


அம்பாறை அறநெறி மாணவர்களுக்கு ஓவியம் வரைதல், யோகா பயிற்சிகள்

இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் முன்னெடுக்கும் திட்டம்

இந்து சமய கலா சார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்டத்தில் அறநெறி வகுப்பு மாணவர்கள்16 பேருக்கு யோகாசனப் பயிற்சி வகுப்புகளும், 10 பண்ணிசை வகுப்புகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. கூடவே மாலை கட்டும் பயிற்சி நெறியும் இடம்பெற்று வருகிறது.

திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி, இம்மாவட்டத்திலுள்ள பிரதேசம் தோறும் சென்று இவ்வகுப்புகளை அங்குரார்ப்பணம் செய்து வருகிறார். இதற்கு உதவியாக மற்றுமொரு உத்தியோகத்தர் கே.பிரதாப் ஈடுபட்டு வருகிறார். பிரதேசங்கள் தோறும் பல அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறார்கள்.

இந்து கலாசாரத் திணைக்களத்தின் திணைக்களப் பணிப்பாளர் அருள்.உமாமகேஸ்வரன் இத்திணைக்களத்தில் பதவியைப் பொறுப்பெடுத்த பின்னர் இந்து சமய அறநெறிக் கல்வித் துறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டு வருவதைக் காணலாம்.

அறநெறி மாணவர்களுக்கு பாடநூல் தொகுதி வழங்கப்பட்டுள்ளது. அறநெறி ஆசிரியர்களுக்கு சீருடை வழங்கப்பட்டுள்ளது. இதை விட அறநெறி மாணவரிடையே ஆன்மிக நெறியை மேலும் ஊக்குவிக்கும் பொருட்டு பலவித நிகழ்ச்சிகளை திணைக்களம் நடத்தி வருகிறது. அதற்கான பரிசளிப்பு விழாவையும் நடத்தி வருகிறது. சிறந்த அறநெறி வகுப்புகளைத் தெரிவு செய்யும் போட்டி, ஆக்கத்திறன் விருது வழங்கும் போட்டி, அதற்கான பரிசளிப்பு விழாக்கள் என்று பலதரப்பட்ட நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுத்து வருகிறார் பணிப்பாளர் அருள்.உமாமகேஸ்வரன். இதேசமயம் வடக்கில் ஆறுமுகநாவலர் பெருவிழாவையும், கிழக்கில் சுவாமி விபுலாநந்தர் பெருவிழாவையும் நடத்தி வருகிறார்.

தெய்வப் படங்கள் மற்றும் திருவுருங்கள் எவ்வாறு வரைவது என்பது தொடர்பில் இந்தியாவிலிருந்து பிரபல ஆஸ்தான ஓவியர் க.பத்மவாசன் என்பவரை அழைத்துஅறநெறி மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. அதன் பணி எதிர்வரும் சிவராத்திரியின்று தொடரவிருக்கிறது.

இவ்வகுப்புகளை எதிர்வரும் 21ஆம் திகதி பார்வையிடவிருக்கும் பணிப்பாளர் உமாமகேஸ்வரன் அம்பாறை மாவட்டத்தில் மீண்டும் ஓவியம் வரைதல் பயிற்சியை வழங்கவிருக்கிறார்.

அறநெறி மாணவர்கள் நீண்ட காலத்திற்குப் பிறகு இவ்வகையான யோகா, பண்ணிசை, நடனம், மாலைகட்டுதல் போன்ற வகுப்புகளில் ஆர்வமாக ஈடுபட்டு வருவதைக் காணலாம்.

வரலாற்றில் முதன்முறையாக இந்துகலாசார அமைச்சு தமிழ்கலைஇலக்கியவாதிகளை கௌரவித்த பெருவிழா அண்மையில் முன்னாள் அமைச்சர் மனோகணேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலைக்காக அரிய சேவையாற்றிய பல மூத்த, நடுத்தர மற்றும் இளங்கலைஞர்கள் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்கள்.

மாவட்டத்திற்கான இந்து கலாசார கற்கைகள் நிலையம் சுவாமி விபுலாநந்தர் பெயரில் காரைதீவு சுவாமி விபுலாநந்த மணிமண்டப வளாகத்தில் அமையப் பெற்றிருப்பதும் அங்கு பலவகையான இந்துசமய பயிற்சிநெறிகள் கலசார நிகழ்வுகள் நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை அங்கு ஓவியம் வரைதற் பயிற்சி நடைபெறவிருக்கிறது.

இந்துசமய அறநெறி மாணவர்கள் மத்தியில் தற்போதுதான் புத்துணர்ச்சியும் மறுமலர்ச்சியும் ஏற்பட்டுவருகிறது. ஆசிரியர்களுக்கும் உரிய அங்கீகாரம் கிடைத்துவருகிறது. இது மேலும் தொடரவேண்டும் என்பதே எமது அவா.


Add new comment

Or log in with...