மருதமடு மக்களின் கோரிக்ைகக்கு செவிசாய்க்க எவருமே இல்லை | தினகரன்


மருதமடு மக்களின் கோரிக்ைகக்கு செவிசாய்க்க எவருமே இல்லை

வயல் காணிகள் வனஇலாகாவினால் கையகப்படுத்தப்பட்டதால் வாழ்வாதார வருமானம் பாதிப்பு

தொழில்வாய்ப்புக்கள் எதுவும் இன்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தங்களுக்கு அரசாங்கம் உதவ முன்வர வேண்டுமென முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு மேற்கு மருதமடு பிரதேச மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள புதுக்குடியிருப்பு மேற்கு மருதமடு கிராமத்தில் தற்போது 680 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீள்குடியேறி வாழ்ந்து வருகின்றன. இவ்வாறு வாழ்ந்து வருகின்ற குடும்பங்களுக்கு வீட்டுத் திட்டங்கள் கிடைத்திருக்கின்ற போதும், உட்கட்டுமான வசதிகள் இன்னும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. அங்குள்ள வீதிகள் எதுவும் புனரமைக்கப்படவில்லை.

அப்பிரதேசத்தில் பல்வேறு தேவைகளையுடைய மாற்றுத் திறனாளிகள் வாழ்ந்து வருகின்றனர். பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் பல அங்கு உள்ளன. வறிய நிலையில் அப்பிரதேசத்தில் ஏராளமான குடும்பங்கள் வாழ்கின்றன.

பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றையோரிடம் கையேந்தி பிச்சையெடுத்து வாழ்கின்ற பரிதாபமான நி​ைலமை கூட இந்தக் கிராமத்தில் காணப்படுகின்றது. தங்களது பரிதாப நிலைமை குறித்து இக்கிராம மக்கள் பலரிடமும் எடுத்துரைத்துள்ளனர்.

மருதமடுக்குளத்தின் கீழ் மானாமோட்டை என்ற பகுதியில் 96 ஏக்கருக்கு மேற்பட்ட வயல் நிலங்களும், கள்ளவேட்டை என்ற பகுதியில் 125 ஏக்கருக்கு மேற்பட்ட வயல் நிலங்களும் இம்மக்களுக்கு உரியவையாகும். அந்த நிலங்களில் பூர்வீகமாக இந்த மக்களாலேயே நீண்ட காலமாக பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது.ஆனால், அவற்றுக்கான ஆவணங்கள் வழங்கப்படாது இருந்தன.

இப்போது இந்தக் காணிகள் வன இலாகாவினால் மீள்வனமாக்கல் திட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டிருக்கின்றன. இவ்வாறு பயிர்ச் செய்கை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டமை இந்த மக்களின் வாழ்வை கேள்விக்குறியாக்கியுள்ளது.

"எமது கோரிக்கைகளை எல்லோரிடமும் வைத்திருக்கின்றோம். ஆனால் எவரும் அதற்குச் செவிசாய்ப்பதாக இல்லை.மிக விரைவில் எமது காணிகளை எமக்கு பெற்றுத் தர வேண்டும்" என்று இப்பகுதி மக்கள் தெரிவித்துள்னர்.


Add new comment

Or log in with...