முதலீட்டுக்கு மிகப் பொருத்தமான நாடாக இலங்கையை மாற்றுவதே தனது இலக்கு

முதலீட்டுக்கு மிகப் பொருத்தமான நாடாக இலங்கையை மாற்றுவதே தனது இலக்காகுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

சுற்றாடலை பாதுகாத்து, நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான பொறிமுறையொன்றுக்கு சட்ட ரீதியான பின்புலத்தை உருவாக்க வேண்டுமெனவும் சுற்றாடல் மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகளுடன் நேற்று (18) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சட்டதிட்டங்கள், கட்டுப்பாடுகள், ஒழுங்குவிதிகளில் நடைமுறைக்கேற்றவாறு திருத்தங்களை மேற்கொள்வதற்கு அனைத்து நிறுவனங்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார். சுற்றாடலை பாதுகாப்பதோடு மக்களுக்கு பயனளிக்கக்கூடிய முறைமைகளை அறிமுகப்படுத்துவது அதிகாரிகளின் பொறுப்பாகுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அனுமதிப் பத்திரங்கள் வழங்கும்போது ஏற்படும் காலதாமங்களை இயன்றளவு குறைத்துக்கொள்வதோடு, வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பல வருடங்களுக்கு முன்னர் அனுமதி கோரியுள்ள வட மாகாண நீரியல் பூங்கா சார்ந்த செயற்திட்டங்களுக்கு இதுவரையில் அனுமதி வழங்கப்படவில்லை. அது பற்றிய அவதானத்தை செலுத்தியுள்ள ஜனாதிபதி, உயிரியல் பன்முகத்தன்மையை பாதுகாப்பதோடு குறித்த செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை துரிதமாக செயற்படுத்துமாறு ஆலோசனை வழங்கினார். அதன்மூலம் பல வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியுமென்றும், பிரச்சினைகளை தீர்த்து நல்லிணக்கத்தை ஏற்படுத்த சிறந்த வழிமுறையாக அமையுமெனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

சட்டதிட்டங்கள் உருவாக்கப்பட வேண்டியது சுற்றாடலை பாதுகாப்பதற்கு மாத்திரமன்றி  மனிதர்களை வாழ வைப்பதை இலக்காகக் கொண்டே என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன, இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பீ.ஜயசுந்தர உள்ளிட்ட அதிகாரிகளும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.  


Add new comment

Or log in with...