பயணத் தடை உள்நோக்கம் கொண்டதா? | தினகரன்


பயணத் தடை உள்நோக்கம் கொண்டதா?

இராணுவத் தளபதியும் பதில் கூட்டுப்படைப் பிரதானியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினர் ஐக்கிய அமெரிக்காவுக்குள் பிரவேசிப்பதற்கு அமெரிக்க அரசாங்கம் பயணத் தடை விதித்துள்ளது. இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் கடந்த 14ஆம் (பெப்ரவரி) திகதி வெளியிடப்பட்டிருக்கின்றது.

நாட்டில் சுமார் 3 தசாப்த காலம் நீடித்து வந்த பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது மனித உரிமை மீறல் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டே இப்பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்காவின் இந்நடவடிக்கைக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு கடும் ஆட்சேபனையும், கண்டனத்தையும் உடனடியாக வெளியிட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எலைனா டெப்லிட்ஸை அமைச்சுக்கு அழைத்து தமது ஆட்சேபனையையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தினார்.

பக்கச்சார்பற்ற விசாரணைகளை மேற்கொள்ளாது இறைமையுள்ள நாடொன்றின் உள்விவகாரம் தொடர்பில் அமெரிக்கா மேற்கொண்டிருக்கும் இந்நடவடிக்கை அங்கீகரிக்க முடியாத ஒன்றென அரசியல் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் மீது 2001.-09.-11 ஆம் திகதி பயங்கரவாதத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அத்தாக்குதலைத் தொடர்ந்து பயங்கரவாதங்களைத் தோற்கடிக்க உலகளாவிய ரீதியில் நடவடிக்கைகள் முன்னெடுக்க வேண்டுமென வலியுறுத்தி அமெரிக்கா ஐக்கிய நாடுகள் சபைக்கு யோசனையொன்றை முன்வைத்தது.

அந்த வலியுறுத்தலின் பின்புலத்தில் கடும் அர்ப்பணிப்புடன் மனிதாபிமான நடவடிக்கையை மேற்கொண்டு 2009 இல் இலங்கை பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. அத்தோடு புலிகள் இயக்கத்தினரின் பிடியில் சிக்குண்டிருந்த மூன்று இலட்சம் மக்கள் மீட்டெடுக்கப்பட்டு அவர்கள் விரைவாக இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வரப்பட்டனர். இதனூடாக உலகில் பயங்கரவாதத்தை ஒழித்த முதல் நாடு என்ற பெருமையை இலங்கை பெற்றுக் கொண்டது.

இப்பயங்கரவாதம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு 10 வருடங்கள் நிறைவுற்ற பின்னர் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் முக்கிய பங்காற்றியவர்களில் ஒருவருக்கு எதிராகத் திடீரென அமெரிக்காவுக்குள் பிரவேசிக்கப் பயணத் தடை கொண்டு வரப்பட்டிருப்பது ஆச்சரியத்துக்குரிய விடயமாகவே நோக்கப்படுகிறது.

2009 இல் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர் 2010 முதல் ஐ. நாவின் இலங்கைக்கான பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டிருந்தார். 2010 முதல் 2015 வரை அமெரிக்காவின் நியூயோர்க் நகரிலுள்ள ஐ. நா தலைமையகத்தில் கடமையாற்றிய இவர், குடியேற்றத்துக்கு எதிரான விசேட கமிட்டியின் இலங்கையின் மாற்றுப் பிரதிநிதியாகவும் ஐ. நா பொதுச் சபையின் 3வது கமிட்டிக்கான இலங்கை ஆலோசகராகவும் பணியாற்றினார். அத்தோடு ஐ.நா அமைதி காக்கும் படைச் செயற்பாடுகளுக்கு இலங்கையின் பங்களிப்பை அதிகரிக்க முன்னின்று உழைத்த இவர், இலங்கை விமானப் படையின் விமானப் பிரிவை அமைதி காக்கும் பணிகளில் உள்ளடக்குதல், மத்திய ஆபிரிக்க குடியரசு மற்றும் தென் சூடானில் ஐ. நா தூதரகங்களுக்கென வைத்தியசாலையொன்றை நிறுவுதல் என்பவற்றுக்காகவும் பங்களித்துள்ளார்.

இவை இவ்வாறிருக்க, ஷவேந்திர சில்வாவின் சிரேஷ்டத்துவத்தைக் கருத்திற் கொண்டு முன்னாள் ஜனாதிபதி அவரை இலங்கையின் இராணுவத் தளபதியாக 2019-.08-.21இல் நியமித்தார். அதன் பின்னர் கூட்டுப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன ஓய்வு பெற்தைத் தொடர்ந்து இராணுவத் தளபதி பதவிக்கு மேலதிகமாக பதில் கூட்டுப்படை பிரதானியாகவும் 2020 ஜனவரியில் இவர் நியமிக்கப்பட்டார்.

இவ்வாறு யுத்தம் முடிவுற்ற பின்னரான கடந்த பத்தாண்டு காலப் பகுதியில் ஐ.நா.விலும், இலங்கையிலும் கடமையாற்றியுள்ள இவருக்கு எதிராக அமெரிக்காவுக்குள் பிரவேசிப்பதற்கு எவ்விதப் பயணத் தடையையும் விதிக்கவில்லை.

அதிலும் 2010 முதலான 5 வருடங்கள் ஐ. நாவில் கடமையாற்றிய போது மாத்திரமல்லாமல் கடந்த ஆட்சிக் காலத்தில் இவர் இராணுவத் தளபதி பதவிக்கு நியமிக்கப்பட்ட போதும் அவருக்கு எதிராக இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.

யுத்தம் முடிவுற்று 10 வருடங்கள் கடந்த நிலையில், இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சிமாற்றத்தைத் தொடர்ந்து இவ்வாறான நடவடிக்கை அமெரிக்கா முன்னெடுத்திருப்பது மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் இது பின்னணியுடன் கூடிய நடவடிக்கை என்பதுதான் அவதானிகளின் கருத்தாக உள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை நிலைபேறான அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்வதற்கான நடவடிக்கைகளைப் பரந்த அடிப்படையில் முன்னெடுத்து வரும் இச்சூழ்நிலையில் அமெரிக்கா மேற்கொண்டிருக்கும் இந்நடவடிக்கை குறித்து பரவலாக சந்தேகங்களும் எழுப்பப்படுகின்றன. இந்நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தும் செயற்பாடாகவே இப்பயணத் தடை நோக்கப்படுகிறது.

ஆனால் அபிவிருத்தியடைந்த முதிர்ச்சியடைந்த நாடானது வளர்முக நாடொன்றை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்ல உதவி ஒத்துழைப்புகளை நல்குவதுதான் நியாயமான காரியமாகும். ஆனால் அமெரிக்கா மேற்கொண்டிருக்கும் இந்நடவடிக்கை இலங்கையின் அபிவிருத்தியில் நெருக்கடிகளை ஏற்படுத்தும் பின்புலத்தைக் கொண்டுள்ளதா? என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

ஆகவே வளர்ச்சியடைந்த நாடு என்ற வகையில் வளர்முகநாடான இலங்கையின் முன்னேற்றத்துக்கு அமெரிக்கா பங்களிக்க முன்வர வேண்டும். அதன் ஓரங்கமாக ஷவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினர் அமெரிக்காவுக்குள் பிரவேசிப்பதற்கான பயணத்தடையை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் அதுவே நாட்டினதும் மக்களினதும் விருப்பதாகவும் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.


Add new comment

Or log in with...