வயதெல்லையை வகுத்து வேதனைப்படுத்த வேண்டாம்!

45 வயதுக்கு மேற்பட்ட பட்டதாரிகள் பலர் தொழிலின்றி உள்ளனர்

நேசன் எம்.பி வேண்டுகோள்

பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு வழங்குவதென்ற அரசாங்கத்தின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது.பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புக்கான வயதெல்லை 45 என்று அறிவிக்கப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கது. ஆனாலும் தொழில்வாய்ப்புக் கோரி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தற்போது 45 வயதைக் கடந்த நிலையில் இருக்கின்றார்கள். எனவே வயதை எல்லைப்படுத்தாமல் 45 வயது என்பதையும் சற்றுக் கடந்து நியமனங்களைக் கொடுத்தால் அவர்களது துயரங்களும் குறையும்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது 7000 கருத்திட்ட உதவியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு நியமனங்கள் வழங்கப்பட்டன. திடீரென அந்நியமனங்கள் நிறுத்தப்பட்டு ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அவற்றை வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் இன்னும் அந்நியமனங்கள் வழங்கப்படவில்லை. எத்தனையோ கனவுகளின் மத்தியில் இந்நியமனத்தைப் பெற்றவர்கள் இன்று ஏமாற்றமடைந்து தொழில் இல்லாமல் கவலையுடன் இருக்கின்றார்கள். எனவே நிறுத்தப்பட்டு இருக்கின்ற அந்தத் தொழில்வாய்ப்பு மீண்டும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அவர்களுக்கான நியமனங்களை மீண்டும் கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது க.பொ.த சாதாரணதரம் சித்தியடையாதவர்களுக்கான ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு என்று ஒரு திட்டம் கொண்டு வரப்பட்டிருக்கின்றது. அதுவும் நல்ல விடயம்தான் ஆனால் க.பொ.த. சாதரண தரம், உயர்தரம் சித்தியடைந்தவர்கள், பட்டம் பெற்றவர்கள் என்றெல்லாம இருக்கின்றார்கள். அவர்களையும் கருத்திற் கொள்ள வேண்டும்.

பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு தொடர்பில் முன்னர் 35 வயதெல்லை இடப்பட்டது. தற்போது அதனை 45ஆக அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது. தொடர் போராட்டங்களில் ஈடுபட்டவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தற்போது 45 வயதைக் கடந்திருக்கின்றார்கள். அவர்களுக்கு இந்த வேலைவாய்ப்பில் சந்தர்ப்பம் கிடைக்காமல் போவது வேதனையானதாகவே இருக்கும். பட்டதாரிகள் எத்தனையோ சிரமத்துக்கு மத்தியில் கல்வி கற்று பட்டம் பெற்றவர்கள். அவர்களுக்கு தொழில் வாய்ப்புக் கொடுக்கப்படாமல் இருப்பதென்பது அவர்கள் மத்தியில் ஒரு வெறுப்புணர்வை ஏற்படுத்துவதாக இருக்கும். எனவே பட்டதாரிகளுக்கான வயதுகளை எல்லைப்படுத்தாமல் 45 வயது என்பதையும் சற்றுக் கடந்து கொடுத்தால் அவர்களது துயரங்களைக் குறைத்துக் கொள்ள முடியும்.

 

துதிமோகன்


Add new comment

Or log in with...