அரைச்சொகுசு பஸ் வண்டிகளுக்கு புதிய சட்டங்கள் | தினகரன்


அரைச்சொகுசு பஸ் வண்டிகளுக்கு புதிய சட்டங்கள்

எதிர்வரும் வாரம் அமைச்சரவையில் பத்திரம்

அரைச்சொகுசு பஸ்களை இரவு 7.00 மணியிலிருந்து மறுநாள் அதிகாலை 6.00 மணி வரை சேவையில் ஈடுபடுத்துவது தொடர்பில், புதிய சட்டத்தைக் கொண்டுவர போக்குவரத்து சேவை முகாமைத்துவம், மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தீர்மானம் எடுத்துள்ளார்.  

இன்று (18) காலை போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பில், இது தொடர்பில் அமைச்சர் தெரிவித்தார்.

குறித்த தீர்மானம் உட்பட அரைச்சொகுசு பஸ் வண்டிகள் மீது விதிக்கப்படவுள்ள மேலும் பல சட்டங்களுடனான அமைச்சரவை பத்திரம், எதிர்வரும் அமைச்சரவையில் முன்வைக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அரைச்சொகுசு பஸ் வண்டிகளை  பகல் வேளையில் முற்றுமுழுதாக இயக்குவதில்லை எனவும், ஒரு பயணத்தின்போது 200 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரத்திற்கு சேவையில் ஈடுபடுத்துதல் போன்ற சட்டங்கள் இதில் உள்ளடங்குகின்றன.

எனினும், அரைச்சொகுசு பஸ் சேவை தொடர்பில் பயணிகளினால் அளித்த முறைப்பாடுகளை கவனத்தில் கொண்டு, அரைச்சொகுசு பஸ் சேவையை முற்றுமுழுதாக தடை செய்வது தொடர்பில் இதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இதனை அடுத்து குறித்த விடயம் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டது.  

இதற்கமைய தற்போது இச்சேவையின் கீழ் 437 பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுகின்றன என்பது தெரியவந்துள்ளது.  
எனவே இச்சேவையை ஒரே நேரத்தில் தடை செய்வது நல்லதல்லவென ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

மேலும் தற்போது சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள  25 அரைச்சொகுசு பஸ் வண்டிகளை குளிரூட்டும் வசதியை மேற்கொண்டு சொகுசு பஸ்களாக சேவையில் ஈடுபடுத்தவும் மேலும் 07 அரைச்சொகுசு பஸ் வண்டிகளை சாதாரண பஸ் வண்டிகளாக இணைத்துக்கொள்ளவும்  இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Add new comment

Or log in with...