844 அரச நிறுவனங்களின் 2018 நிதியாண்டு COPA அறிக்கை பாராளுமன்றில் | தினகரன்

844 அரச நிறுவனங்களின் 2018 நிதியாண்டு COPA அறிக்கை பாராளுமன்றில்

844 அரச நிறுவனங்களின் 2018 நிதியாண்டு COPA அறிக்கை பாராளுமன்றில்-COPA Report Submitted to Parliament

- உயர் செயல்திறன் கொண்ட 110 நிறுவனங்களுக்கு விருதுகள்
- ஜனாதிபதி தலைமையில் பெப். 28 பாராளுமன்றில் வைபவம்

அரச, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள் 844 இனது  2018 ஆம் நிதியாண்டுக்கான அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் (COPA) அறிக்கையை அதன் தலைவர் இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன, இன்று (18) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். குறித்த அறிக்கை 800 பக்கங்களை விட அதிகமானதாகும்.

அரச நிறுவனங்களின் பொது கணக்குகளை பராமரிக்கும் முறைமை, நிதிக் கட்டுப்பாடு மற்றும் செயல்திறன் என்பன கணனி மயப்படுத்தப்பட்ட முறையில் வருடாந்தம் மதிப்பீடு செய்யப்படுவதுடன், அதற்கமைய தயாரிக்கப்பட்ட அறிக்கை குழுவின் தலைவரால் இவ்வாறு சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் செயல்படுத்தப்படும் அரச, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களை மதிப்பீடு செய்யும் இந்த கணனி மயப்படுத்தப்பட்ட வேலைத்திட்டத்துக்கு அமைய, உயர் செயல்திறன் மட்டத்தை அடைந்த சுமார் 110 நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் எதிர்வரும் 28ஆம் திகதி பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது.  

8ஆவது பாராளுமன்றத்தின் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் எண்ணக்கருவுக்கு அமைய அரச நிறுவனங்களின் நிதி மற்றும் செயல்திறனை முறைமைப்படுத்தும் நோக்கில் அரச, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களை மதிப்பீடு செய்யும் கணனி மயப்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் 2015 நிதியாண்டை அடிப்படையாகக் கொண்டு 2016 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த வேலைத்திட்டம் வெற்றிகரமான முறையில் 2015, 2016, 2017 மற்றும் 2018 நிதியாண்டு முதல் தொடர்ந்தும் செயல்படுத்தப்படுகின்றது.   

உயர் செயல்திறன் மட்டத்தை அடைந்த நிறுவனங்களை மதிப்பீடு செய்யும் நோக்கில் இதற்கு முன்னர் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வுகள் முன்னாள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயகர் தலைமையில் இடம்பெற்றது.


Add new comment

Or log in with...