மத்திய அரசுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் | தினகரன்


மத்திய அரசுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்

தில்லியை உலகத் தரமிக்க நகரமாக உருவாக்க மத்திய அரசுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக தில்லியில் மூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்ற அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். மேலும், பிரதமர் நரேந்திர மோடியின் ஆசிகளையும் பெற விரும்புவதாக அவர் கூறினார்.

தில்லி ராம் லீலா மைதானத்தில் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய முதல்வர் கெஜ்ரிவால்; தில்லியை உலகில் அழகான, மிகவும் வளர்ந்த நகரமாக உருவாக்க உங்கள் ஆதரவு தேவை. அனைவருடனும் சேர்ந்து பணியாற்ற விரும்புகிறேன். தேர்தலின் போது பல்வேறு கட்சிகள் இடையே மோதல் இருந்தது. எங்களுக்கு எதிராக கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சிகளை மன்னித்து விட்டோம்.

தேர்தலின்போது நடந்தவற்றை மறக்குமாறு எதிர்க்கட்சிகளை கேட்டுக் கொள்கிறேன். தில்லியின் வளர்ச்சிக்காக அனைத்துக் கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். தில்லியை உலகத் தரமிக்க நகரமாக உருவாக்க மத்திய அரசுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். பதவியேற்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தேன். அவர் வேறு நிகழ்ச்சியில் பங்கேற்றதால் வரமுடியவில்லை என நினைக்கிறேன். தில்லியின் வளர்ச்சிக்காகப் பணியாற்ற எங்களுக்கு அவரது ஆசிகள் வேண்டும் என்றார்.


Add new comment

Or log in with...