சீனாவிலிருந்து மூலப்பொருட்கள் தருவிப்பதில் பெரும் தட்டுப்பாடு | தினகரன்


சீனாவிலிருந்து மூலப்பொருட்கள் தருவிப்பதில் பெரும் தட்டுப்பாடு

12 மருந்துகள் ஏற்றுமதிக்கு தடை

இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகளுக்கான மூலப்பொருட்கள் சீனாவில் இருந்து வராததால் 12 வகை மருந்துகள் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகளுக்கான மூலப்பொருட்கள் பெரும்பாலும் சீனாவில் இருந்து வருகிறது. இவ்வாறு சுமார் 70 சதவீத மூலப்பொருட்கள் அங்கிருந்து வருகின்றன.

சீனாவில் கொரோனா வைரஸ் நோய் தாக்குதல் காரணமாக மருந்து மூலப்பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் பெரும்பாலும் மூடப்பட்டு விட்டன. மேலும் அங்கிருந்து ஏற்றுமதி செய்வதும் நிறுத்தப்பட்டு விட்டது.

இதன் காரணமாக இந்தியாவுக்கு மூலப்பொருட்களை கொண்டுவர முடியவில்லை. தற்போது சீனாவில் கொரோனா வைரஸ் கடுமையாக பாதித்துள்ள ஹுபே, ஷான்டாங் ஆகிய பகுதிகளில் இருந்துதான் 20-லிருந்து 25 சதவீத மூலப்பொருட்கள் வந்து கொண்டிருந்தன. அவை வருவது முற்றிலும் நின்றுவிட்டது.

எனவே இந்திய மருந்து உற்பத்தி தொழிற்சாலைகள் மூலப்பொருள் இல்லாததால் மருந்து உற்பத்தியை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது உற்பத்தி செய்து இருப்பு வைக்கப்பட்டுள்ள மருந்துகள் சுமார் 2 மாதங்களுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது.

அதிலும் சில வகை மருந்துகள் இன்னும் சில நாட்களில் தீர்ந்துவிடும் என்ற நிலை நிலவுகிறது. எனவே அவசர நடவடிக்கையாக என்ன செய்யலாம் என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய அரசு 8 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தது. அவர்கள் ஆய்வு செய்து மத்திய அரசுக்கு அறிக்கை கொடுத்துள்ளனர்.

இந்தியாவில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பல மருந்துகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. அதில் 12 வகை மருந்துகள் ஏற்றுமதியை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லை என்றால் தட்டுப்பாடு ஏற்படும் என அந்த குழு கூறியிருக்கிறது.

இதில் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளாக குளோரோம் பெனிக்கல், நியோம்சின், மெட்ரோனிடேஷில், அலிதுரோமிசின், சிலிடோ அமிசின் மற்றும் விட்டமின் மாத்திரைகளான பி-1, பி-2, பி-6 மருந்துகள் ஆகியவற்றின் ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் பெண்கள் பிரசவ காலத்திலும், மாதவிடாய் காலத்திலும் பயன்படுத்தும் கார்மோன் மாத்திரைகளான புரோகெஸ்ட்ரோன் மருந்துகளின் ஏற்றுமதிக்கும் தடை விதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

உற்பத்தி பாதிப்பால் வலி நிவாரணியாக பயன்படும் புரூபன், காய்ச்சல் தலைவலிக்கு பயன்படுத்தும் பாரசிட்டமால், உயர்ரத்த அழுத்த மருந்தான டெல்மிசார்டான், நோய் எதிர்ப்பு மருந்துகளான சென்டாமைசின்சல்பேட், ஆம்பிசிலின், டிரைஹைட்டேட், சிப்ரோபிளாக்சன் ஹைட்டோ குளோரைடு போன்ற மருந்துகளுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அவை இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது.

மேலும் நீரிழிவு மருந்தான மெட்பார்மின் ஹைட்டோ குளோரைடு மருந்துக்கும் தட்டுப்பாடு ஏற்படும் என்று கூறப்படுகிறது.மருந்து ஏற்றுமதியை நிறுத்தினால் ஓரளவு சமாளிக்க முடியும் என்ற நிலை இருக்கிறது.மருந்து தட்டுப்பாட்டை பயன்படுத்தி வியாபாரிகள் பதுக்கலில் ஈடுபடலாம். இதன் மூலம் செயற்கையாக விலை உயர்வை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கலாம் என்று கருதப்படுகிறது.

இதனால் அத்தியாவசிய பொருள் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தி அனைத்து மாநிலங்களும் இதை கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...