கொரோனா வைரஸ் தொற்றியவர்கள் எண்ணிக்கையில் தொடர்ந்து வீழ்ச்சி

நோய் தாக்கத்திலிருந்து 8 ஆயிரம் பேர் மீட்சி

புதிய கொரோனா வைரஸ் தொற்றிய சம்பவங்கள் கடந்த மூன்று நாட்களாக தொடர்ச்சியாக வீழ்ச்சி கண்டிருப்பதாக சீனா அறிவித்துள்ளது.

கொவிட்–19 என பெயரிடப்பட்டிருக்கும் இந்த வைரஸ் காரணமாக சீனாவெங்கம் நேற்று மேலும் 142 பேர் உயிரிழந்திருப்பதோடு 2009 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்றிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்த வைரஸ் தொற்று குறித்து கணக்கெடுப்பு நடத்தும் முறையில் கடந்த வாரத்தில் சீனா மாற்றம் கொண்டுவந்ததை அடுத்து நோய் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபோதும் அது தொடக்கம் அந்த எண்ணிக்கை படிப்படியாக வீழ்ச்சி கண்டுள்ளது.

இதன்படி சீனாவில் மொத்தம் 68,000 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பதோடு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,665 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவுக்கு வெளியில் சுமார் 30 நாடுகளில் 500க்கும் அதிகமான நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. பிரான்ஸ், ஹொங்கொங், பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பானில் தலா ஒருவர் என நால்வர் உயிரிழந்துள்ளனர்.

இதில் சீன சுற்றுலா பயணி ஒருவரே பிரான்ஸில் உயிரிழந்துள்ளார். இது ஆசியாவுக்கு வெளியில் பதிவான முதல் உயிரிழப்பாக இருந்தது.

கொரோனா வைரஸ் தாக்கம் செலுத்தத் தொடங்கியதை அடுத்து அது பரவுவதைத் தடுப்பதற்கு சீனா நடவடிக்கை எடுத்தது என்று அந்நாட்டின் தேசிய சுகாதார ஆணைக்குழுவின் பேச்சாளர் மி பெங் நேற்று தெரிவித்தார்.

இந்த வைரஸ் தொற்றுக்கு எதிரான சீனாவின் நடவடிக்கையை உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனொம் கெப்ரியேசுஸ் பாராட்டியுள்ளார்.

வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு சீன அரசு மில்லியன் கணக்கான நாட்டு மக்களுக்கு நாளாந்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதில் கொரோனா வைரஸ் மையம் கொண்டிருக்கும் ஹுபெய் மாகாணம் மற்றும் அதன் தலைநகர் வூஹானிலே மக்கள் நடமாட்டத்திற்கு கடும் கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டிருப்பதோடு இந்தப் பிராந்தியம் நாட்டின் ஏனைய பகுதிகளில் இருந்து தொடர்ந்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஹுபெய் மாகாணத்தில் நேற்று முதல் வாகன போக்குவரத்துகளுக்கு தடை கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் பொலிஸ் கார்கள், அம்புலன்ஸ்கள், அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள் அல்லது பொதுச் சேவையுடன் தொடர்புடைய ஏனைய வாகனங்களுக்கு இந்்தத் தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மாகாணத்தில் உள்ள அனைத்து குடிமக்கள் மீதும் வழக்கமான மருத்துவ சோதனைகள் முன்னேடுக்கப்படுவதாகவும் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அரசிடம் இருந்து அனுமதி பெறாமல் நிறுவனங்கள் பணிகளை ஆரம்பிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும் ஹுபெயில் நோய் தொற்றுபவர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாகவும் நோயிலிருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்திப்பதாகவும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை எட்டு ஆயிரத்தை தாண்டி உள்ளது என்றும் ஜெர்மனி சென்றிருக்கும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் ஓர் அங்கமாக தலைநகர் பீஜிங்கிற்கு திரும்பும் அனைவரும் 14 நாள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அதனை மீறுபவர்கள் தண்டனைக்கு உள்ளாவார்கள் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சியாக பயன்படுத்தப்பட்ட நாணயங்களை சேமித்து வைப்பது மற்றும் கிரிமிநாசினி பயன்படுத்தும் நடவடிக்கையை சீன மத்திய வங்கி அறிவித்துள்ளது.

புற ஊதா ஒளி அல்லது அதிக வெப்பநிலையை பயன்படுத்தி யுவான் நாணயத் தாள்களில்் உள்ள கிருமிகளை நீக்கிய பின்பு தனிப்பெட்டிகளில் அடைத்து முத்திரை இட்டு 7 முதல் 14 நாட்கள் தனிமைப்படுத்துவதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. இதேவேளை ஜப்பானின் யோக்கோஹாமா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பலில், புதிய கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 355 ஆக அதிகரித்துள்ளது.

1,219 பேரிடம் இதுவரை சோதனை நடத்தப்பட்டுள்ளது. அவர்களில் 73 பேரிடம் நோய்த்தொற்று அறிகுறி ஏதும் இல்லை என்று ஜப்பானியச் சுகாதார அமைச்சர் கட்சுநோபு காட்டோ தெரிவித்துள்ளார்.

டயமன்ட் பிரின்சஸ் சொகுசுக் கப்பலில் 3,700க்கும் மேற்பட்ட பயணிகளும் ஊழியர்களும் பயணம் செய்தனர். சோதனைக் கருவிகள், ஊழியர்கள், தகுந்த இடம் ஆகிய பற்றாக்குறைகளால் அவர்கள் அனைவரையும் ஜப்பானால் சோதிக்க முடியவில்லை.

கப்பல் தனிமைப்படுத்தப்படும் 14 நாள் காலம், வரும் புதன்கிழமை நிறைவடையும் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் சொகுசுக் கப்பலில் உள்ள தனது குடிமக்களை அழைத்துச் செல்வதற்காக அமெரிக்கா இரண்டு விமானங்களை ஜப்பானுக்கு அனுப்பவுள்ளது.

அந்த சொகுசுக் கப்பலில் அமெரிக்கர்கள் 40 பேர் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. சுகாதாரப் பரிசோதனைகளில் வைரஸ் தொற்று இல்லை என்று உறுதியான பின்னரே விமானத்தில் ஏற அனுமதிக்கப்படுவர். அதன் பின்னர் அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்.


Add new comment

Or log in with...