தமிழ் கட்சிகள் தமிழர்களின் நலன்களை பாதுகாக்க வேண்டும்

தமிழத் தரப்பு அரசியல் கட்சிகள் தத்தம் கட்சிகளுக்கு அப்பால் தமிழர்களின் நலன்களை  பேணிப்பாதுகாக்க வேண்டுமென இலங்கை தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர் எஸ். கணேசமூர்த்தி தெரிவித்தார். 

அவர்  வெள்ளிக்கிழமை (14) ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே இவ்வாறு   தெரிவித்தார். 

தமிழத் தரப்புக் கட்சிகள் யாவுமே தமிழர்கள் மேல் கொண்ட அக்கறையாலேயே தோற்றம்பெற்றன. அவைகள் தமிழர்களின் நலன்களுக்கு குறுக்கே நிற்கக் கூடாது. அரசியலில்  கழுத்தறுப்புக்கள், கதவடைப்புக்கள் தோன்றலாம். இது ஒரு சாதாரண நியதி. இவைகளைத் தாண்டி நாம் தமிழனத்தை நேசிக்க வேண்டும். இனத்தின் நலன்களுக்காய் நாம் நம்மை அர்ப்பணிக்க வேண்டும். இங்கே கட்சி நலன்களும் அவைகளின் எதிர்காலமும் இரண்டாம் பட்சமாகவே இருக்கவேண்டும். 

தமிழ் மக்களின் பாராளுமன்ற பிரதிநிதிகளது எண்ணிக்கையை ஒருபோதும் குறைவடைய விடக்கூடாது.

எண்ணிக்கை குறையுமாயின் அது தமிழ் இனத்தின் அழிவின் விழிம்புக்கு கொண்டு செல்லும். தமிழ்த் தரப்புக் கட்சிகள் தமிழர்களின் வாக்குக்களை சிதறடிக்கக் கூடாது. இந்த நிலையில்  இந்தியா நமது பிரதம மந்திரிக்கு வழங்கிய ஆலோசனையை நாம் உள்வாங்க வேண்டும். இந்தியாவின் நட்பையும் நெருக்கத்தையும் உதறித்தள்ளிவிடலாகாது.

இந்தியா இலங்கைத் தமிழர்களுக்கு காத்திரமான அரசியல் பாதுகாப்பை வழங்க முன்வந்துள்ளதென புதுடில்லிச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆதலால் தமிழத் தரப்பு அரசியல் கட்சிகள் ஒன்று சேர்வதே சாணக்கியமானது. அதை நாம் தோற்றுவிக்க வேண்டும் என்றார்.

புளியந்தீவு குறூப் நிருபர்  


Add new comment

Or log in with...