கடலில் தத்தளித்த கப்பல் தரிக்க கம்போடியா அனுமதி

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பல துறைமுகங்களிலும் அனுமதி மறுக்கப்பட்டு இரு வாரங்களாக கடலில் தத்தளித்து வந்த சொகுசு கப்பல் கரைசேர்வதற்கு கம்போடியாவில் அனுமதி கிடைத்துள்ளது.

எம்.எஸ் வெஸ்டர்டாம் என்ற அந்தக் கப்பல் ஆசியாவில் ஐந்து இடங்களில் திருப்பி அனுப்பப்பட்டது. ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் மற்றொரு சொகுசுக் கப்பலில் 200க்கும் அதிகமானவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டபோதும் இந்தக் கப்பலில் இருக்கும் 2000க்கும் அதிகமான ஊழியர்கள் மற்றும் பயணிகளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.

இந்த சொகுசுக் கப்பல் கடந்த செவ்வாய்க்கிழமை பாங்கொக்கில் கரைசேர முயன்றபோது அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. தாய்லாந்து கடற்படைக் கப்பல் ஒன்று அந்தக் கப்பலை தாய்லாந்து குடாவில் இருந்து வெளியேற்றியது. இதனைத் தொடர்ந்தே அது கம்போடியாவை நோக்கி பயணித்தது. இந்நிலையில் நேற்று இந்தக் கப்பல் துறைமுக நகரான சிஹானுவில்லேவில் நங்கூரமிட்டுள்ளது. துறைமுகத்தில் இறங்குவதற்கு முன், கப்பலின் பயணிகளை கம்போடியச் சுகாதார அதிகாரிகள் தீவிரமாகப் பரிசோதித்தனர். பயணிகளுக்கு வைரஸ்தொற்று இல்லை என்று உறுதிசெய்யப்பட்டது.


Add new comment

Or log in with...