கொரோனா வைரஸினால் சீனாவில் ஒரே நாளில் 242 பேர் உயிரிழப்பு

கொவிட் –19 எனும் புதிய கொரோனா வைரஸ் பாதிப்பினால் சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் கடந்த புதன்கிழமை 242 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸினால் ஒரு நாளில் உயிரிழந்த அதிக எண்ணிக்கை இதுவாகும்.

வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகையும் பாரிய அளவில் அதிகரித்து 14,840 ஆக பதிவாகியுள்ளது.

வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிவதில் ஒரு பரந்த வரையறையை ஹுபெய் மாகாண நிர்வாகம் பயன்படுத்தியதைத் தொடர்ந்தே இந்த எண்ணிக்கையில் பெரும் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

இந்த எண்ணிக்கை வெளியான ஒரு சில மணி நேரங்களில் ஹுபெய் மாகாணத்தின் இரு சிரேஷ்ட அதிகாரிகளை சீனா பணிநீக்கம் செய்துள்ளது.

கடந்த புதன்கிழமை வரை ஹுபெயில் இந்த வைரஸினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை சீரான நிலையில் இருந்து வந்தது. இந்நிலையில் ஒரே நாளில் உயிரிழப்பு எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரித்திருக்கும் நிலையில் புதிய கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,350 ஆக உயர்ந்திருப்பதொடு நோய் தொற்றியவர்கள் கிட்டத்தட்ட 60,000 ஆக அதிகரித்துள்ளனர்.

இந்த நோய்த் தோற்று குறித்து கடந்த காலத்தில் சீனா பரந்த அளவில் ஒடுக்குமுறை நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதான குற்றச்சாட்டுகள் பரவலாக எழுந்திருப்பதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சீனாவில் புதிய கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களில் 80 வீதமானவர்கள் ஹுபெய் மாகாணத்திலேயே உள்ளனர். இதில் மருத்துவ ரீதியில் கண்டறியப்பட்ட சம்பவங்களும் புதிய வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களில் உட்படுத்தபட்டுள்ளனர்.

இதன்படி நியுக்ளிக் அமில பரிசோதனை மூலம் மாத்திரம் நோயை கண்டறிவதற்கு அப்பால், நோய் அறிகுறியை வெளிப்படுத்துபவர்களின் நுரையிரல் பாதிக்கப்பட்டிருப்பது சி.டி ஸ்கேன் மூலம் கண்டறியப்படுவதன் மூலமும் நோய் தொற்றியவர்கள் உறுதி செய்யப்படுகின்றனர்.

புதிதாக உயிரிழந்த 242 பேரில் 135 பேர் இவ்வாறான மருத்துவ ரீதியாக நோய் உறுதி செய்யப்பட்டவர்களாவர். எனவே நோய் தொற்றை கண்டறிவது குறித்த புதிய வரையறை பயன்படுத்தப்படாத பட்சத்தில் ஹுபெயில் கடந்த புதன்கிழமை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 107 ஆகவே இருக்கும்.

இதற்கிடையே, ஹுபெய் மாகாணத்தின் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான ஜியாங் சோலியாங் மாற்றப்பட்டு அந்த இடத்தில் ஷாங்காய் மாகாணத்தின் தலைவரான யிங் யாங் நியமிக்கப்பட்டுள்ளதாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. அதேபோன்று கொரோனா வைரஸ் தாக்குதலின் மையமாக உள்ள வூஹான் நகர கம்யூனிஸ்ட் கட்சி தலைவரும் அப்பதவியில் இருந்து விலக்கப்பட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்குதல் பற்றி உலக சுகாதார நிறுவனம் கூறுகையில், தற்போதைய நிலையில் இந்த வைரஸ் தொற்று எப்போது கட்டுப்படுத்தப்படும் என்று கணிப்பது இயலாது என்று கூறியுள்ளது.

இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் கூறுகையில், “தற்போதைய நிலையில் இந்த தொற்று பரவல் எந்த திசையிலும் செல்லலாம்” என்று எச்சரித்துள்ளார்.

சீனாவுக்கு வெளியில் வைரஸ் தொற்றிய 441 சம்பவங்களில் எட்டு சம்பவங்களிலே நோய் பரவிய மூலத்தை கண்டறிய முடிந்திருப்பதாக உலக சுகாதார அமைப்பின் அவசரநிலைகளுக்கான தலைவர் மைக்கல் ரியான் தெரிவித்துள்ளார்.

“இந்த வைரஸின் தொடக்க, மத்திய அல்லது முடிவு நிலையை குறித்து கணிப்பது இப்போதைக்கு சாத்தியம் இல்லை என்று நான் கருதுகிறேன்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் சீனாவில் இந்தத் தொற்றுநோய் இந்த மாதம் உச்சத்தை பெற்று தணியும் என்று சீனாவின் முன்னணி தொற்றுநோயியல் நிபுணர் சொய் நான்சான் கடந்த செவ்வாய்க்கிழமை கூறியிருந்தார்.

சாத்தியமான நான்கு தடுப்பு மருந்துகளுக்கு நிதியளிக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி செளம்யா சுவாமிநாதன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

“தடுப்பு மருந்தை நாம் கண்டுபிடிப்போம் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அதற்கு சில காலம் எடுக்கும். தடுப்பு மருந்தொன்றை ஒரே இரவில் உருவாக்க முடியது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் டயமன்ட் பிரின்சஸ் கப்பலில் மேலும் 44 பேருக்கு புதிய கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து கப்பலில் வைரஸ் தொற்றியோரின் எண்ணிக்கை 218 ஆக அதிகரித்துள்ளது.

வரும் நாட்களில் மேலும் பல பயணிகளுக்குச் சுகாதாரப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் பரிசோதனைக் கருவிகளுக்குத் தற்போது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

தனியார் நிலையங்களில் சுகாதாரப் பரிசோதனைகளுக்கு அனுமதி வழங்கி, அன்றாடம் 1,000 பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளதாக ஜப்பானிய சுகாதார அமைச்சு தெரிவித்தது.

ஜப்பானின் யோக்கோஹாமா பகுதியில் சொகுசுக் கப்பல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. குறைந்தது 7 நாளுக்கு அது அங்கு இருக்கும்.


Add new comment

Or log in with...