இங்கிலாந்தை வீழ்த்தியது தென்னாபிரிக்க அணி | தினகரன்


இங்கிலாந்தை வீழ்த்தியது தென்னாபிரிக்க அணி

இங்கிலாந்து அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில், தென்னாபிரிக்கா அணி ஒரு ஓட்டத்தால் திரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில், 1-0 என்ற கணக்கில் தென்னாபிரிக்கா அணி முன்னிலை பெற்றுள்ளது.

பபோலோ பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 177 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணி சார்பில், டெம்பா பவுமா 43 ஓட்டங்களையும், குயிண்டன் டி கொக் மற்றும் ராஸ்ஸி வெண்டர் டஸ்ன் ஆகியோர் தலா 31 ஓட்டங்களையும், டேவிட் மில்லர் 16 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். ஸ்மட்ஸ் 20 ஓட்டங்களையும், என்டில் பெலுக்வாயோ 18 ஓட்டங்களையும், டுவைன் பிரிடோரியஸ் 1 ஓட்டத்தினையும், பியூரன் ஹென்ரிக்ஸ் ஓட்டமெதுவும் பெறாத நிலையிலும், டேல் ஸ்டெயின் ஆட்டமிழக்காது 5 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில், கிறிஸ் ஜோர்தான் 2 விக்கெட்டுகளையும், மொயின் அலி, டொம் கர்ரன், மார்க் வுட், ஆடில் ரஷித் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 178 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இங்கிலாந்து அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் தென்னாபிரிக்கா அணி 1 ஓட்டத்தால் திரில் வெற்றியை பதிவு செய்தது.

இங்கிலாந்து அணி, இறுதி ஓவரில் 7 ஓட்டங்கள் பெற வேண்டிய நிலையில் இருந்த போது, தென்னாபிரிக்கா அணி சார்பில், லுங்கி ங்கிடி பந்து வீசினார். மிகவும் சிக்கனமாகவும், அபாரமாகவும் பந்துவீசிய லுங்கி ங்கிடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி 5 ஓட்டங்களை மட்டும் விட்டுக்கொடுத்தார்.

இங்கிலாந்து அணி சார்பில், ஜேஸன் ரோய் 70 ஓட்டங்களையும். ஜோஸ் பட்லர் 15 ஓட்டங்களையும், ஜோனி பேயர்ஸ்டொவ் 23 ஓட்டங்களையும், மோர்கன் 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ஜோ டென்லி 3 ஓட்டங்களையும், பென் ஸ்டோக்ஸ் 4 ஓட்டங்களையும், மொயின் அலி 5 ஓட்டங்களையும், டொம் கர்ரன் 2 ஓட்டங்களையும், கிறிஸ் ஜோர்தான் ஓட்டமெதுவும் பெறாத நிலையிலும், ஆடில் ரஷித் 1 ஓட்டத்தினையும் பெற்றுக்கொண்டனர்.

தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சில், லுங்கி ங்கிடி 3 விக்கெட்டுகளையும், என்டில் பெலுக்வாயோ மற்றும் பியூரன் ஹென்ரிக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், டேல் ஸ்டெயின் 1 விக்கெட்டினையும் சாய்த்தனர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 4 ஓவர்கள் வீசி 30 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்த லுங்கி ங்கிடி தெரிவு செய்யப்பட்டார்.

இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி-20 போட்டி, இன்று டர்பன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.


Add new comment

Or log in with...