ஜெமினிக்கு திருப்பு முனையாகியது மனம் போல் மாங்கல்யம் | தினகரன்


ஜெமினிக்கு திருப்பு முனையாகியது மனம் போல் மாங்கல்யம்

 கதாநாயகன் வேடத்தில் ஜெமினி நடித்த முதல் படம் 1953-ஆம் ஆண்டு வெளியான "பெண்'. இதில் அவர் ஜோடியாக அஞ்சலி தேவி நடித்திருந்தார்.  

 ஜெமினி கணேசனின் சினிமா வாழ்க்கையில் அடுத்த படிக்கட்டாக அமைந்தது 1953-ஆம் ஆண்டின் "மனம்போல மாங்கல்யம்'. இதில் அவர் முதன் முறையாக இரட்டை வேடம் ஏற்று நடித்தார். பெரும் வெற்றியடைந்த இது, அவரது திரை வாழ்க்கையில் மட்டும் அல்லாது, சொந்த வாழ்க்கையிலும் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. இத்திரைப்படத்தின்போதுதான், தன்னுடன் நடித்த, நடிகையர் திலகம் என்று புகழ் பெற்ற சாவித்திரியை மணந்து கொண்டார்.  

 ஜெமினி கணேசனை அதிரடி அக்ஷன் கதாநாயகனாக அறிமுகம் செய்தது அவரது தாய் நிறுவனமான ஜெமினி. "வஞ்சிக் கோட்டை வாலிபன்' திரைப்படம் அவரை ஒரு சாகச நாயகனாகவும் முன் நிறுத்தியது. இப்படத்தின் ஆரம்பக் காட்சிகளில், அவர் கொட்டும் மழைச் சூறாவளியில் கப்பலின் பாய்மரத்தினை ஏற்றும் காட்சி அக்கால கட்டத்தில் புகழ்பெற்ற ஒன்றாக விளங்கியது.  

  ஆரம்ப காலப் படங்களில் அவரது பெயர் ஆர்.கணேஷ் என்றே இடம் பெற்றது. "பராசக்தி' மூலமாக தமிழ்த்திரையுலகில் ஒரு புயலாக உருவெடுத்த சிவாஜி கணேசனும் அப்போது கணேசன் என்றே பெயர். பெயர்க்குழப்பம் ஏற்படுவதை தவிப்பதற்காக, தன் பெயருடன் தான் திரையுலகில் நுழைந்த ஜெமினி நிறுவனத்தின் பெயரை முன்பகுதியில் இணைத்து ஜெமினி கணேசன் ஆனார்.  

 சொந்தமாக ஜெமினி தயாரித்த ஒரே படம் "நான் அவனில்லை' மட்டுமே. இது வசூலில் அவ்வளவாக வெற்றியடையவில்லை. ஆயினும், இதற்காக ஜெமினி கணேசன் ஃபிலிம்ஃபேர் விருது பெற்றார்.  

 ஜெமினி கணேசன் ஏராளமான படங்களில் இரண்டாம் கதாநாயகனாக நடித்துள்ளார்." வீரபாண்டிய கட்டபொம்மன்'," கப்பலோட்டிய தமிழன்' என்ற படங்களின் பெயரை சொன்னதும் அது சிவாஜி படம்தானே என்று சொல்கிறோம். அந்தப் படங்களிலும் முக்கிய வேடத்தில் ஜெமினி நடித்துள்ளார்  

 "காதல் மன்னன்' என்ற பட்டம் மட்டுமல்ல "பிளேபாய்', "மன்மதன்', "​ெசாக்லேட் ​ேபாய்' போன்ற பல பட்டங்களையும் பெற்ற பிற்கால நடிகர்கள் அஜீத், அப்பாஸ், அரவிந்தசாமி, மாதவன் ஏன் கமல்ஹாசனுக்குக்கூட காதல் காட்சிகளில் நடிப்பதில் வழிகாட்டி ஜெமினி கணேசன் மட்டுமே. தமிழ் சினிமாவின் முதல் "சாக்லேட் ​ேபாய்' ஜெமினிதான்.  

 ஒன்பது வேடங்களில் சிவாஜி நடித்த படம் "நவராத்திரி'. எம்.ஜி.ஆர் நடித்த படம் "நவரத்தினம்' . ஜெமினி ஒன்பது வேடத்தில் நடித்துள்ளார் என்பது பெரும்பாலோருக்கு தெரியாத செய்தி. "நான் அவனில்லை' படத்தில் ஒன்பது தோற்றங்களில் ஜெமினி நடித்துள்ளார்.  

 நாதஸ்வர கலைஞராக நடித்த நடிகர்களில் "தில்லானா மோகனாம்பாள்' படத்தில் சிவாஜியின் நடிப்பைத்தான் அனைவரும் கூறுவார்கள். "கொஞ்சும் சலங்கை' படத்தில் காருகுறிச்சி அருணாச்சலம் நாதஸ்வர இசையில் ஜெமினி அற்புதமான முகபாவங்களை காட்டி நடித்துள்ளார் என்பதை நினைத்துப் பார்ப்போம்.  

 ஜெமினிக்கு இந்தி மொழி மிக நன்றாகத தெரியும். 1980-ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் முதல் தொலைக்காட்சித் தொடரான "ஹம்லோக்' சென்னை தொலைக்காட்சி நிலையத்தால் ஒளிபரப்பப்பட்டபோது, அவற்றில் சில நிகழ்வுகளில் ஜெமினி தமிழில் முன் கதைச்சுருக்கம் தொகுத்தளித்தார்.  

 இந்தி நடிகையாக கொடி கட்டிப் பறந்த ரேகாவைத் தவிர ஜெமினி கணேசனின் வாரிசுகள் யாரும் திரையுலகில் புகழ் பெறவில்லை. அவரது மகள் ஜீஜி, ஸ்ரீதர் இயக்கத்தில் கார்த்திக்கின் ஜோடியாக "நினைவெல்லாம் நித்யா' என்னும் திரைப்படத்தில் நடித்தார். இதுவே அவரது முதலும் கடைசியுமான திரைப்படம். பின்னர் மருத்துவக் கல்வி பெற்று எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு உருவாக்குவதில் அவர் பெரும்பங்கு ஆற்றி வருகிறார்.  

 ஜெமினி கணேசன் இயக்கிய ஒரே படம் "இதய மலர்' மட்டுமே. தாமரை மணாளன் இப்படத்தை இணைந்து இயக்கியிருந்தார்.  

 "இதயமலர்' திரைப்படத்தில் "லவ் ஆல்' என்று துவங்கும் ஒரு பாடலை ஜெமினி பாடியிருந்தார். அவர் சொந்தக் குரலில் பாடிய ஒரே பாடல் இதுதான்.  

 ஜெமினி-பாப்ஜி தம்பதிகளுக்கு ரேவதி, கமலா, நாராயணி, ஜெயலட்சுமி ஆகிய 4பெண்கள் பிறந்தனர். இவர்களில் நாராயணி தவிர மற்ற மூன்று பெண்களும் மருத்துவக் கல்லூரியில் படித்து டாக்டர் ஆனார்கள்.  

  ஜெமினி ஸ்டுடியோ தயாரிப்புகளில் நடிக்க வந்த புஷ்பவல்லி ஜெமினி கணேசனை காதலித்து இரண்டாவது மனைவியாக திருமணம் செய்து கொண்டார்.  

  ஜெமினி-புஷ்பவல்லி தம்பதிகளுக்கு ராதா, ரேகா ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. இவர்களில் ரேகா இந்தி திரை உலகில் நுழைந்து உச்சநிலை நடிகை ஆனார்.  

  நடிகை சாவித்திரி "மனம் போல மாங்கல்யம்' என்ற படத்தில் ஜெமினிக்கு ஜோடியாக நடித்தார். இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. ஒரு கோயிலில் சாவித்திரியையும் திருமணம் செய்து கொண்டார்.  

  ஜெமினி- சாவித்திரி தம்பதிக்கு 1958-இல் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு விஜய சாமுண்டீஸ்வரி என்று பெயர் வைக்கப்பட்டது. 1965-இல் இந்த தம்பதிக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு சதீஷ் என்று பெயரிடப்பட்டது.

சதீஷ் இப்போது அமெரிக்காவில் கலிஃபோர்னியா மாநிலத்தில் மென்பொருள் பொறியாளராக இருக்கிறார். மனைவி, குழந்தைகளுடன் அங்கேயே குடியேறி விட்டார்.  

  புகழ் பெற்ற இயக்குநர்களின் முதல் விருப்பத் தேர்வாக ஜெமினி விளங்கினார்.. இத்தகைய இயக்குநர்களில், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், ஸ்ரீதர், கே.பாலச்சந்தர், பீம்சிங் ஆகியோர் அடங்குவர். இத்தகைய இயக்குநர்களுடன் அவர் அளித்த பல படங்கள் காலத்தால் அழியாதவை. கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய "கற்பகம்", "சித்தி', "பணமா பாசமா', "சின்னஞ்சிறு உலகம்' ஆகிய படங்களில் பலதரப்பட்ட வேடங்களை ஏற்று நடித்தவர் ஜெமினி கணேசன். இவற்றில் பலவும் வெற்றிப்படங்களாகும்.  

 புதுமை இயக்குநர் என அறியப்பட்ட ஸ்ரீதர் இயக்குநராக அறிமுகமான" கல்யாணப் பரிசு' திரைப்படத்தின் நாயகன் ஜெமினி கணேசன்தான். அவர் புகழ் பெற்ற இயக்குநரான பின்னும், ஜெமினி கணேசன் நடிப்பில், "மீண்ட சொர்க்கம்', "சுமைதாங்கி' போன்ற பலப் படங்களை இயக்கினார்.  

 இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் மிகவும் விரும்பி இயக்கிய நடிகர்களில் ஜெமினி கணேசன் ஒருவர். "தாமரை நெஞ்சம்', "பூவா தலையா', "இரு கோடுகள்', "வெள்ளி விழா', "புன்னகை', "கண்ணா நலமா', "நான் அவனில்லை' எனப் பல படங்களில் இவர்களின் வெற்றிக் கூட்டணி தொட ர்ந்தது.


Add new comment

Or log in with...