முல்லைத்தீவு மாவட்டத்தில் அழிக்கப்படும் இயற்கை வளங்கள் | தினகரன்


முல்லைத்தீவு மாவட்டத்தில் அழிக்கப்படும் இயற்கை வளங்கள்

முல்லைத்தீவு மாவட்டம் இயற்கை வளங்களை தன்னகத்தே கொண்ட  இயற்கை எழில் கொஞ்சும் ஒரு மாவட்டமாக காணப்படுகிறது.

இங்குள்ள மக்கள் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் முன்னுதாரணமாகத் திகழ்ந்ததன் விளைவாக இலங்கையிலேயே அதிகளவு வனப் பிரதேசத்தை கொண்ட மாவட்டமாக   இந்த மாவட்டம் திகழ்ந்து வருகின்றது.

இயற்கை எழில் கொஞ்சும் பல்வேறு பகுதிகளையும் பல்வேறு இயற்கை வளங்களையும் கொண்ட  முல்லைத்தீவு மாவட்டத்தில் விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்பிடி  ஆகிய தொழில்களை பிரதான ஜீவனோபாய தொழில்களாக கொண்டு  மக்கள் தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள்.

அக்காலத்தில் இயற்கை வளங்கள் நிறைந்த ஒரு பிரதேசமாக இம்மாவட்டம் காணப்பட்டது. 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர் இந்த இயற்கை வளங்களுக்கு ஆபத்து நேர்ந்துள்ளது. குறிப்பாக கடல் வளத்தை பொறுத்தளவில் சட்டவிரோத தொழில்கள், சட்டவிரோத மணல் அகழ்வு என பல்வேறு வகைகளிலும் வளம் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இவை ஒரு புறமிருக்க, முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில் மணல் அகழ்வு ,கிரவல் அகழ்வு மற்றும் கருங்கல் அகழ்வு என இன்னொருபுறம் வளங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.  முல்லைத்தீவு வனப் பகுதிகள் வகைதொகையின்றி அழிக்கப்பட்டு வருகின்றன.

இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கென பல்வேறு திணைக்களங்கள் இருக்கின்ற போதும்,  இயற்கை வளங்களை தேவைகளுக்குப் பெறுவதற்கு  அனுமதி வழங்குவதற்காக பல்வேறு திணைக்களங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டு இந்த வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. சுமார் எழு திணைக்களங்கள் வரை இந்த விடயங்களில் சம்பந்தப்பட்டிருக்கின்ற போதும்  இயற்கைவள அழிப்பு  என்பது முல்லைத்தீவு மாவட்டத்தில் தலைதூக்கியுள்ள விடயமாக இருக்கின்றது.

 குறிப்பாக தற்போது காடழிப்பு  என்பது மிகவும் கட்டுக்கடங்காத வகையில் இடம்பெற்று வருகின்றது. இயற்கை  வளங்களைப் பாதுகாக்க பல்வேறு திணைக்களங்கள் சம்பந்தப்பட்டிருந்தாலும்  அரச அதிகாரிகளின் அசமந்தப் போக்கு, அரசியல் தலைமைகளின் அலட்சியம் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதை தடுத்து நிறுத்த முடியாதுள்ளது.

இவ்வாறான நிலையில் மணல்  அகழ்வு என்கின்ற பெயரில் வனப் பகுதியில் இருக்கின்ற மரங்கள் களவாக அறுக்கப்பட்டு மணல் கொண்டு செல்லும் டிப்பர் வாகனங்களிலும், கிரவல்  அகழ்வு  என்கின்ற பெயரில் வனப்பகுதியில் இருக்கின்ற மரங்கள் களவாக அறுக்கப்பட்டு கிரவல் கொண்டு செல்லும் டிப்பர் வாகனங்களிலும்  கடத்தப்பட்டு வருகின்றன. இது  ஒருபுறம் இருக்க, கிரவல் அகழ்வுக்கென ஒரு புறம், கருங்கல் அகழ்வுக்கென ஒருபுறம் இவ்வாறு காடழிப்பு இடம்பெறும் போது இன்னொரு புறம் இயற்கை சமநிலையை குழப்பும் விதத்தில் காரியங்கள் இடம்பெறுகின்றன.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தை பொறுத்தளவில் பல  ஏக்கரில் தேக்கு  மரங்கள் நாட்டப்பட்டு பல ஆயிரம் ஹெக்டேயர் பரப்பளவில் இந்த தேக்கு மரங்கள் உள்ளன. தேக்கு மரம் என்பது விற்பனை உரிய  ஒரு மரம் என்ற அடிப்படையிலும்  மீள்வனமாக்கல் என்ற  பெயரிலும் குறித்த காலத்தில் இந்த மரங்களை வெட்டாத பட்சத்தில் இவை பாவனைக்கு உதவாததாக போய்விடும் என்ற ஒரு காரணத்தைக் காட்டி  முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மக்களின் தேவைக்கு இந்த மரங்கள் பயன்படாததெனக் கூறி இன்றுவரை முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட தேக்கு மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. அதனோடு இணைந்த சுமார் 100ஏக்கருக்கு  மேற்பட்ட வனப் பகுதி அழிக்கப்பட்டுள்ளது. அந்த அழிவு இன்றும் தொடர்கிறது. இவ்வருடமும் பல ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்படுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.

கடந்த ஆட்சிக் காலத்திலேயே அதிகளவான தேக்கு மரங்கள் இலங்கை மரக் கூட்டுத்தாபனத்தினால்  அறுக்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அப்பால் ஏனைய மாவட்டங்களில் இருக்கின்ற மரக்கூட்டுத்தாபன அலுவலகங்களுக்கு  எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. அவை அங்கே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அந்த சம்பவங்கள் தற்போதைய அரசாங்கத்திலும் இடம்பெறுவது வேதனைக்குரியது.

இவை அழிந்து செல்வதை தடுப்பதற்காக நடவடிக்ைக எடுக்கப்படுவதைக் காணக் கூடியதாக இல்லை. குறிப்பாக இந்த தேக்கு மரங்கள் அழிக்கப்படுவதன் பின்னர் இங்கு மீள்வனமாக்கல் என்ற பெயரில்  நடப்படுகின்ற  மரங்களுக்கு என்ன நடைபெறுகிறது என்பதையும் காணலாம்.

நடப்படுகின்ற  மரங்களிலே அதிகளவானவை மீண்டும் வளர்வதை காணவில்லை. அவ்வாறு இல்லையெனில் அது வளர முற்பட்டாலும் இங்கிருக்கின்ற காட்டுயானைகள் அவற்றை அழித்து வருகின்றன.  முல்லைத்தீவு மாவட்ட மக்களின் கோரிக்கை இந்த வனப் பிரதேசம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதேயாகும். ஆனால் தேக்கு மரம் என்பதை வியாபாரத்திற்கு உரிய ஒரு மரம் என்ற அடிப்படையில்  வனவள திணைக்களத்தினர்  அனுமதி வழங்க, இலங்கை மரக் கூட்டுத்தாபனத்தினர்  அந்த மரங்களை அறுத்து முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அப்பால் பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள அரசமர கூடங்களுக்கு அனுப்பி அதனை விற்பனை செய்து வருகின்றார்கள்.

 இங்கே நடைபெறுகின்ற  பல்வேறு அபிவிருத்திக் குழுக் கூட்டங்களிலும் இவை தொடர்பாக கலந்துரையாடப்பட்டாலும், மக்களுக்கு முன்பாக அரசியல் மேடைகளில் இவை தொடர்பான குரல்கள் ஒலித்தாலும் இந்த செயற்பாடுகள் என்பது தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன.

இவ்வாறான தொடர்ச்சியான இயற்கை வளங்கள் அழிப்பினால் சரியான பருவப்பெயர்ச்சி மழை  கிடைப்பதில்லை. மழைவீழ்ச்சியை நம்பி பிரதான ஜீவனோபாய தொழில்களான விவசாயம், கால்நடை வளர்ப்பு என்பன உள்ளன.  மழை பொய்த்துப் போகும் நிலையில் பல வருடங்களாக தாங்கள் ஏமாற்றம் அடைந்திருப்பதாக மக்கள் கூறுகின்றனர்.எனவே இவ்வாறான நடவடிக்ைககளை  தடுத்து நிறுத்தி முல்லைத்தீவு மாவட்டத்தில்  இயற்கை சமநிலையை பாதுகாப்பதற்கு சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் முன்வர வேண்டும் என்பதே மக்களின்  கோரிக்கையாக இருக்கிறது.

முல்லைத்தீவு_ மாங்குளம் பிரதான வீதியின் இரு பக்கங்களிலும் இருந்த பல ஏக்கர் காணிகளில் தேக்கு  மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டு விட்டன. அதேபோன்று குமுழமுனை,முறிப்பு  பகுதியிலும், அம்பகாமம் பகுதியிலும் பல ஏக்கரில் ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டும் நடவடிக்கை தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இந்த நடவடிக்கைகளை அரசு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் உடனடியாக தடுத்து நிறுத்தி, முல்லைத்தீவு மாவட்டத்தின்  இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

எஸ். தவசீலன்...


Add new comment

Or log in with...