இஸ்ரேலின் நலன்களை முழுமையாக பேணும் ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட மேற்காசிய சமாதானத் திட்டம், இஸ்ரேலியர்கள் நீண்ட காலமாக விரும்பி வந்ததை அவர்களுக்குக் கொடுப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

இந்தத் திட்டத்தை அறிவித்ததன் மூலம் இஸ்ரேலியர்களுக்கும், பலஸ்தீனியர்களுக்கும் இடையிலான தடங்கலுக்கு உள்ளான 'இரு அரசு' பேச்சுவார்த்தைகளைப் புதுப்பிப்பதற்கு ட்ரம்ப் உண்மையில் ஊக்கம் கொடுத்திருக்கிறார். ஆனால் அது, அவரது சொந்த நிபந்தனைகளின் அடிப்படையில்தான்.

முன்னர் இரு அரசு தீர்விற்கு எதிராகப் பேசிய இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு வெள்ளை மாளிகையில் ட்ரம்பிற்கு இருகே நின்ற வண்ணம் அவரது திட்டத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறார். ஆனால் அங்கு பலஸ்தீனியர்கள் பிரசன்னமாகியிருக்கவில்லை.

திட்டம் என்ன?

இஸ்ரேலின் எல்லை, பாலஸ்தீன அகதிகளின் அந்தஸ்து, மேற்கு ஆற்றங்கரையில் யூதக் குடியேற்றங்கள், இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையில் நிலப் பரிமாற்றம், இஸ்ரேலின் பாதுகாப்பு அக்கறைகள், ஜெருசலேம் நகரின் அந்தஸ்து போன்ற சர்ச்சைக்குரிய பிரச்சினைகளில் பெரும்பாலானவற்றைக் கையாள்வதில் ட்ரம்பின் திட்டம் நாட்டம் காட்டுகிறது.

அநேகமாக இந்தப் பிரச்சினைகள் அனைத்திற்கும் இஸ்ரேலின் நிலைப்பாடுகளுக்குச் சாதகமான முறையிலேயே ட்ரம்ப் யோசனைகளை முன்வைத்திருக்கிறார். உதாரணமாக மேற்கு ஆற்றங்கரையிலும், ஜோர்தான் பள்ளத்தாக்கிலும் உள்ள யூதக் குடியேற்றங்களை இணைத்துக் கொள்வதற்கு இஸ்ரேல் அனுமதிக்கப்படும்.

வரலாற்றுப் புகழ் பெற்ற பாலஸ்தீனத்தில் இஸ்ரேலிய அரசு பிரகடனம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து மூண்ட 1948அரபு_ - இஸ்ரேலியப் போரின் போது தங்களது வீடுவாசல்களிலிருந்து வெளியேற நிர்பந்திக்கப்பட்ட பலஸ்தீன அகதிகள் தங்களது சொந்த இடங்களுக்குத் திரும்பி வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். அந்த அகதிகள் எதிர்கால பலஸ்தீன அரசுக்கு வரலாம் அல்லது தாங்கள் தற்பொழுது வாழும் நாடுகளின் சமூகங்களுடன் ஒன்றிணைந்து கொள்ளலாம் அல்லது மத்திய கிழக்குப் பிராந்தியத்திலுள்ள ஏனைய பகுதிகளில் குடியேறலாம்.

பலஸ்தீன அகதிகள் தங்களது சொந்த இடங்களுக்குத் திரும்பி வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். அந்த அகதிகள் எதிர்கால பலஸ்தீன அரசுக்கு வரலாம் அல்லது தாங்கள் தற்பொழுது வாழும் நாடுகளின் சமூகங்களுடன் ஒன்றிணைந்து கொள்ளலாம் அல்லது மத்திய கிழக்குப் பிராந்தியத்திலுள்ள ஏனைய பகுதிகளில் குடியேறலாம்.

மிகவும் சர்ச்சைக்குரிய பிரச்சினையாக விளங்கி வந்திருக்கக் கூடிய ஜெருசலேம் இஸ்ரேலின் 'பிளவுபடாத தலைநகரமாக' இருக்கும் அதேவேளை, பலஸ்தீனம் நகரின் கிழக்குப் பகுதியில் (இஸ்ரேலினால் ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்ட பாதுகாப்பு எல்லைக்கு அப்பால்) அதன் தலைநகரைப் பெற்றுக் கொள்ளலாம்.

இதற்குக் கைமாறாக மேற்கு ஆற்றங்கரையில் மேலும் குடியேற்றங்களைச் செய்யும் நடவடிக்கைகளை இஸ்ரேல் மேலும் நான்கு வருடங்களுக்கு (பேச்சுவார்த்தைகளுக்கான காலகட்டம்) நிறுத்தி வைக்கும். இந்தக் காலகட்டத்தின் போது இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தற்போது செய்திருக்கும் முறைப்பாடுகளை பலஸ்தீன அதிகாரசபை கைவிட்டு மேலும் நடவடிக்கைகள் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் போன்ற 'பயங்கரவாதக் குழுக்களை' ஒடுக்கும் நடவடிக்கைகளையும் இஸ்ரேல் எடுக்க வேண்டும்.

இந்த யோசனைகளை பாலஸ்தீனம் ஏற்றுக் கொண்டால் 10வருடங்களுக்கு 5000கோடி டொலர்கள் முதலீட்டை செய்வதற்கான யோசனையையும் ட்ரம்ப் முன்வைத்திருக்கிறார். இறுதி இணக்கத் தீர்வாக பலஸ்தீனம் தற்போது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிலப் பகுதியையும் விடக் கூடுதலானளவு நிலப்பகுதியைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் எடுக்க முடியும். (ஒஸ்லோ உடன்படிக்கையின்படி மேற்கு ஆற்றங்கரை மூன்றாகப் பிரிக்கப்பட்டது. அவற்றில் ஒரு பிரிவு மாத்திரமே பாலஸ்தீன அதிகாரசபையின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் தற்போது இருக்கிறது).

மேற்கு ஆற்றங்கரையில் மேற்கொள்ளப்பட்ட யூதக் குடியேற்றங்களை இஸ்ரேல் இணைத்துக் கொள்ளும் போது அதற்குப் பிரதியுபகாரமாக சில நிலப்பரிமாற்றத்திற்கான யோசனைகளையும் ட்ரம்பின் திட்டம் முன்வைத்திருக்கிறது. காஸா பள்ளத்தாக்கைப் பெரிதாக்கி ஒரு சுரங்கப் பாதை ஊடாக மேற்கு ஆற்றங்கரையுடன் அதனை இணைப்பதற்கான திட்டமும் முன்வைக்கப்பட்டிருக்கிறது. காஸாவிற்கு நெருக்கமாகவுள்ள இஸ்ரேலின் தென்பகுதியிலுள்ள அரபு நகரங்கள் எதிர்கால பாலஸ்தீன அரசொன்றின் பகுதியாக மாறலாம்.

திட்டம் பயன் தருமா?

கிழக்கு ஜெருசலேமை தலைநகராகக் கொண்டதும் (முஸ்லிம்களினதும், யூதர்களினதும் புனித தலமான 'டெம்பிள் மௌண்ட்' என்றும் அறியப்பட்ட ஹரம் எஷ் - ஷரீப் அமைந்திருக்கும் பழைய நகரம் உள்ளடங்கலாக) 1967எல்லையை (மேற்கு ஆற்றங்கரை மற்றும் காஸா பள்ளத்தாக்கு முழுவதும்) அடிப்படையாகக் கொண்டதுமான சுதந்திரமான, இறையாண்மை மிக்க பாலஸ்தீன அரசொன்றை அமைப்பதே பாலஸ்தீனர்களின் நிலைப்பாடாகும். இந்த நிலைப்பாட்டுக்கு உலக வல்லரசு நாடுகளில் பெரும்பாலானவை ஆதரவாக இருந்து வருகின்றன.

தங்களது சொந்த இடங்களுக்குத் திரும்பி வருவதற்கான பாலஸ்தீனர்களின் உரிமை போன்ற பிரச்சினைகள் இறுதிப் பேச்சுவார்த்தையில் தீர்த்து வைக்கப்பட வேண்டியவையாக இருக்கின்றன.

ஆனால் பாலஸ்தீனர்களின் கோரிக்கைகளைத் தீர்க்கமான முறையில் நிராகரித்திருக்கும் ட்ரம்ப், அவர்கள் மேலும் கூடுதல் விட்டுக்கொடுப்புகளைச் செய்ய வேண்டும் என்று கேட்டிருக்கிறார். ஜெருசலேமையும்.

மேற்கு ஆற்றங்கரையில் சுமார் 30சதவீதமான பகுதியையும் இஸ்ரேலியர்களுக்குக் கொடுப்பதற்கு நாட்டம் காட்டும் அவர், சொந்த இடங்களுக்குத் திரும்புவதற்குப் பாலஸ்தீனர்களுக்கு இருக்கும் உரிமையை நிராகரித்திருக்கிறார். - இவையெல்லாம் நடைமுறையில் இஸ்ரேலினால் சூழப்பட்டிருக்கக்கூடிய பாலஸ்தீன அரசொன்றுக்குத் துண்டாடப்பட்ட இறையாண்மையை விட்டு வைக்கும் நோக்கிலானவையே. இவற்றைப் பெறுவதற்குக் கூட பாலஸ்தீனர்கள் தீவிரவாதக் குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும், இஸ்ரேலினால் சிறையிலடைக்கப்பட்ட அல்லது கொல்லப்பட்டவர்களின் பலஸ்தீனக் குடும்பங்களுக்கு ஆதரவளிப்பதை நிறுத்த வேண்டும். இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு குறித்து சர்வதேச அரங்குகளில் கேள்வி எழுப்புவதைத் தவிர்க்க வேண்டும் என்ற நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன.

மேற்கு ஆற்றங்கரையில் பலஸ்தீன அதிகாரசபையை ஜனாதிபதி மகமுத் அபாஸ் தலைமையிலான பதாஹ் கட்சியே நிர்வகிக்கின்ற அதேவேளை, காஸா பள்ளத்தாக்கு ஹமாஸ் இயக்கத்தினால் நிர்வகிக்கப்படுகிறது.

இவை இரண்டுக்கும் இடையில் கடுமையான பிணக்குகள் இருந்து வருகின்ற போதிலும் ட்ரம்பின் சமாதானத் திட்டத்தை நிராகரிப்பதில் அவை ஒன்றிணைந்திருக்கின்றன. இஸ்லாமிய ஜிஹாத்தும் அந்தத் திட்டத்தை நிராகரித்திருக்கிறது.

பல தசாப்தங்களாக ஆக்கிரமிப்பின் கீழ் வாழும் ஒரு மக்கள் கூட்டத்தின் மத்தியில் ட்ரம்பின் யோசனைகளைக் கொண்டு செல்வது எந்தவொரு பாலஸ்தீன தலைவருக்கும் சிக்கலானதாகவே இருக்கும். ட்ரம்ப் தனது திட்டத்தை வெளியிடுவதற்கு முன்னதாகவே அவர்கள் அதிலடங்கியுள்ள யோசனைகளை நிராகரித்து விட்டார்கள்.

சர்ச்சைக்குரிய ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்திருப்பதுடன், மேற்கு ஆற்றங்கரையிலுள்ள யூதக் குடியேற்றங்கள் இணைக்கப்படுவதையும் ஆதரிக்கின்ற ட்ரம்ப் நிர்வாகம் சமாதான முயற்சிகளுக்குப் பக்கச்சார்பற்ற ஒரு மத்தியஸ்தராக இருக்க முடியாது என்று பலஸ்தீனியர்கள் கூறுகின்றார்கள். ட்ரம்பின் திட்டம் இந்த வாதத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவது போல் தெரிகிறது.

இந்து
(தமிழில்: சேந்தன்)


Add new comment

Or log in with...