வனவிலங்குகளால் ஆக்கிரமிக்கப்படும் தேயிலை மலைகள்! | தினகரன்


வனவிலங்குகளால் ஆக்கிரமிக்கப்படும் தேயிலை மலைகள்!

மனித உயிர்களுக்கு மதிப்பில்லாத ஒரு துறையாக பெருந்தோட்டத் துறை மாறி வருகின்றது. இதுவரை காலமும் வனவிலங்குகளின் அச்சுறுத்தல் என்றாலே நினைவுக்கு வருவது யானைகளின்   படையெடுப்பாகும்.இவற்றைத் தடுத்து கிராமப்புற மக்களுக்கு பாதுகாப்பளிக்க தடுப்பு வேலிகள் அமைக்கப்படுகின்றன. யானைகள் சரணாலயங்களை நோக்கி நகர்த்தப்படுகின்றன.

ஆனால் பெருந்தோட்டத்துறைப் பிரதேசங்களில் சர்வசாதாரணமாக வலம் வரும் ஆபத்தான மிருகங்கள் பற்றி எவருமே அக்கறை காட்டுவதில்லை. சிறுத்தைகள், பன்றிகள், பாம்பினங்கள், குரங்குகள், தேனீ, குளவிகள் தற்போது கரும்புலி என்று பீதியில் தவிக்கின்றார்கள் தோட்டத் தொழிலாளர்கள்.

இன்று இப்பிரச்சினை பரவலாகப் பேசப்படுகின்றது. அண்மையில் பாராளுமன்றத்தில் தாவர வனவிலங்கு பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் சம்பந்தப்பட்ட விவாதம் நடைபெற்றது. இதில்  கலந்து கொண்டு  உரையாற்றிய நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் இவ்விடயம்  குறித்து சுட்டிக்காட்டி இருந்தார்.

யானைகள் கிராமத்துக்கு வருவதே வனவிலங்குகளால் விளையும் அச்சுறுத்தல் என்று பலரும் பேசுகின்றனர். ஆனால் கிராமங்களாகிய தோட்டங்களில் இருந்து தோட்டத் தொழிலாளர்கள் மலைகளுக்கு வேலைக்குச் செல்லும் போது சிறுத்தைப் புலிகள் தாக்குகின்றன. குளவிகள், தேனீக்கள் கொட்டித் தீர்க்கின்றன. இவ்வாறான சம்பவங்கள் தினசரி நிகழ்வுகளாகிக் கொண்டிருக்கின்றன. வனஜீவராசிகளின் பிரவேசத்தால் இம்மக்கள் இரண்டு பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

ஓன்று உயிருக்கான பாதுகாப்பு. அடுத்தது பயிருக்கான பாதுகாப்பு. எனவே வனஜீவராசிகளிடம் இருந்து மக்களையும் பாதுகாக்க வேண்டும்; அவர்களின் விவசாயஉற்பத்தியையும் பாதுகாக்க வேண்டும் என்று அவர் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தார்.

உண்மையில் வனஜீவராசிகள் பெருந்தோட்டப் பிரதேசங்களை முற்றுகையிடக் காரணம் தெளிவானதே. அன்று பாரிய வனாந்தரங்களாக இருந்த நிலப்பரப்பை விளைநிலங்களாக மாற்றியது பெருந்தோட்டச் சமூகமே. இலங்கை பிரித்தானியர் வசமான போது பணப்பயிராக பெருந்தோட்டப் பயிர்ச் செய்கை இனம் காணப்பட்டது.வெற்றுக்காணிகள் சட்டத்தின்படியே அன்றைய ஆட்சியாளர்களிடம் இருந்து பணம் கொடுத்து பெறப்பட்டதாகத் தகவல்கள் உள்ளன.

தவிர, இலங்கையின் பொருளாதார உட்கட்டமைப்பு வசதிகளான போக்குவரத்து, வங்கித் தொழில், காப்புறுதி போன்றன உருவாக பெருந்தோட்டக் கட்டமைப்பின் தோற்றமே காரணமாக அமைந்தது. அதன் நீட்சியாகவே இன்றும் கூட பிரதான பொருளாதாரத் துறைகளில் நான்காவது இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடிந்துள்ளது என்னும் திலகராஜின் வாதம் ஆணித்தரமானதே ஆகும்.

எனவே எழுந்தமானமாக பெருந்தோட்டக் கட்டமைப்பின் விரிவாக்கமே இலங்கையின் இயற்கை வளங்கள் பாதிப்புக்கு காரணமாக இருப்பதாக பேசுபவர்கள் உண்மையைக் குழிதோண்டிப் புதைக்கவே முயல்கின்றார்கள். ஏனெனில் ஆங்கிலேயே கம்பனிகளிடம் இருந்து தேசிய மயமாக்கல் என்னும் கோஷத்தோடு பெருந்தோட்டங்கள் கையேற்கப்பட்டன. அதன் பின்னரான முகாமைத்துவங்கள் அத்துறையைச் சிறுகச் சிறுக சிதைவடையச் செய்ய ஆரம்பித்தன.

அரசியல் ஆதிக்கம், முறையற்ற பாலனம், ஊழல், அக்கறையின்மை, இன முரண் போன்ற காரணங்கள் இத்துறையின் சீர்மையைக் குலைத்தன. காணிகள் துண்டாடப்பட்டன. ஒரு சமூகத்தை மட்டும் முன்னிறுத்தி பகிரப்பட்டன. எஞ்சியவை சரியாக கையாளப்படாமையால் விளைச்சலில் வீழ்ச்சி ஏற்பட்டது. இத்துறையை நம்பியிருக்கும் 5இலட்சம் பேர் (அன்று) வாழ்வியலில் தேக்கத்தை எதிர்நோக்கலாயினர்.

இதன் போதே தோட்டங்களை மீண்டும் தனியார்மயப்படுத்தும் நடவடிக்கை 1992இல் மேற்கொள்ளப்பட்டது. 99வருட நீண்ட கால குத்தகைக்கு விடப்பட்டது. ஆனால் இம்முயற்சி தலைவலிக்குத் தலையணையை மாற்றும் நிலைமையை ஒத்ததானது.  தொடர்ச்சியான வீழ்ச்சியை நோக்கிய பயணத்துக்கு ஆளானது பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை. இன்று இத்துறையை நம்பி எஞ்சியிருப்போர் எண்ணிக்கை ஒன்றைரை இலட்சமாக குறைந்துள்ளது. ஆயிரக்கணக்கான ஹெக்டேயர் காணிகள் கைவிடப்பட்டுள்ளன. மிஞ்சியிருப்பவை தற்போது பற்றைக் காடுகளாக மாறிக் கொண்டிருக்கின்றன. இதன் காரணமாகவே வனவிலங்குகளின் சரணாலயமாக காட்சியளிக்க ஆரம்பித்து விட்டன பெருந்தோட்ட தேயிலை மலைகள்.

இதுவே யதார்த்த நிலைமை. இங்கு வளஅழிப்பு ஏதும் நிகழ்ந்திருக்குமானால் இதுவரை ஆட்சி செய்த அரசாங்கங்களே அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும். இதுவே நியதி. தேயிலைக் காடுகளுக்குள் நுழைந்து தொழில் புரிய அஞ்சியே பல தொழிலாளர்கள் இத்தொழிலைலைக் கைவிட்டு வெளியேறுகின்றனர். வேறு தொழில்களைத் தேடி நகர்ப் புறங்களை நோக்கி இடம்பெயர்கின்றனர்.

தவிர, வேறு வழியின்றி இனியும் தோட்டத் தொழிலை மட்டுமே தஞ்சமெனக் கொண்டிருப்போர் உயிர் அச்சுறுத்தலை எதிர்நோக்கியபடியே தொழில் செய்து வருகின்றனர். சிறுத்தை தாக்குதல், அட்டைக்கடி, பாம்புக்கடி, குளவி, தேனீ கொட்டு என்று இவர்கள் படும்பாடு பரிதாபகரமானது. இவற்றையெல்லாம் சவால்களாக எண்ணியே இவர்கள் காலத்தைக் கடத்த வேண்டியுள்ளது. இதனால் உயிர் ஆபத்துகளும் ஏற்படும் பட்சத்தில் உரிய நிவாரணங்கள் வழங்கப்படுவது கிடையாது.

அச்சுறுத்தல் தரும் விலங்குகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் அது தான் நடப்பது இல்லை குளவி தேனீ கூடுகளை அகற்ற வழிவகைகள்  இருக்கவே செய்கின்றன. இதற்கான பயிற்சி பெற்ற ஊழியர்கள் உள்ளார்கள். தவிர குளவி தேனீ தாக்குதல்களில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள அல்லது தாக்குப் பிடிக்க கவச உடைகளை வழங்கலாம.; ஆனால் இது பற்றி யாருமே கரிசனைக் காட்டுவதாய் இல்லை. குறைந்த பட்சம் தாக்குதல் நிகழும் தருணத்தில் முதலுதவி செய்யும் பயிற்சியையாவது வழங்கி வைக்கலாம்.

இம்மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யவர்கள் எதனையுமே கண்டு கொள்வது இல்லை. இதனால் பெருந்தோட்டக் கம்பனிகள் அலட்டிக் கொள்ளாமலே இருக்கின்றன.

ஒருபுறம் தொழில் செய்வதில் அச்சுறுத்தல், இன்னொரு புறம் விவாய முயற்சிகளுக்கு ஏற்படும் இடையூறு. குறிப்பாக பெருந்தொட்டப் பிரதேசங்களில் கைவசம் உள்ள காணிகளை விவசாயம் செய்வதற்காக பயன்படுத்தி வருகின்றார்கள் மக்கள். சிலர் விவசாயத்தை மட்டுமே மேற்கோண்டுள்ளார்கள். இவர்களின் விவசாயப் பயிர்களை பன்றிகள், குரங்குகள், குழுமாடுகள், காட்டு மாடுகள் துவம்சம் செய்து வருகின்றன. இவைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் பெருகி வருகின்றது.

இந்த விலங்குகள் விவசாயப் பயிர்களை நாசமாக்குகின்றன. விவசாயத்தை மட்டுமே ஜீவனோபாயமாகக் கொண்டிருப்போர் பெரும் பாதிப்படைந்து வருகின்றார்கள். விவசாயத்தை உபவருமானமாக மேற்கோள்வோர் நட்டம் அடைகின்றனர்.

ஒருகாலத்தில் விவசாயத் தேவைகளுக்காக மாடுகள் உதவின. இன்று நவீன தொழில்நுட்பக் கருவிகள் நுழைந்து விட்டன. மாடுகளை கவனிப்பார் இல்லை. அவைகளே கட்டாக்காலி மாடுகளாக திரிகின்றன. இவை  தமது ஆகாரத்துக்காக மரக்கறிப் பயிர்ச் செய்கையை பாழடிக்கின்றன. இது போலவே குரங்குளின் கொட்டமும் உள்ளது. இவற்றைக் கட்டுப்படுத்த சட்டங்கள் ஏதும் இல்லை. இதனால் வனவிலங்கு அதிகாரிகள் வருத்தப்படுவது கிடையாது. இதேவேளை சிறுத்தை, கரும்புலி போன்ற பாதுகாக்கப் படவேண்டிய வனவிலங்குகளுக்கான சட்டங்கள் இருக்கின்றன. இதன் மூலம் இவற்றைப் பாதுகாக்க வனவிலங்கு திணைக்களம் முனைப்புக் காட்டுகின்றது. அதேநேரம் இந்த வனவிலங்குளால் பெருந்தோட்ட மக்களுக்கு ஏற்படும் உயிராபத்து பற்றி உணர்வதாகத் தெரியவில்லை.

முன்னைய ஆட்சிக் காலத்தில் பேராதனை தாவரவியல் பூங்காவுடன் இணைந்து பல்கலைக்கழக பேராசிரியர்களால் சிறுத்தை, குளவிகளைக் கட்டுப்படுத்துவது சம்பந்தமான யோசனைகள் ஆராயப்பட்டன. ஆனால் அடுத்த கட்டம் நோக்கிய நகர்வேதும் இடம்பெறவில்லை என்னும் பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜின் குறைகாணல் அவதானத்துக்குரியது.

வனவிலங்குகளின் நடமாட்டத்தால் மலையகப் பகுதிகளில் பயிர்ச் செய்கைகள் பாதிப்படையும் சூழ்நிலையில், அது பொருளாதார ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறுவதில்லை. எனவே பெருந்தோட்ட மக்களை இந்தச் சிக்கலில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமும் அவசரமும் ஆகும்.

இன்று வனஜீவராசிகளின் தாக்குதல்களினால் உயிரிழப்பு ஏற்படும் பட்சத்தில் உடனடியாக பிரேதப் பெட்டிக்கு நிதி, இழப்புக்கு ஈடு என்று அவசரம் அவசரமாக வழங்குவதோடு தம்பணி முடிந்து விடுவதாக தோட்டக் கம்பனி நிர்வாகங்கள் கருதுகின்றன. இவ்வாறான திடீர் அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்கு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் முக்கியமாகின்றன. தவிர, ஐ.நா.தொழில்சார் உரிமைகள் பற்றி வரைவிலக்கணம் கொண்டுள்ளது. தொழில் நியதிகளின் அடிப்படையில் தொழில்சார் உரிமைகளைப் போல வேலைத்தல பாதுகாப்பும் இன்றியமையாததே ஆகும்.

இதை விடுத்து, தொழிலாளர்கள் தம் முயற்சியினால் பாதுகாப்பு நடைமுறைகள் எதனையுமே பின்பற்ற முடியாதவர்களாகவே இருக்கின்றார்கள். எனவேதான் வனவிலங்குகளின் உறைவிடங்களாக காணப்படும் பிரதேசங்களே இவர்கள் தொழில் செய்ய வேண்டிய தலங்களாக உள்ளன. இதனால் ஆபத்து வரலாம் என்னும் அச்சுறுத்தல் இருந்தாலும் அதுபற்றிக் கவலைப்பட நேரமில்லாமல் அதற்குள் பிரவேசித்தே ஆக வேண்டிய நிர்ப்பந்தம்.

இந்த வனவிலங்குகளால் தொழில் சார்ந்த பிரச்சினகள் எழுகின்றன. மரக்கறி விவசாயம் சார்ந்ததும் அன்றாடம் வருமான வழி தேடலுக்குமான வாய்ப்புகள் அருகி வருகின்றன. இதிலிருந்து பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டியுள்ளது. பெருந்தோட்டத் துறை ஒரு தொழிற்றுறை என்ற வகையில் அவற்றுக்கு நிவாரணமாக காப்புறுதித் திட்டம் ஒன்றை நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும் என்றொரு கோரிக்கையை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளார் திலகராஜ்.எம்.பி.

இதேவேளை வனவிலங்குகளால் மலையகப் பகுதிகளில் பயிர்ச் செய்கைகள் பாதிப்படைகின்றன. மக்களின் பொருளாதாரம் கேள்விக்குறியாகின்றது .இதனால் இச்சமூகத்தின் வாழ்வியல் என்பது அச்சுறுத்தலை எதிர்நோக்குகின்றது. இதிலிருந்து இவர்களை மீட்டெடுப்பதற்கு அரசாங்கம் ஆவன செய்ய வேண்டும். எனவே அரசாங்கத்தின் அவதானத்தை ஈர்ப்பதற்காக கவனயீர்ப்புப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் என்பவற்றை மேற்கொள்வதற்கான வேலைத் திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு முடிவு செய்திருப்பதாக மக்கள் விடுதலை முன்னணி தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு இடம்பெறும் நிலையில் பெருந்தோட்ட மக்களின் சம்பள அதிகரிப்பு விவகாரத்தைப் போல வன ஜீவராசிகளின் அச்சுறுத்தல் சமாச்சாரமும் தேசிய ரீதியில் கவனத்தைப் பெறுவது திண்ணம்.

தியத்தலாவை
பாலசுப்பிரமணியம்...


Add new comment

Or log in with...