காதல் அன்பின் பகிர்தல் | தினகரன்


காதல் அன்பின் பகிர்தல்

காதல் புனிதமானது.காதல் தெய்வீகமானது என்றெல்லாம் காதலை மேன்மைப் படுத்துவது தொன்று தொட்டு இடம்பெற்று வருகிறது.

அந்த வகையில் காதல் உலகம் உருவாகும் போதே உருவாகி ஆதாம் ஏவாளிலிருந்து அதுஆரம்பித்ததாகவும்  கருத முடிகிறது.

 இன்று பெப்ரவரி 14ம் திகதி உலக காதலர் தினமாகும்.

காதலர் தினம் என்றாலே இளைஞர் யுவதிகளின் கற்பனையில் பட்டாம்பூச்சி பறக்கத்தொடங்கிவிடும்.

காதலிப்பவர்கள், காதலுக்கு தூதுவிட்டுக் கொண்டிருப்பவர்கள், ஒருதலையாகக் காதலிப்பவர்கள் என எல்லோருக்குமே இந்த நாள் குதூகலத்தைக் கொடுத்துவிடும்.

 பொம்மைகள், சொக்கலெட்டுகள், மலர்கொத்து, வாழ்த்து அட்டை என காதலர்கள் தங்களுக்குள் வித்தியாசமான ஆச்சரியப் பரிசுகளையும் மனதையும் பரிமாறிக்கொள்வார்கள்.

இப்போதெல்லாம் காதலர் தினம் பார்க், பீச், சினிமா என  காதலர்கள் சுற்றுவதோடு முடிந்துவிடுகிறது. அதுவும் இப்போது காதலர் தினத்துக்கு எதிராக கெடுபிடிகள் இடம்பெறுவதால் காதலர் தினம் வழமையான ஒரு நாளாகவே கழிந்துவிடுகிறது.

எனினும் வெளிநாடுகளில் காதலர் தினத்தை ரசித்துக் கொண்டாடுவோர் உண்டு. உலகில் காதலர் தினத்தை உற்சாகமாகக் கொண்டாடும் நாடுகள் உள்ளன.

 காதலர் தினம் என்றால் சிலர் கல்லூரியிலோ அலுவலகத்திலோ ஒரு பொய்யைச் சொல்லிவிட்டு விடுமுறை எடுத்துக் கொள்வர். ஆனால், டென்மார்க்கில் இப்படிப் பொய் சொல்லத் தேவையில்லை. அங்கு 1990-ம் ஆண்டு முதலே காதலர் தினத்துக்குத் தேசிய விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.

 அன்றைய தினம் காதலன் ‘டேனிஷ் ட்விஸ்ட்’ என்ற பிரபலமான சுவீட்டைத் தன்னுடைய காதலிக்கு பரிசாக வழங்குவார். அதேபோல் பெயர் குறிப்பிடாமல் அனுப்பப்படும் காதலர் தின வாழ்த்து அட்டையில் நகைச்சுவைக் கவிதைகள் எழுதப்பட்டிருக்கும்.

 ஆனால், அதில் காதலனின் பெயர் இருக்காது. வாழ்த்து அட்டையைப் பெற்றுக்ெகாள்ளும்  காதலி தன்னுடைய காதலன் யார் என்பதைச் சரியாகக் கண்டுபிடித்துவிட்டால் ஆண்டின் இறுதியில் காதலிக்கு ஈஸ்டர் முட்டைகளைப் பரிசாக காதலன் வழங்குவார்.

உலகின் காதல் நகரம் என்ற சிறப்பைப் பிரான்ஸ்பெறுகிறது. இந்நாட்டில்தான் முதன் முதலில் காதலர் தின வாழ்த்து அட்டை வெளியானதாகக் குறிப்பிடப்படுகிறது.

இந்த மொபைல் யுகத்திலும் அங்கே காதலர் தின வாழ்த்து அட்டைகள் பரிமாறிக்கொள்வது பிரபலமாக உள்ளது​.

பொதுவாக காதலர் தினத்தைக் காதலிப்பவர்கள் சேர்ந்து அன்றைய தினத்தில் கொண்டாடுவார்கள்.  ஆனால், தென்கொரியாவில் பெப்ரவரி 14ம் திகதி ஆரம்பமாகும் காதலர் தினக் கொண்டாட்டம் ஏப்ரல் 14-ம் திகதி வரை நீடிக்கிறது. முதலில் கொண்டாடப்படும் காதலர் தினத்தன்று பெண்கள் ஆண்களுக்குப் பரிசுகளைக் கொடுத்து மகிழ்வார்கள். அதேபோல் ‘வெள்ளை நாள்’ என்றழைக்கப்படும் மார்ச் 14ம் திகதி யன்று ஆண்கள் தங்களுடைய காதலிக்குப் பரிசுகளை வழங்கி மகிழ்விப்பார்கள்.

ஒருவேளை காதலியோ, காதலனோ இல்லாதவர்களுக்கு ஏப்ரல் 14ம் திகதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந் நாளில் அவர்கள் தங்களுடைய தனிமையை கொண்டாடும் வகையில் கறுப்பு பீன்ஸில் செய்யப்பட்ட நூடுல்ஸை உணவாக எடுத்துகொள்வார்கள். இப்படி பெப்ரவரி 14முதல் ஏப்ரல் 14வரை விதவிதமாகக் கொண்டாடுகிறார்கள்.

 பொதுவாக பெப்ரவரி  14ம் திகதி காதலர் தினமாகக் கொண்டாடப்பட்டாலும் வேல்ஸ், சீனா, பிரேசில் போன்ற நாடுகளில் தங்களுக்கென தனியாகக் காதலர் தினத்தை வைத்துள்ளனர்.

 வேல்ஸ் நாட்டில் சென். ட்வைன்வென் நினைவு நாளான ஜனவரி 25ம் திகதியைக் காதலர் தினமாக கொண்டாடுகின்றார்கள். அந்நாளில் காதலிக்குக் கலை நயத்துடன் மரத்தால் வடிவமைக்கப்பட்ட ஸ்பூனைப் பரிசாக வழங்குவார்கள்.

இந்த காதல் ஸ்பூனை காதலிக்கு வழங்கும் வழக்கம் 17ம் நூற்றாண்டிலிருந்து உள்ளது. இந்தக் காதல் ஸ்பூன் மூன்று விடயங்களைக் குறிக்கிறது.

 குதிரையுடன் வடிவமைக்கப்பட்ட ஸ்பூன் அதிர்ஷ்டத்தையும், சக்கரத்துடன் வடிவமைக்கப்பட்ட ஸ்பூன் காதலன் என்றும் துணையாக இருப்பான் என்பதையும் சாவி போல் வடிவமைக்கப்பட்ட ஸ்பூன் காதலனின் மனதை திறக்கும் என்ற அர்த்தத்தையும் கொண்டிருக்கின்றன.

அதேபோல் சீனர்கள் தங்களுடைய சீன நாட்காட்டியின் அடிப்படையில் சந்திர மாதத்தின் ஏழாவது நாளைக் காதலர் தினமாகக் கொண்டாடுகிறார்கள். ஏனென்றால், சொர்க்கத்தில் உள்ள இளவரசரின் மகளான ஸின்யூ பூமியில் வசித்த ஏழையான நைவ்லங்கைத் திருமணம் செய்துகொள்கிறார். இதைக் கேள்விப்பட்ட சொர்க்க இளவரசர் ஷின்னு மகளைத் தன்னுடன் அழைத்து வந்துவிடுகிறார்.

மனைவியைப் பிரிந்த நைவ்லங் தன் இரண்டு குழந்தைகளுடன் ஸின்யூவை நினைத்து அழுகிறான். இதனால் ஆண்டில் ஒரு நாள் மட்டும் இருவரும் சந்தித்துக்கொள்ள ஷின்னு அனுமதி அளிக்கிறார்.

ஸின்யூ தன் குடும்பத்தினரை நட்சத்திர வடிவில் சந்திர மாதத்தின் ஏழாம் நாள் வந்து சந்திக்கிறாள்.

 அன்றைய தினம் இளம் சீனர்கள் தங்கள் காதலியுடன் கைகோர்த்தபடி வானில் நட்சத்திரங்களாக காட்சிதரும் அவர்களைப் பார்த்தவாறே காதலர் தினத்தைக் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

இங்கிலாந்து பெண்கள் காதலர் தினத்ததன்று தலையணைக்கு அடியில் பிரியாணி இலையை வைத்துக்கொண்டு உறங்குவார்கள். தலையணையின் நான்கு முனைகள், நடுப்பகுதியில் பிரியாணி இலையை வைத்து உறங்கினால் கனவில் எதிர்காலக் கணவர் வருவார் என்பது அவர்களுடைய நம்பிக்கை.

அதேபோன்று வித்தியாசமான பழக்கத்தைக் கொண்டவர்களாக உள்ளனர் இத்தாலியப் பெண்கள்.

அவர்கள் காதலர் தினத்தின்போது விடியற்காலை எழுந்து, அவர்கள் சந்திக்கும் முதல் ஆண் அவர்களின் கணவராக வருவார் என நம்புகிறார்கள்.

அவர்களைப் போல் தென் ஆபிரிக்கா பெண்கள் தங்களுக்குப் பிடித்த ஆணின் பெயரை காதலர் தினத்தின்போது உடையில் எழுதிக்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இவ்வாறு காதலர் தினத்தில் ஐதீகமே காதலால் நிரம்பியுள்ளது. இந்த மாசற்ற தூய்மையான அன்பே மனிதத்தை அடுத்த தளத்துக்குக் கொண்டுசெல்கிறது என்றால் மிகையில்லை. (ஸ)


Add new comment

Or log in with...