"இலங்கையில் எனக்கு கிடைத்த கௌரவம் உலகில் வேறு எங்கும் கிடைக்கவில்லை"

கொழும்பு கம்பன் கழகம் வருடந்தோறும் பிரமாண்டமான வகையில் நடத்தும் கம்பன் விழா இம்முறையும் ஐந்து நாள் நிகழ்வாக வெகு சிறப்பாக நடைபெற்றது.

உள்நாட்டு வெளிநாட்டு அறிஞர்கள் பல்துறை சார்ந்த சான்றோர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டதுடன் அத்தகையச் சான்றோர்களுக்கான கௌரவமும் விருதும் பொற்கிழியும் வழங்கி கம்பன் விழா அவர்களை சிறப்பித்தது.

அந்த வகையில் தமிழ்நாட்டின் பிரபல பின்னணிப் பாடகர் பத்மசிறி எஸ். பி. பாலசுப்பிரமணியம் இந்த விழாவில் சிறப்பு கம்பன் புகழ் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். அவருக்கான கௌரவத்தை பெற்றுக்கொண்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் அவர் உரையாற்றினார்.

 அதன்போது இலங்கையில் தமக்கு கிடைத்த இந்த மாபெரும் மரியாதைக்கு தாம் தலை வணங்குவதாகவும்  இலங்கையில் தமக்குக் கிடைத்த ஆசீர்வாதமும் இத்தகைய கௌரவமும் உலகில் வேறு எங்கும் தனக்குக் கிடைக்கவில்லை என  தெரிவித்தார்.நிகழ்வில் விருது,கௌரவத்தைப் பெற்றுக் கொண்டு அவர் உரையாற்றியபோது.

தாய் தமிழுக்கும் நான் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இக்காலத்தில் என்னோடு வாழ்ந்து கொண்டிருக்கின்ற எனது அன்பு மக்களுக்கும் எனது அன்பான வணக்கம்.

உங்களோடு வாழ்வதற்கு எனக்கு அங்கீகாரம் கொடுத்து இருக்கிறீர்கள் அதுவே பெரும் வரப்பிரசாதம். கம்பன் கழகத்தின் மூலம் எனக்கு வழங்கப்பட்டுள்ள இந்த ஆசீர்வாதமும் விருதும் இதுவரை எனக்கு எங்கும் கிடைக்கவில்லை.

இச் சமயத்தில்  கொழும்பு கம்பன் கழகத்திற்கு என்னை அறிமுகப்படுத்தியது எஸ்.பி முத்துராமன்தான். அவர்களை நான் நன்றியோடு நினைவு கூறுகின்றேன்.

இந்த கம்பன் விழாவில் இந்தளவு நேரமும் உரையாற்றிய பெரியார்கள், அறிஞர்கள்,சான்றோர்கள் சிறந்த இலங்கைத் தமிழில், சங்கத் தமிழில் பேசி உள்ளார்கள். எனது தமிழ் அது போன்றது அல்ல.   இந்த தெய்வீகமான ஆசனத்தில் என்னை உட்கார வைத்துள்ளார்கள். நான் நினைக்கின்றேன் பாடசாலையில் ஒழுங்காக படிக்காத மாணவனை வகுப்பில் பின் வாங்கில் உட்கார வைப்பது போன்றுதான் நான் இதைப் பார்க்கிறேன். இல்லாவிட்டால் இந்த அளவு அறிஞர் பெருமக்கள் மத்தியில் என்னை உட் கார வைத்திருப்பது எவ்வாறு ?

நான் பாடுகின்ற தமிழ் எனது உழைப்புக்காக ஜீவனோபாயத்திற்காக நான் பாடுகின்றேன். எனது பாடல்கள் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி தருகின்றது என்றால் அதற்கு நான் தலை வணங்குகிறேன்.

அந்தப் பெருமை என்னை மட்டும் சாராது எனக்கு பின்னால் பாடகர்கள் இசைக் கலைஞர்கள் பாடலாசிரியர்கள் ஒளிப்பதிவாளர்கள் அதற்கு உயிர் கொடுக்கும் நடிகர்கள் என பெரும் கூட்டமே உள்ளனர். அதற்கெல்லாம் மேலாக எனது பாடல்களை கேட்டு என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கின்ற மக்களுக்கு எனது சிரம் தாழ்ந்த  வணக்கங்கள்.(மிகுதி அடுத்த வாரம்)

-எல். செல்வா


Add new comment

Or log in with...