அநுராதபுரத்தில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது | தினகரன்


அநுராதபுரத்தில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது

சட்டவிரோதமான முறையில் போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் அநுராதபுரம், இசுருமுனிய பகுதியில் நேற்று (12) மாலை இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இசுருமுனிய வாகனத் தரிப்பிடத்திற்கு அருகில் வாகனங்களை சோதனையிட்டுக் கொண்டிருந்த பொலிஸார், சந்தேகத்திற்கிடமான காரொன்றை வழிமறித்துச் சோதனையிட்டனர். இதன்போது போலி நாணயத்தாள்கள் மற்றும் அவர்கள் பயணித்த காருடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து 5,000 ரூபா பெறுமதியான 90 நாணயத்தாள் , 1,000 ரூபா பெறுமதியான 47 நாணயத்தாள் மற்றும் போலி பிளாஸ்டிக் கைத்துப்பாக்கி ஒன்று, CDMA தொலைபேசி ஒன்று, கையடக்கத் தொலைபேசிகள் 02, கத்தி  01 உள்ளிட்டவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

பண்டாரவளை மற்றும் ஹோமாகம பகுதிகளைச் சேர்ந்த 35, 51 வயதுகளையுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை இன்று (13) அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


Add new comment

Or log in with...