தடயவியல் கணக்காய்வு 10,000 இணைப்புப் பக்கங்களைக் கொண்டது

இலங்கை மத்திய வங்கியின் திறைசேரி முறி விநியோகம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தடயவியல் கணக்காய்வின் ஐந்து அறிக்கைள் 10,000 இற்கும் அதிகமான இணைப்புப் பக்கங்களைக் கொண்டிருப்பதாக அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப்) தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார். 

இந்த அறிக்கை தொடர்பில் எதிர்வரும் 18ஆம் 19ஆம் திகதிகளில் நடைபெறவிருக்கும் சபை ஒத்திவைப்பு விவாதத்துக்கு முன்னர் இவைகுறித்து முழுமையான புரிதலை பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொள்வது இலகுவான காரியமாக இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டார். 

இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்படும் திறைசேரிமுறி தொடர்பில் விசாரித்து அறிக்கையிடுவதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மற்றும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் பரிந்துரைகளுக்கு தடயவியல் கணக்காய்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

தடயவியல் கணக்காய்வு தொடர்பில் முதலில் கோப் குழுவில் கலந்துரையாடி இது குறித்து சுருக்கமான அறிக்கையொன்றை தயாரிக்க எதிர்பார்த்திருந்தது. எனினும் பாராளுமன்ற கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டமையால் கோப் குழுவில் இது பற்றி ஆராய முடியாது போனது, என அவர் தெரிவித்தார்.

அத்துடன் தடயவியல் கணக்காய்வு அறிக்கையை கோப் குழுவில் கலந்துரையாட எதிர்பார்த்திருப்பதாகவும் கூறினார்.

இருந்தபோதும், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தலைமை வகிக்கும் அரசாங்க நிதி பற்றிய குழு ஏற்கனவே இவ்விடயத்தை ஆராய்ந்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

 


Add new comment

Or log in with...