கடமை தவறும் கிராமசேவையாளர்களை கண்டுபிடிக்க சுற்றிவளைப்பு

பொதுமக்களின் சேவைகளை நிறைவேற்றாத கிராமசேவையாளர்களை கண்டுபிடிக்க அரச பொது நிர்வாக அமைச்சு விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளது.  

அமைச்சின் விசேட விசாரணை பிரிவில் 40க்கும் அதிகமான அதிகாரிகள் நேற்று முன்தினம் (10) கொழும்பு மாவட்டம் முழுவதுமுள்ள 200 கிராமசேவையாளர்கள் காரியாலயங்களில் சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.  

நேற்று காலை 8.30 மணிக்கு இக்குழுவினர் கொழும்பு மாளிகாவத்தை, கொழும்பு கிழக்கு, மேற்கு கெத்தாரமா உள்ளிட்ட கிராம சேவையாளர்கள் காரியாலயங்களுக்கு சென்ற வேளையில் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள வந்த பொது மக்கள் காத்திருந்ததை கண்டனர். அவர்களில் சிலர் இரண்டு மூன்று மணித்தியாலங்கள் காத்திருந்துள்ளார்கள். ஆனால் கிராம சேவையாளர்கள் தமது காரியாலயங்களுக்கு காலை 9.30 மணிக்கு பின்னரே வந்துள்ளார்கள். சிலர் பத்து, பதினொரு மணிக்கு கூட தமது காரியாலங்களுக்கு சமுகமளித்திருக்கவில்லை.  

இவ்வாறு சரியான நேரத்துக்கு கடமைக்கு வராத பொது மக்களை சிரமத்துக்குள்ளாக்கும் கிராமசேவையாளர்கள் தொடர்பாக அறிக்கைகள் விசாரணை பிரிவு மூலம் அரச நிர்வாக அமைச்சின் செயலாளருக்கு பெற்றுக் கொடுப்பதோடு அதன் பிரகாரம் கடமை தவறிய அதிகாரிகள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்நிலைமையை உடனடியாக தடுக்க வேண்டுமென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முடிவுக்கமைய அரச காரியாலங்களில் சரியான வேவையைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆராயப்பட்டு அதன் கீழ் அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாரச்சியின் ஆலோசனையின் பேரில் கொழும்பு மாவட்டம் முழுவதும் இந்நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. அத்தோடு நாடு பூராவுமுள்ள கிராமசேவையாளர்களின் காரியாலங்களை சுற்றிவளைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.   


Add new comment

Or log in with...