பொதுஜன பெரமுன-, சு.க கூட்டணி பேச்சுவார்த்தை விரைவில் ஆரம்பம்

பிரிந்து செயற்பட்டால் 113 பெறுவது கடினம் இருதரப்பு ஒப்பந்தத்தில் திருத்தம் செய்ய சு.க தயார்

பொதுஜன பெரமுன, சுதந்திரக்கட்சி கூட்டணி தொடர்பில் சுதந்திரக் கட்சிக்கும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பசில் ராஜபக்‌ஷ ஆகியோருக்கிடையில் விரைவில் ​பேச்சுவார்த்தை நடைபெறவிருப்பதாக சுதந்திரக் கட்சியின் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். வெளியிலிருந்து யார் விமர்சித்தாலும் இரு தரப்பும் இணைந்த கூட்டணி உருவாகும் என்று கூறிய அவர், இணைத்தலைமைத்துவம் கூட்டணியின் பெயர் என்பவற்றில் மாற்றம் செய்வது தொடர்பில் ஆட்சேபனை கிடையாது என்றும் கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர், இரு தரப்பும் பிரிந்து செயற்பட்டால் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை பெறுவதில் சிக்கல் ஏற்படும்.

மேலும் கருத்து வௌியிட்ட அவர்,

ஏற்கெனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் இரு தரப்பும் இணைந்த ஸ்ரீலங்கா நிதஹஸ் பொதுஜன கூட்டணிக்கு நிர்வாகிகள் நியமிக்க வேண்டும்.

புதிய கூட்டணியில் தனக்கு பதவி வழங்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒருபோதும் ​கோரவில்லை. ஒப்பந்தம் கைச்சாத்திட்ட போது அவர் ஜனாதிபதியாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார். கோட்டாபய ராஜபக்ஷ வேட்பாளராக இருந்தார். இணைத்தலைமை தொடர்பான யோசனையை பொதுஜன பெரமுனவே முன்வைத்திருந்தது.ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நிலைமை மாறியுள்ளது.கூட்டணி பதவிகள் குறித்து பேசி முடிவு காண முடியும். மாற்றங்கள் செய்ய நாம் தயாராக இருக்கிறோம்.

இருதரப்பு பேச்சுவார்த்தைகள் எப்பொழுது ஆரம்பிப்பது என இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஜனாதிபதியுடன் பேச நேரம் கோரியுள்ளோம்.இது தவிர பிரதமர்,பசில் ராஜபக்ஷ ஆகியோருடனும் கூட்டணி பற்றி பேச இருக்கிறோம்.இதன் போது கூட்டணியின் எதிர்கால செயற்பாடுகள் பற்றி முடிவு செய்யலாம்.

எமக்கு மொட்டு சின்னம் தொடர்பில் பிரச்சினை கிடையாது.அந்த சின்னத்தின் கீழ் போட்டியிடலாம்.ஆனால் புதிய கூட்டணிக்கு புதிய சின்னமொன்று இல்லாமல் போய்விடும்.

ஜனாதிபதி தேர்தலில் உருவாக்கிய சக்தியை பிரிக்க எமக்கு இடமளிக்க முடியாது.பரந்த கூட்டணி மூலமே பெரும்பான்மையான அரசு உருவாகும்.பிரிந்து செயற்பட்டால் 113 ஆசனங்களுக்கு மேல் பெற முடியாத நிலை ஏற்படும்.பலமான பாராளுமன்றமொன்றை ஜனாதிபதிக்கு பெற்றுக் கொடுப்பதை தடுக்க எவருக்கும் இடமளிக்க முடியாது.தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதால் விரைவில் இருதரப்பு பேச்சு ஆரம்பமாகும்.

ஜனாதிபதித் தேர்தலின் போது எம்மை அன்பாக வரவேற்றனர்.பொதுத் தேர்தல் நெருங்குகையில் சிலர் சு.கவை விமர்சிப்பது கவலைக்குரியது. சு.க ஆதரவாளர்கள் தான் இரு தரப்பிலும் பிரிந்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும் என்றும் கூறினார். (பா)

ஷம்ஸ் பாஹிம்


Add new comment

Or log in with...