மாணவர்களை வெயிலில் அதிக நேரம் நிறுத்த வேண்டாம்! | தினகரன்


மாணவர்களை வெயிலில் அதிக நேரம் நிறுத்த வேண்டாம்!

மாணவர்களை வெயிலில் அதிக நேரம் நிறுத்த வேண்டாம்!-Due to the Heat Intense Do not let children in excessive Sweating Exercise

- அதிகம் வியர்வை வெளியேறும் பயிற்சிகளில் ஈடுபடுத்த வேண்டாம்
- குடும்ப சுகாதார பணியகத்தினால் கல்வி அமைச்சிற்கு பரிந்துரை

நிலவும் கடுமையான சூரிய ஒளி மற்றும் வெப்பநிலை கொண்ட வானிலை காரணமாக பாடசாலை மாணவர்களை அதிக நேரம் வெயிலில் நிறுத்த வேண்டாம் எனவும், அதிக வியர்வை வெளியேறும் பயிற்சிகளில் ஈடுபடுத்த வேண்டாம் எனவும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறான அதிக வெப்பம் நிலவும் காலப்பகுதியில், பாடசாலை மட்டத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சின் குடும்ப சுகாதார பணியகத்தினால் கல்வி அமைச்சிற்கு வழங்கப்பட்ட பரிந்துரைகளிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக, கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

எனவே, அதிக வெப்பநிலை காரணமாக, பதற்றம், தசை பிடிப்பு, மயக்கம், இதய நோய், நுரையீரல் நோய் போன்ற நாட்பட்ட நோய்கள் உக்கிரமடைவதோடு, இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளக்கூடிய பிரிவில் சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமையும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இவ்வாறான பிரச்சினைகளிலிருந்து பாடசாலை மாணவர்களைப் பாதுகாக்க பின்வரும் நடவடிக்கைகளை எடுக்குமாறு கல்வியமைச்சு அனைத்து பாடசாலைகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது:

  • அடிக்கடி நீர் அருந்துதல்
  • சீனி அதிகம் கொண்ட பானங்களை தவிர்த்தல்
  • வெளியில் இருக்கும்போது தலையை மறைத்து தொப்பிகளை அணிதல்
  • வெளியில் நடந்து செல்லும்போது குடையை பயன்படுத்துதல்
  • தேவையற்ற வகையில் வெளியில் செல்வதை குறைத்தல்
  • வெளிர் நிற மெல்லிய ஆடைகளை அணிதல்
  • அதிக சூடாக இருக்கும்போது முகம் மற்றும் கைகளுக்கு தண்ணீர் தெளித்தல்
  • நாளின் வெப்பமான நேர இடைவெளியான மு.ப. 11.00 மணி - பி.ப. 3.00 முதல் 3.30 வரை திறந்த வெளியில் அதிக வியர்வை வெளியிடப்படும் உடற்பயிற்சிகளில் ஈடுபடாதிருத்தல் போன்றவற்றை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், பாடசாலை மட்டத்தில்

  • பாடசாலைகளில் போதுமான குடிநீரை வழங்குதல்
  • முடிந்தால் காகித குவளையை எடுத்து வர அறிவுறுத்துதல்
  • குறிப்பாக பாடசாலைகளில் முதலுதவி குழுக்களுக்கு இது தொடர்பில் தெளிவூட்டி, பயிற்சியளித்தல்
  • மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் தெளிவூட்டுதல்
  • சுகாதார பிரச்சினைகளை விரைவாக அடையாளம் கண்டு, முதலுதவியளித்தல்
  • பிரச்சினையான வேளைகளில் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்காக அனுப்புதல்
  • உடல் உலர்வதை தடுத்து குளிர்வாய் இருக்க வகுப்பறைகளில் நீர் கொள்கலன்களை வைத்தல்
  • வகுப்பறையில் காற்றோட்டம் நிலவ கதவுகள், ஜன்னல்களை நன்கு திறந்து வைத்தல்
  • சுகவீனமுற்றுள்ள குழந்தைகள் சுகமடையும் வரை பாடசாலைகளுக்கு அனுப்பாதிருப்பது தொடர்பில் பெற்றோர்களை தெளிவூட்ட நடவடிக்கை எடுத்தல் போன்ற விடயங்களை மேற்கொள்ளுமாறு கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

Add new comment

Or log in with...