ஹோர்மோன்களின் தொழிற்பாடு சீராக இல்லாமைக்கான காரணங்கள் | தினகரன்


ஹோர்மோன்களின் தொழிற்பாடு சீராக இல்லாமைக்கான காரணங்கள்

உடலில் ஹோர்மோன்கள் சீரற்ற நிலையில் காணப்படுமாயின் அதன் விளைவாக உடல், உள மற்றும் உணர்வு ரீதியாகப் பலவிதமான பிரச்சினைகள் வெளிப்படும். அதன் காரணத்தினால் போஷாக்கான உணவு வகைகளை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் இப்பிரச்சினையைத்  தீர்த்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும். அதன் ஊடாக ஹோர்மோன்கள் சீராக இயங்கவும் வழிவகுக்கும்.  

அதன் காரணத்தினால் அன்றாட உணவில் புரதச் சத்தைக் கொண்ட உணவு வகைகளை சேர்த்துக் கொள்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதன் ஊடாக பசியின்மையைத் தவிர்த்துக் கொள்ளலாம். புரதச்சத்தானது பசி உணர்வை சீராக இயங்க வைக்கப் பெரிதும் உதவதோடு ஹோர்மோன் தொழிற்பாட்டுக்கும் பக்க துணையாக அமையும். அதனால் நாளாந்தம் ஒவ்வொரு உணவு வேளையிலும் 20 -, 30கிராம் அளவு புரதச்சத்து உடலுக்குக் கிடைக்கக்கூடிய வகையில் உணவு வேளையை அமைத்துக்கொள்வதே சிறந்ததாகும். அப்போது அதிக பசி ஏற்படவும் மாட்டாது. பசி ஏற்பட்டாலும் அது தொல்லையாகவும் அமையாது.  

மேலும், உடலில் இன்சுலின் அளவு சீராக சுரப்பதற்கு அன்றாடம் உடற்பயிற்சியில் ஈடுபடுவது பெரிதும் பயன்மிக்கதாக இருக்கும். குளுக்கோஸ் மற்றும் அமினோ அமிலங்களை உரிய அளவில் பேணி அவற்றை சக்தியாக மாற்றுவதற்கும் உடற்பயிற்சி பெரிதும் உதவும். இது தொடர்பில் அதிக உடல் பருமன் கொண்ட பெண்கள் சிலரில் 24வாரங்கள் உடற்பயிற்சியில் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளனர். அதன் படி அவர்களது உடலில் இன்சுலின் சுரப்பு சீராக இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. அதாவது உடற்பயிற்சி இன்றி இருக்கும் பெண்களை விடவும் உடற்பயிற்சியில் ஈடுபடும் பெண்களின் உடலில் இன்சுலினின் செயற்பாடு ஒழுங்குமுறையாக இருப்பதும் இவ்வாய்வில் கண்டறியப்பட்டுள்ளது.  

ஆனால் உடல் பருமன் அதிகரிக்கும் போது ஹோர்மோன் தொழிற்பாட்டிலும் சீரின்மை ஏற்படலாம். இன்சுலின் சுரப்பிலும் பாதிப்பு ஏற்பட்டு நீரிழிவும் ஏற்பட முடியும். இவ்வாறான உபாதைகளை தவிர்ப்பதற்கும் உடற்பயிற்சி பெரிதும் உதவ முடியும்.  

இவை இவ்வாறிருக்க, மன அழுத்தத்திற்கான ஹோர்மோன்கள் அதிகம் தூண்டப்படுமாயின் அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாக நேரிடும். இதற்கு இன்றைய பரபரப்பான வாழ்க்கை அமைப்பு பெரிதும் உதவக்கூடியதாகவே உள்ளது. ஆனால் அந்த வாழ்க்கை முறைமையிலிருந்து விடுபடுவதே ஆரோக்கியத்திற்கு உகப்பானதாக அமையும். ஏனெனில் மன அழுத்தத்திற்கான ஹோர்மோன் அதிகம் சுரக்குமாயின் உயர் குருதியழுத்தம், இதய துடிப்பில் சீரற்ற நிலை ஏற்படல், கவலை, பயம் போன்ற பாதிப்புகளும் ஏற்படும். அதனால் பரப்பான வாழ்க்கையமைப்பிலிருந்து வெளியேறி உள அமைதி மிக்க வாழ்க்கை அமைப்பில் ஈடுபடுவதே உடல், உள ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்ககூடியதாக இருக்கும்.  

அதேநேரம் உடல், உள ஆரோக்கியத்திற்கு உகப்பான முறையில் ஹோர்மோன்கள் தொழிற்படவென உணவு பழக்கவழக்கத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய கொழுப்பை உடலில் அதிகரிக்கக்கூடிய உணவு வகைகளை தவிர்த்துக் கொள்வதே நல்லது.  

என்றாலும் சிலர் எந்நேரமும் சாப்பிட்டு கொண்டே இருப்பர். மூன்று வேளை உணவுக்கு மேலதிகமாக இடையிடையே நொறுக்கு தீனி என சாப்பிட்டு கொண்டிருப்பர். இதன் விளைவாக உடல் பருமனாகி ஹோர்மோன்களிலும் மாற்றங்கள் ஏற்படும். குறிப்பாக மிகக் குறைவாக சாப்பிட்டால் போதுமானளவு சத்துகள் உடலுக்கு கிடைக்காமல் போகலாம். அதனால் ஒரு நாளைக்கு 1200 கலோரிகள் கொண்ட சத்தான உணவு வகைகளை சாப்பிட்டால் போதும். அதன் மூலம் உடலுக்கு தேவையான அளவு சக்தி கிடைக்கப்பெறும். அத்தோடு ஹோர்மோன்களின் சீரான தொழிற்பாட்டுக்கு ஏற்ப செயற்பாடுகளை அமைத்துக்கொள்ளவும் தவறக்கூடாது. அதன் மூலம் உடல், உள ஆரோக்கியத்தைப் பேணிக்கொள்ளக்கூடியதாக இருக்கும். 


Add new comment

Or log in with...