பனிக் காலத்தில் தலைதூக்கும் சுவாச நோய்கள் | தினகரன்


பனிக் காலத்தில் தலைதூக்கும் சுவாச நோய்கள்

னிக்காலத்தில் முகம் கொடுக்க நேரிடும் ஆரோக்கியப் பிரச்சினைகளில் ஆஸ்துமா, நாட்பட்ட சுவாசத்தடை நோய் போன்ற சுவாசம் தொடர்பான நோய்கள் முக்கியமானவையாகும். இவை அனேருக்கு பெரும் சிரமத்திற்குரிய உபாதையாக உள்ளன. குறிப்பாக பரம்பரைத்தன்மையும் ஒவ்வாமையும்தான் ஆஸ்துமா ஏற்பட முக்கியக் காரணங்களாக உள்ளன. என்றாலும் பனிக் காலத்தில் ஏற்படும் குளிர்ந்த காற்றும் இந்நோய்க்கு பெரிதும் துணைபுரிகின்றது.  

இந்த ஆஸ்துமாவைத் தூண்டக்கூடிய காரணங்கள் ஆளுக்கு ஆள் வேறுபடலாம். ரோஸ்மில்க், பாதாம்பால் உள்ளிட்ட குளிர்பானங்கள், ஐஸ்கிரீம், சொக்லேட், கேக் போன்ற குளிர்ச்சியான உணவுப் பொருட்களை அடிக்கடி சாப்பிடுதல், தோடம், திராட்சை, எலுமிச்சை போன்ற புளிப்பான பழங்களைச் சாப்பிடுதல், அடிக்கடி தலையில் தண்ணீர் ஊற்றுதல், சாம்பிராணி புகை பிடித்தல் போன்ற பழக்க வழக்கங்களாலும் ஆஸ்துமா ஏற்படலாம்.  

ஒட்டடைத் தூசு உள்ளிட்ட வீட்டுத் தூசுகள், வாகனப் புகை, நுளம்பு விரட்டிகள், வாசனைத் திரவியங்கள், பூக்களின் மகரந்தம், வீட்டு வளர்ப்புப் பிராணிகளின் ரோமம், மன அழுத்தம், காற்றோட்டம் இல்லாத சூழல் போன்றவையும் ஆஸ்துமாவுக்கு துணைபுரியும்.  

இந்நோய்க்கு உள்ளானவர்கள் சுவாசிக்க மிகவும் சிரமப்படுவார்கள். இளைப்பு உண்டாகும். நெஞ்சில் ‘விசில்’ சத்தம் கேட்கும். குறிப்பாக இரவில் இச்சத்தம் அதிகமாக கேட்கும். சிலருக்கு இளைப்பு இருக்காது. பதிலாக, இடைவிடாத இருமல் இருக்கும். இதுவும் ஆஸ்துமா பிரச்சினைதான்.  

ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தவென பல இன்ஹேலர் வகைகள் தற்போது உள்ளன. இவற்றின் உதவியுடன் பாதுகாப்பான மருந்துகளை உறிஞ்சி ஆஸ்துமாவை விரைவாகக் கட்டுப்படுத்தலாம். மூச்சுக்குழாயை உடனே விரிவடைய வைக்கும் மருந்துகளும் ஒவ்வாமையைக் கட்டுப்படுத்தும் மருந்துகளும் கொடுக்கப்படும். அவற்றோடு நெஞ்சில் சளி சேர்ந்திருந்தால் அதற்கும் சிகிச்சை அளிப்பது அவசியம்.  

அதேவேளை ‘நாட்பட்ட சுவாசத்தடை நோய்’ (COPD) என்பதும் சுவாசத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் பிரச்சினைதான். ஆனால் இந்நோய்க்கான காரணம் வேறாகும். குறிப்பாக இந்நோய் பீடி, சிகரெட், சுருட்டு என்பவற்றைப் புகைபிடிப்பதால் மாத்திரமே பெரும்பாலானோருக்கு ஏற்படுகின்றது. இது அடுத்த 20ஆண்டுகளில் உலகில் இரண்டாம் உயிர்க்கொல்லியாக மாறக்கூடிய அளவுக்கு வளர்ச்சி பெற்று வருகின்றது. ஆனாலும், இந்நோயின் தீவிரத்தை இன்னும் மக்கள் அவ்வளவாக அறியாதிருப்பது பெரும் கவலைக்குரிய விடயமாகும்.  

அதேநேரம், புகைபிடித்தல் தவிர்ந்த வேறு பிரச்சினைகளாலும் இந்நோய் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது. குறிப்பாக சிகரெட் புகைப்பவர்கள் வெளியே விடும் புகையை சுவாசிக்கும் (Passive smoking) புகைப்பிடிக்கும் பழக்கமற்றவர்களுக்கும் இந்த நாட்பட்ட சுவாசத்தடை நோய் வரலாம். அத்தோடு கரிப்புகை, விறகடுப்புப் புகை, சாம்பிராணிப் புகை என்று வீட்டில் ஏற்படும் புகையைத் தொடர்ந்து சுவாசிப்பவர்களுக்கும் இப்பாதிப்பு வரலாம். வாகனப் புகை, தொழிற்சாலைப் புகை, இரசாயனப் புகை போன்றவையும் இந்நோயைத் தூண்டலாம்.  

இவ்வாறு புகை நுரையீரலுக்குள் பிரவேசிக்கும் போது அப்புகையில் காணப்படும் நச்சு பதார்த்தங்கள் மூச்சுக்குழாயைப் பாதிக்கின்றன. அதன் விளைவாக மூச்சுக்குழாயில் வீக்கம் ஏற்படலாம். அதனால் சளி சேரலாம். அப்போது மூச்சுக்குழாயின் உட்புறத்தில் அடைப்பு ஏற்பட முடியும். இதன் ஆரம்பநிலையை சாதாரணமாக உணர முடியாது. இது சாதாரண சளி, மூச்சிளைப்பு போன்று தான் இருக்கும். ஆனால் நாட்கள் செல்லச்செல்ல இது சாதாரணக் கட்டத்தைக் கடந்துவிடும். அதன் விளைவாக நிரந்தமாகவே மூச்சுக்குழாய் வீங்கி அழற்சி நிலையை (Chronic bronchitis) அடையும். அப்போது மூச்சுக் குழாய்க்குள் சிறிதுகூடக் காற்று செல்ல முடியாத அளவுக்குச் சளி சேர்ந்து அடைத்துக்கொள்ளும். இச்சளியை வெளியேற்றுவதற்காக இடைவிடாமல் இருமல் வரும். மூச்சுத்திணறலும் ஏற்படும்.  

மேலும், இந்த உபாதைக்கு உள்ளாகியுள்ளவர்களின் நுரையீரலில் உள்ள நுண்ணிய காற்றுப்பைகள் உடைந்து வீங்கிவிடவும் கூடும். இங்குள்ள காற்று வெளியேற முடியாமல் அங்கேயே தங்கிவிடும். நாளடைவில் மொத்த நுரையீரலும் வீங்கிவிடும் (Emphysema). அதனால் சுவாசிக்கும்போது நுரையீரல் விரிந்து கொடுக்கச் சிரமப்படும். நாட்பட்ட நுரையீரல் அழற்சியும் நுரையீரல் வீக்கமும் இணையும் போது சுவாசத்தை மிகவும் சுருக்கிவிடும். இது இப்பாதிப்புக்கு உள்ளாகியுள்ளவர்கள் முகம் கொடுக்கும் மிக மோசமான நிலையாக இருக்கும். அது உயிராபத்தைக்கூட ஏற்படுத்தி விடலாம்.  

என்றாலும் இந்த நாட்பட்ட சுவாசத்தடை நோயும் ஆஸ்துமாவும் ஒன்றல்ல. ஆஸ்துமா பெரும்பாலும் சிறுவயதிலேயே ஏற்படும். ஒவ்வாமை, மூக்கிலிருந்து நீர்வடிதல் போன்ற துணை அறிகுறிகளும் வெளிப்படும். பரம்பரைத் தன்மையும் இதற்கு காரணமாக இருக்கும். இது பயனாளர்களுக்குத் தற்காலிகமாகவே சிரமங்களைக் கொடுக்கும். ஆஸ்துமாவானது நோயாளரின் உடலின் ஏனைய பகுதிகளில் பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை.  

மேலும் நாட்பட்ட சுவாசத்தடை நோய் பெரும்பாலும் நடுத்தர வயதில்தான் ஆரம்பிக்கும். புகைப்பிடிக்கும் பழக்கம்தான் இதற்கு முக்கியக் காரணமாக இருக்கும். இப்பாதிப்பு உள்ளவர்களுக்கு நுரையீரலின் பல பகுதிகள் சீர்செய்ய முடியாத அளவுக்கு செயலிழந்துவிடலாம். அதன் காரணத்தினால் இந்நோயாளர்களுக்கு தினமும் சிகிச்சை அளிக்க வேண்டிய நிலைமை ஏற்படும். ஆஸ்துமா கூட அநேகருக்குக் குணமாக வாய்ப்புள்ளது. ஆனால், நாட்பட்ட சுவாசத்தடை நோயைக் குணப்படுத்த முடியாது. இதனைக் கட்டுப்படுத்தவே முடியும்.  

இந்நோய் காரணமாக நுரையீரல்களுக்குத் தேவையான அளவு ஒட்சிசன் கிடைக்கப்பெறாத போது அல்லது மிகவும் குறைந்த அளவு கிடைக்கின்ற போது, ஏனைய உடல் உறுப்புகளுக்குத் தேவைப்படும் ஒட்சிசனின் அளவு குறைந்துவிடும். இதனால் இதயம், மூளை, சிறுநீரகம், கண், எலும்பு போன்ற உறுப்புகள் பாதிக்கப்படக் கூடிய அச்சுறுத்தல் காணப்படுகின்றன. அத்தோடு மன அழுத்தமும் ஏற்படும்.  

இந்த நாட்பட்ட சுவாசத்தடை நோய்க்கு உள்ளானவர்கள் சின்னச் சின்ன வேலைகளைச் செய்யும்போது கூட சுவாசிக்க சிரமம் ஏற்படும். மூச்சுத்திணறும். அடிக்கடி சளியும் வெளியேறும். நெஞ்சில் இறுகியதுபோன்றிருக்கும். அப்போது நெஞ்சு வலிக்கும். இவ்வறிகுறிகள் இருக்கும்போதே வழக்கமான குருதிப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக மார்பு எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன் எடுத்துப் பார்க்க வேண்டும். நுரையீரலின் செயல்திறனை அறியும்  

பரிசோதனை மிக முக்கியமானது. என்றாலும் மார்பு நோயியல் நிபுணரின் ஆலோசனைப்படி செயற்பட வேண்டும். ஏனெனில் இந்நோயில் பல நிலைகள் உள்ளன. அதனால் அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். நோய் நாட்பட்டுவிட்டால், எந்நேரமும் சளியைத் துப்பிக்கொண்டிருக்கும் நிலை ஏற்படும். சுவாசிக்க மிகவும் சிரமமாக வேண்டும். குறிப்பபாக நெஞ்சை ஒருவர் அமுக்குவதுபோன்று இருக்கும். நடக்கும்போது ஓர் எட்டு வைத்தால்கூட மூச்சு முட்டும். உடற்பயிற்சி செய்தாலும் இப்பிரச்சினை ஏற்படும். இவர்களுக்குக் குளிர்காலத்தில் நெஞ்சில் சளி உறைந்து கட்டியாகிவிடும் என்பதால் மூச்சுத்திணறல் அதிகமாகவே இருக்கும். இந்நோய்க்கு உள்ளாகி இருப்பவர்களால் இரவில் நிம்மதியாக உறங்க முடியாது.  

நாட்பட்ட சுவாசத்தடை நோய்க்கு உள்ளாகி இருப்பவர்களுக்கும் ஆஸ்துமாவுக்கு வழங்கப்படும் அதே சிகிச்சைதான் அளிக்கப்படுகின்றது.

ஆனால் நோயின் தொடக்கத்தில் இது சரிப்படும். நோய் நாட்பட்டுவிட்டால் இவர்கள் நிரந்தரமாகவே இன்ஹேலரைப் பயன்படுத்த வேண்டும். பெரும்பாலும் இவர்களுக்கு ஸ்டீரொய்ட் சிகிச்சையே முக்கியமாகத் தேவைப்படும். சிலருக்கு ஒட்சிசன் வழங்க வேண்டியும் ஏற்படலாம். ஆனால் மருத்துவ ஆலோசனையுடன் செயற்படுவது இன்றியமையாததாகும்.  

ஆகவே இந்நோயைத் தவிர்த்துக் கொள்வதற்காக புகைப்பிடிக்கும் பழக்கத்தை முற்றிலும் கைவிடுவதோடு புகைபிடிப்பவர் வெளியேவிடும் புகையை புகைபிடிக்காதவர் சுவாசிப்பதையும் தவிர்த்துக்கொள்ள வேண்டும். விறகடுப்பு சமையலும் உகந்ததல்ல. அத்தோடு எல்லா சந்தர்ப்பங்களிலும் புகை கலந்த காற்றைச் சுவாசிக்கும் சூழலைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

இது முடியாத சூழ்நிலையில் புகையை விட்டு ஒதுங்கி இருப்பது நல்லது. முகத்திரையைப் பாவிக்கலாம். ஆனால் தினமும் காலையில் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும்.

நல்ல காற்றோட்டம் உள்ள இடங்களில் 30 முதல் 45 நிமிடங்களுக்குத் தினமும் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். நோய் எதிர்ப்பாற்றல் தருகின்ற, புரதம் மிகுந்த உணவைச் சாப்பிட வேண்டும். இவை சுவாசத்தொகுதியொடு சம்பந்தப்பட்ட இந்நோய்களுக்கு உள்ளாகியுள்ளவர்களுக்கு நிவாரணமாக அமையும்.  


Add new comment

Or log in with...