அகமெனும் காதல் உணர்வை அதிகமாக கையாண்ட காதல் மன்னன் | தினகரன்


அகமெனும் காதல் உணர்வை அதிகமாக கையாண்ட காதல் மன்னன்

தமிழர்களின் பொற்காலம் என்று கருதப்படும் சங்ககாலத்தின் சிறப்புகளாக வீரமும் காதலும் புகழ்ந்து பேசப்படுகிறது. இதை புறம், அகம் என்று இலக்கியங்கள் பிரித்துப் பார்க்கின்றன. தமிழ் சினிமாவைப் பொருத்தவரை வீரம் அல்லது புறம் என்று அறியப்படும் வாழ்க்கையில் அன்றாடம் ஏற்படும் பலவிதமான உணர்வுகளை உருவகப்படுத்தி நடித்து புகழ்பெற்ற நடிகர்களாக 20-ஆம் நூற்றாண்டில் எம்ஜிஆர், சிவாஜி இருவரும் விளங்கினார்கள். அவர்களுக்கு நடிகர் திலகம், புரட்சி நடிகர் ஆகிய பட்டங்களை ரசிகர்கள் சூட்டி மகிழ்ந்தனர். ஆனால் அகம் எனப்படும் காதல் என்ற மன உணர்வை அதிகமாகவும், சிறப்பாகவும் வெளிப்படுத்தி நடித்த காரணத்தால் "காதல் மன்னன்" பட்டம் பெற்ற ஒரே நடிகர் ஜெமினி கணேசன் மட்டுமே. அந்த வகையில் ஜெமினி கணேசன் மற்ற அனைத்து நடிகர்களிடம் இல்லாத தனித்துவம் பெறுகிறார்.

ஜெமினி கணேசன் 17.11.1920-இல் பிறந்தார். 

ஜெமினி கணேசனைப் பற்றி அறிந்தும்-அறியாததுமான சில செய்திகள் இதோ:  

* புதுக்கோட்டை அரண்மனையில் பணியாற்றி வந்தவர் ராமசாமி ஐயர். இவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து புலம் பெயர்ந்து புதுக்கோட்டை சமஸ்தானத்தில் குடியேறினார்.  

* ஜெமினிக்கு முதன் முதலில் வைக்கப்பட்ட பெயர் "கணபதி சுப்பிரமணியன் சர்மா'. பின்னர் அது ராமசாமி கணேசன் என்று மாறி இறுதியில் ஜெமினி ஸ்டுடியோவில் பணியாற்றி புகழ்பெற்ற காரணத்தால் ஜெமினி கணேசன் என்று நிலை பெற்றது!  

* அவரது தந்தை ஜெமினிக்கு 10வயது இருக்கும்போது இறந்து விட்டதால் சித்தப்பா வீட்டில் வளர்ந்தார். சித்தப்பா இரண்டாந்தாரமாக திருமணம் செய்து கொண்ட பிராமணரல்லாத பெண்ணின் மகளும் ஜெமினியும் ஒன்றாக வளர்ந்தனர். அந்த பெண்தான் முதன்முதலாக மருத்துவப் படிப்பு முடித்த பெண் மணியான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. பல சமூக சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டவர் முத்துலட்சுமி ரெட்டி.  

* கணேஷ் புதுக்கோட்டை அரசர் கல்லூரியில் பி.எஸ்.சி வேதியியல் படித்து தாம்பரம் கிறிஸ்தவ கல்லூரியில் பணியாற்றி வரும்போதுதான் சினிமாவில் சேர ஆசை ஏற்பட்டு அவரது தூரத்து உறவினரான ஜெமினி அதிபர் எஸ்.எஸ். வாசனிடம் தெரிவித்து ஜெமினி ஸ்டுடியோவில் வேலைக்குச் சேர்ந்தார்.  

* ஜெமினி ஸ்டுடியோவில் கணேசனுக்கு தரப்பட்ட முதல் வேலை இன்றைய கேஸ்டிங் டைரக்டர் எனப்படும் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு வரும் புதுமுகங்களின் திறமைகளை பரிசோதித்து குறிப்பு எழுதித் தரும் வேலைதான்.  

* அவரிடம் வாய்ப்பு கேட்டு வந்து பின்னாளில் புகழ்பெற்ற நடிகர் நடிகைகளில் சிவாஜி கணேசன், எஸ். வி.ரங்காராவ், சாவித்திரி போன்றோர் அடங்குவர். ஜெமினி ஸ்டுடியோவில் வாய்ப்பு கேட்டு போகும்போது சிவாஜிக்கு பெயர் வி.சி. கணேசன் மட்டுமே. சிவாஜிக்கு மேக்கப் டெஸ்ட் எடுத்துப் பார்த்துவிட்டு "இந்த பையனின் கண்ணும் முகமும் அபாரமாக இருக்கிறது. நிச்சயம் ஒரு நல்ல நடிகராக இவர் விளங்குவார்', என்று கம்பெனிக்கு குறிப்பு எழுதி வைத்தார் ஜெமினி. சிவாஜியே இதை ஒருமுறை வெளிப்படையாக சொல்லி இருக்கிறார்.  

* இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.  

* தமிழில் மட்டுமே 97படங்களில் நடித்துள்ள இவரின் முதல் படம் "மிஸ் மாலினி' (1947). 1950களில் தொடங்கி 60-வரை அதிகபட்சமாக 41திரைப்படங்களிலும், 60-களில் 30படங்களிலும் நடித்துள்ளார். அவர் கடைசியாக தமிழில் நடித்த படம் "அவ்வை சண்முகி'(1996).  

* ஜெமினி கணேசனுக்கு இந்திய அரசு ஒரு தபால்தலையும் வெளியிட்டு சிறப்பித்தது. தபால் தலையினை 2006-ஆம் ஆண்டுஅன்றைய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் சென்னையில் நடைபெற்ற விழாவில் வெளியிட்டார். ஐந்து ரூபாய் நாணயப் பிரிவில் வெளியான இந்தத் தபால் தலையினை ஜெமினி கணேசனின் புதல்விகள் கமலா செல்வராஜ், ரேவதி சுவாமிநாதன் பெற்றுக் கொண்டார்கள்.  

* வைஜெயந்திமாலா, ஹேமமாலினி, ஸ்ரீதேவி ஆகிய தமிழ் நடிகைகள் உச்ச நடிகையாக வெற்றிக்கொடி நாட்டிய பொலிவுட் திரையுலகில் தமிழ் நடிகர்களை வரவேற்றதில்லை. ஜெமினி கணேசனும் இதற்கு விதிவிலக்கல்ல. இதர மொழிகளுடன் ஒப்பிடுகையில் இந்தியில் பங்களிப்பு மிகக்  குறைவே.  

* அடுத்த வளர்ச்சியாக 1952-இல் வெளியான "தாயுள்ளம்' என்ற படத்தில் வில்லன் வேடத்தில் நடித்தார். அப்படத்தின் கதாநாயகன் ஆர்.எஸ்.மனோகர். கதாநாயகி எம்.வி.ராஜம்மா. பிற்காலத்தில் ஆர்.எஸ்.மனோகர் வில்லன் ஆகவும் ஜெமினி கதாநாயகன் ஆகவும் நிலைபெற்று விட்டனர்.  

* "தாய் உள்ளம்' படத்திற்கு அடுத்த படியாக ஜெமினி கணேசன் வில்லனாக நடித்த ஒரே ஒரு படம் மொடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பான "வல்லவனுக்கு வல்லவன்'. இதில் ஜெமினி கணேசன் இறுதியில் வில்லனாக வெளிப்படுகிறார்.(தொடரும்)

 


Add new comment

Or log in with...