மீள் அபிப்பிராயம் பெறலின் முக்கியத்துவம் | தினகரன்


மீள் அபிப்பிராயம் பெறலின் முக்கியத்துவம்

அண்மைக் காலமாக நோயாளர்களிடம் ‘மீள் அபிப்பராயம் பெறுதல்’ என்னும் சொல்லாடல் பிரபலமாகி வருகிறது. எந்தவொரு உடல்நலப் பிரச்சினைக்கும் முதலில் ‘குடும்ப மருத்துவரிடம்’ சிகிச்சை பெற்றுக்கொள்வதற்கு மாறாக ‘சிறப்பு மருத்துவரிடம்’ நேரடியாகச் சிகிச்சை பெற்றுக்கொள்ளும் வழிமுறைக்கு மக்கள் மாறிய பின்னர், பல நேரங்களில் ஒரு மருத்துவர் கூறும் ஆலோசனையை அப்படியே அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. ஊடகங்கள் வழி அவர்கள் தெரிந்து வைத்திருப்பதையும் இணையதளங்களில் தேடித் தெரிந்து கொண்டதையும் ஒப்பிட்டுப் பார்க்கின்றனர். சந்தேகமோ குழப்பமோ ஏற்படும்போது முதலில் தெரிவிக்கப்பட்ட ஆலோசனை சரியா தவறா என்பதைத் தெரிந்துகொள்ள மற்றொரு மருத்துவரிடம் கருத்துக் கேட்க விரும்புகின்றனர். 

இப்படி ‘இரண்டாம் மருத்துவ ஆலோசனை’ கேட்க வேண்டியது அவசியமா? 

‘மருத்துவம் வணிகமாகி வருகிறது. மருத்துவத்தில் கவனக்குறைவு’ போன்ற புகார்கள் அதிகரித்துவரும் காலம் இது. ஏனெனில் போலி மருத்துவர்கள் கிராமங்களில் மட்டுமல்லாமல் நகரங்களிலும் சிகிச்சை அளிக்கிறார்கள். 

தனியார் மருத்துவமனை, அரசு மருத்துவமனை என வேறுபாடு இல்லாமல் மருத்துவப் பரிசோதனை முடிவுகளும் சிகிச்சை முறைகளில் மனிதத் தவறுகளும் அதிகரித்து வருகின்றன. இம்மாதிரியான சூழலில் இரண்டாம் மருத்துவ ஆலோசனை கேட்க வேண்டியது அவசியமே! 

அதேநேரம் சளி, இருமல், காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற சாதாரணப் பிரச்சினைகளுக்கு வெளிப்படையாக விளக்கம் கொடுத்து, மருத்துவ நெறிகளின்படி சிகிச்சை அளிக்கும் ஒரு பொதுநல மருத்துவரிடமோ (எம்.பி.பி.எஸ்.), பொது மருத்துவரிடமோ (எம்.டி.) சிகிச்சை பெறும்போது இரண்டாம் ஆலோசனை தேவைப்படாது. 

வித்தியாசமான, குழப்பமான, கடுமையான சிக்கல் கொண்ட நோய்களுக்கு சிகிச்சை எடுக்கும்போது நோய் நீடிக்குமானால் அல்லது அறுவை சிகிச்சை தேவைப்படுமானால் சிறப்பு மருத்துவரிடம் இரண்டாம் மருத்துவ ஆலோசனை கேட்பதற்குப் பயனாளிக்கு உரிமை உள்ளது. 

இரண்டாம் மருத்துவ

ஆலோசனையின் தேவை  

நீடிக்கும் காசநோய், புற்றுநோய், எயிட்ஸ் நோய், மாரடைப்பு போன்ற இதயம் தொடர்பான நோய்கள், நாட்பட்ட சுவாசத்தடை போன்ற சுவாச நோய்கள், வலிப்பு நோய் உள்ளிட்ட மூளை நரம்பு நோய்கள், மூளையில் கட்டி, குருதி அடைப்பு, குருதிக்குழாய் வெடிப்பு, குருதி உறைவு, கட்டுப்படாத உயர் குருதி அழுத்தம், கட்டுப்படாத நீரிழிவு, அவற்றால் ஏற்படும் இதயம், மூளை, கண், நரம்பு, சிறுநீரகம் போன்ற உறுப்புப் பிரச்சினைகள், எலும்பு, தசை நோய்கள், ஹோர்மோன் பிரச்சினைகள், பிரசவத்தில் சிக்கல்கள், கருப்பை நோய்கள், நீண்ட காலம் சிகிச்சை தேவைப்படும் குழந்தைகள். பெண்கள், பெரியவர்களின் நோய்கள், பிறவி ஊன நோய்கள், நாட்பட்ட மனநோய்கள், மது அடிமை போன்றவற்றுக்கு முதலில் ஒரு மருத்துவரிடம் சிகிச்சை பெறும்போது அதில் திருப்தி இல்லை என்றால் இரண்டாம் மருத்துவ ஆலோசனை பெற்று சிகிச்சை பெறுவது நல்லது. 

தேவைப்படும் காலம் 

குறிப்பாக இரண்டாம் மருத்து ஆலோசனை, மருத்துவர்கள் அறுவை சிகிச்சையைப் பரிந்துரைக்கும்போது, உறுப்பு மாற்று சிகிச்சை தேவைப்படும் போது, உயிருக்கு ஆபத்தான நோய்கள் தாக்கும்போது, ‘இந்த நோயைச் சரி செய்ய முடியாது. சிகிச்சை தேவையில்லை’ என்று கூறும்போது, ‘நிரந்தரத் தீர்வு இல்லை. நோய் நீடிக்கவே செய்யும்’ என்னும்போது, தொடர்ந்து மாத்திரை, மருந்துகளைச் சாப்பிட வேண்டிய நிலைமை ஏற்படும்போது, வித்தியாசமான சிகிச்சைக்கோ நவீன சிகிச்சைக்கோ பரிந்துரை செய்யப்படும்போது, அதிக செலவு பிடிக்கும் நோய் என்று சொல்லும்போது, மாற்று மருத்துவத்துக்கு மாறும்போது, மருத்துவரீதியாகக் குழப்பங்கள் ஏற்படும்போது இப்படிப் பல சந்தர்ப்பங்களில் இரண்டாம் மருத்துவ ஆலோசனையை பெற்றுக்கொள்ளலாம். 

இவை தவிர பயனாளிக்கு இதயநோய், புற்றுநோய், எயிட்ஸ் நோய் போன்றவை இருப்பதைச் சொன்னதுமே அவருக்கு மனத்துக்குள் அச்சம் படர ஆரம்பிக்கும். மன அழுத்தம் ஏற்படும். எதிர்காலம் குறித்த பயம் வந்து சேரும். அப்போது பயனாளி தனக்கு சிகிச்சை எடுத்தும் பலனில்லை. அதனால் சிகிச்சை தேவையில்லை என்ற முடிவுக்கு வர வாய்ப்புண்டு. இன்னும் சொல்லப்போனால் சிலர் தற்கொலை எண்ணத்துக்கும் ஆட்படுவதுண்டு. அம்மாதிரி நேரத்தில் அந்த நோய் குறித்த சிறப்பு மருத்துவரிடம் இரண்டாம் மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்வதே நல்லது. 

இன்றைய நவீன வாழ்வியல் முறைகளால் நாளுக்கு நாள் புதுவித நோய்கள் வருவது ஒருபுறமிருக்க, நவீன அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியால் ஆபத்தான நோய்களையும் எளிதாக எதிர்கொள்ள உதவும் நவீனப் பரிசோதனை முறைகளும் சிகிச்சைகளும் வந்துகொண்டே இருக்கின்றன. எனவே, பொது மருத்துவர்கள் உடனுக்குடன் அறிந்திராத அல்லது பயன்படுத்த முடியாத புதுவித சிகிச்சை முறைகளைச் சிறப்பு மருத்துவர்கள் பயன்படுத்தலாம். அந்த வழியில் பயனாளிக்குப் பலன் கிடைக்கலாம். அவ்வாறான சந்தர்ப்பங்களில் இரண்டாம் மருத்துவ ஆலோசனையைக் பெறுவது பலனளிக்கும். 

ஆலோசனை பெறப் பொறுத்தமானவர் 

பயனாளிக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சினை தொடர்பான சிறப்பு மருத்துவரிடம் (டி.எம்/எம்.சி.ஹெச்) இரண்டாம் மருத்துவ ஆலோசனை கோருவது நல்லது. திறன் கொண்ட சரியான மருத்துவரைத் தேர்வுசெய்ய வேண்டியது மிக முக்கியம். 

அவர் அறம் சார்ந்த மருத்துவராகவும் அனுபவம் மிகுந்தவராகவும் இருப்பின் இன்னும் நல்லது. பயனாளியுடன் பேசுவதற்கு அதிக நேரம் ஒதுக்கும் மருத்துவர் என்றால் மிக மிக நல்லது. அடுத்து, ஒரு நோய்க்கான சிகிச்சை பல வழிகளில் தரப்படலாம். 

நவீன சிகிச்சைகள் வந்திருக்கலாம். அவற்றை முழுவதுமாகத் தெரிந்து கொண்டிருக்கும் மருத்துவரால்தான் காலத்துக்கு ஏற்ற சரியான சிகிச்சையைத் தர முடியும். இம்மாதிரியான மருத்துவர்களிடம் இரண்டாம் மருத்துவ ஆலோசனையைக் கேட்டுக்கொள்ளலாம். 

ஆலோசனை பெறும் முறை 

குறிப்பிட்ட நோய்ப்பிரிவு சார்ந்த சிறப்பு மருத்துவரிடம் இரண்டாம் மருத்துவ ஆலோசனையைக் கேட்க வேண்டும். சரியான சிறப்பு மருத்துவரைத் தெரிவு செய்வதற்குக் குடும்ப மருத்துவரின் வழிகாட்டுதல்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும். பயனாளிகள் தாங்களாகவே சிறப்பு மருத்துவரை அணுகுவதைவிட இந்த வழியில் செல்லும்போது அவர்களுக்கு மிகச் சரியான மருத்துவமும் கூடுதல் கவனமும் கிடைக்க வாய்ப்புண்டு. 

சிறப்பு மருத்துவரிடம் இரண்டாம் ஆலோசனை கேட்கும்போது, முதலில் பார்த்த மருத்துவரின் முடிவு சரியா, தவறா என்பதையும், அவர் கொடுக்கும் சிகிச்சையைவிட வேறு சிறந்த சிகிச்சை அதற்கு உள்ளதா என்பதையும் தெளிவாகக் கேட்டுக்கொள்ள வேண்டும். 

தாம் தெரிவு செய்த சிறப்பு மருத்துவரிடம் பயனாளியின் நோயும் பரிசோதனை விவரங்களும் உறுதிசெய்யப்பட்டு விட்டன என்றால் அதில் நம்பிக்கை வைத்து சிகிச்சையைத் தொடர வேண்டும். சிகிச்சை அளிக்கும் மருத்துவரின் மீதும் மருத்துவமுறை மீதும் நம்பிக்கை வைத்தால்தான் எந்தவொரு சிகிச்சையும் வெற்றி அடையும். நம்பிக்கையும் இல்லாமல் சிகிச்சையையும் தொடராமல் மருத்துவர்களை மட்டும் மாற்றிக்கொண்டே இருந்தால் பயனாளிக்குக் குழப்பங்கள்தான் மிஞ்சும்; இழப்புகளும் ஏற்படலாம்.

 


Add new comment

Or log in with...