உலகை அச்சுறுத்தும் புது வைரஸ்

லகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் சீனாவில் இனங்காணப்பட்ட கொரோனாவைரஸின் தாக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வர சீன நாட்டின் அதிகாரிகளும் மருத்துவர்களும் பெரும் முயற்சி எடுத்து வருகின்றனர். 

2019கரோனா வைரஸ் தாக்குதலின் பிறப்பிடம் எனக் கருதப்படும், சீனாவின் உஹான் நகருக்குள் நுழையவும், வெளியேறவும் சீனா தடை விதித்துள்ளது. அந்நகருக்கான ரயில், விமானம், பேருந்து, ஃபெர்ரி என அனைத்துப் போக்குவரத்து சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன. 

இந்த உயிர்க்கொல்லி வைரஸின் தாக்குதலுக்குள்ளான முதல் நோயாளர் அமெரிக்காவில் கண்டறியப்பட்டதாகக் கடந்த செவ்வாய் அன்று அமெரிக்க சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சியாட்டில் நகரைச் சேர்ந்த, 30வயதுக்கு உட்பட்ட அந்த மனிதர் சமீபத்தில் உஹான் நகருக்குச் சென்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவில், எல்லா விமான நிலையங்களும் உச்சகட்ட எச்சரிக்கை நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன. சீனாவிலிருந்துவரும் பயணிகள் அனைவரும் பரிசோதனைக்குப் பின்னரே நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவர் என இந்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், விலங்குகளிடமிருந்தே பரவும் என அறியப்பட்ட அந்த வைரஸ், மனிதர்களின் மூலமாகவும் பரவுவதாக சீன அறிவியலாளர்கள் உறுதிசெய்துள்ளனர். 

மர்மக் காய்ச்சலின் வரலாறு 

உலகம் முழுவதும் வரலாற்றில் தொற்றுநோய்களும் மர்மக் காய்ச்சல்களும் மனித இனத்தைக் கொத்து கொத்தாகக் காவு கொண்டுள்ளன. அவற்றுக்கான மருந்துகளைக் கண்டுபிடிக்கும் முன்னே ஏகப்பட்ட மக்கள் அந்நோய்களுக்குப் பலியாகியுள்ளனர் என்பது தான் வரலாறு. 1918இல் தோற்றம் பெற்ற மர்மக் காய்ச்சலுக்கு உலகம் முழுவதும் ஐந்து கோடிப் பேர் பலியாயினர். அந்தப் பாதிப்புகளின் வடுக்கள் மனித இனத்தின் மீது நீங்காத தழும்புகளாகியுள்ளன. 

போலியோ, சின்னம்மை இன்னும் பல நோய்களை முற்றிலும் அழிக்க அறுபது ஆண்டுகள் ஆயின. பல மர்மக் காய்ச்சல்களுக்கு மருந்துகளைக் கண்டுபிடிக்க பல்வேறு நாடுகளும் இன்றும் போராடுகின்றன. எதிர்காலத்திலும் பெயர் தெரியாத மர்மக் காய்ச்சலால் உலகம் முழுவதும் சுமார் மூன்று கோடிப் பேர் ஆறு மாதத்துக்குள் பலியாவார்கள் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.   வரலாற்று அனுபவங்களின்படி புதிய வைரஸ் நோய்கள் உருவாகி உலகம் முழுவதும் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன. அந்த வகையில் ஆண்டுதோறும் மக்களைக் காவு கொள்ளும் பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், நிபா வைரஸ், டெங்கு காய்ச்சல் போன்றவை இக்கூற்றை உறுதி செய்கின்றன. 

கொரோனாவைரஸ்  

கொரோனாஎன்பது மிகப் பெரிய வைரஸ் குடும்பமாகும். சீனாவை 2002-ல் தாக்கிய சார்ஸ் நோயும் இந்த கொரோனாவைரஸ் மூலம்தான் ஏற்பட்டது. இந்த வைரஸ் குடும்பத்தில் இதுவரை மொத்தம் 6வைரஸ்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. தற்போது சீனாவைத் தாக்கிவரும், இப்புதிய வைரஸ், கொரோனாவைரஸ் குடும்பத்தின் 7-ம் வைரஸாகும். இவ்வைரஸ் சீனாவின் உஹான் பகுதியில் இருக்கும் மீன் சந்தையில் இது உருவாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது, ஆயினும் அது உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், முறையான பராமரிப்பின்மையைக் காரணமாக அம்மீன் சந்தைக்கு சீன நாட்டு சுகாதாரத் துறையினால் சீல் வைக்கப்பட்டுள்ளது. 

பாதிப்புகள்  

ஒருவர் கொரோனாவைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளாரா என்பதை முதலில் இனங்காண முடியாது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவருக்கு, சளி, உடல் வலி, இருமல், தும்மல், காய்ச்சல், நெஞ்சுவலி உள்ளிட்டவை ஏற்படும். முதலில், இலேசான காய்ச்சலில்தான் இதன் பாதிப்பு ஆரம்பிக்கும். ஒழுங்கு முறையான சிகிச்சை பெறவில்லையாயின் அது மரணம் வரைத் தீவிரமடையலாம்.  

உலக நாடுகளின் அச்சம்  

மிகவும் வலிமையான இவ்வைரஸ், மனிதர்களை மிக எளிதாகத் தாக்கும் ஆற்றலைக் கொண்டுள்'ளது. இதனால், மோசமான பாதிப்புகள் விரைவாக ஏற்படும் சாத்தியம் அதிகமுள்ளது. இவ்வைரஸ் தாக்கிய சொற்ப காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பது இதற்குச் சான்றாகும். விலங்குகளின் வழியாக மாத்திரம் பரவிய இந்த வைரஸ் தற்போது மனிதர்களுக்கு ஆளுக்காள் பரவும் சக்தியைப் பெற்றுள்ளது. 

சார்ஸ், பன்றிக் காய்ச்சல், எபோலா ஆகிய நோய்கள் தாக்கியபோது, உலக அளவிலான நெருக்கடி நிலையை உலக சுகாதார நிறுவனம் எப்படி அறிவித்ததோ, அதே போன்று தற்போது கொரோனாவைரஸ் தாக்குதலுக்கும் அறிவிக்க ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. முறையான நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படாவிட்டால், விரைவில் இது உலகம் முழுவதும் பரவும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 

2002-ல் சீனாவில் கொரோனாவைரஸ் தாக்குதலால் சார்ஸ் ஏற்பட்டது. அதன் காரணமாக, 774பேர் இறந்தனர், 8,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். அதனால், சீனாவின் வளர்ச்சி 10ஆண்டுகள் தள்ளிப்போனது. அதே போன்று 2012-ல் மத்திய கிழக்கு நாடுகளில், மெர்ஸ் எனப்படும் Middle East respiratory syndrome பரவியது. அது 900பேரைக் காவு கொண்டது. அந்நாடுகளின் பொருளாதாரமும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளானது.  

சீனாவை இவ்வைரஸ் தாக்குவதற்கு மக்கள் தொகையே காரணம் என்று கருதப்படுகிறது. அங்கு நிலவும் சுகாதாரக் குறைபாட்டால்தான், இவ்வைரஸ் ஏற்கனவே அந்நாட்டைத் தாக்கியுள்ளது என அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது, புதிய எதிர்ப்பாற்றலுடனும் அதிக வீரியத்துடனும் அங்கே கொரோனாவைரஸ் உருவாகி உள்ளது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். வைரஸ் முன்பு உருவான அதே இடத்தில் மீண்டும் உருவாகும் தன்மை கொண்டது. சீனாவின் மக்கள்தொகையும் சுகாதாரக் குறைபாடும் பரவலாக அவதானிக்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் மத்தியில் அடிப்படை சுகாதார பழக்கவழக்கங்களும், வசதிகளும் மேம்பாடு அடைய வேண்டும்.  


Add new comment

Or log in with...