கவனம் உங்கள் தரவுகள் | தினகரன்


கவனம் உங்கள் தரவுகள்

கவனம் உங்கள் தரவுகள்-Data and Privacy-Public WiFi

இன்று புகையிரத நிலையங்கள், பல் அடுக்கு வர்த்தக நிலைய தொகுதிகள், ஹோட்டல்கள் என பல்வேறு இடங்களிலும் இலவச பொது Wifi சேவை வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வாறான பொது Wifi சேவைகளை பயன்படுத்தும்போது பாதுகாப்பாக இருப்பது அவசியமாகும்.

இணையத்தில் இன்று திரும்பும் திசையெல்லாம் தனிநபர் தரவு பாதுகாப்பு (Privacy) சார்ந்த பிரச்சினைகளும் சர்ச்சைகளும் சூழ்ந்தே காணப்படுகின்றன. அது மாத்திரமன்றி தகவல் திருட்டு என்பது மிக சர்வ சாதாரணமாக இடம்பெற்று வருகின்றது என்றே கூறலாம்.

நமது அனைத்து தனிப்பட்ட விடயங்கள் மாத்திரமன்றி, பணம் சார்ந்த தகவல்களும் வெளியில் கசியும்போது பல இன்னல்களுக்கு நாம் ஆளாக நேரிடுகிறது.

ஆயினும் இவ்விடயங்கள் தொடர்பில் நாம் எவ்வளவு நிதானமாக இருக்கின்ற போதிலும் எம்மை மீறி இத்தகவல்கள் வெளியே செல்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

நமது கையடக்க தொலைபேசி, மின்னஞ்சல் முகவரி, வீட்டு முகவரி முதற் கொண்டு நாம் எங்கோ ஒரு இடத்தில் வழங்கும் அனைத்து விடயங்களும், ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நம் அனுமதியின்றி அல்லது அனுமதியோடு மற்றொரு நபருக்கு அல்லது நிறுவனத்திடம் சென்று விடுகிறது. இதுவே தற்காலத்தில் காணப்படும் பிரச்சினையாகும்.

இன்று நம் வாழ்வின் முக்கிய அம்சங்கள் அனைத்துமே இணையத்தை நம்பியிருப்பதால், நிஜ வாழ்க்கையில் எந்த அளவுக்குப் பாதுகாப்பாக இருக்கிறோமோ, அந்த அளவுக்கு இணையத்திலும் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம். இல்லையென்றால், உறுமீனுக்குக் கொக்கு காத்திருப்பது போல காத்திருக்கும் ஒன்லைன் மோசடிக்காரர்களுக்கு நாம் இரையாக நேரிடும்.

இணையத்தில் பாதுகாப்பாக இருப்பதற்கான ஒரு சில வழிகள்

பப்ளிக் வைபை ஆபத்துகள்!
இன்று புகையிரத நிலையங்கள், பல் அடுக்கு வர்த்தக நிலைய தொகுதிகள், ஹோட்டல்கள் என பல்வேறு இடங்களிலும் பொது Wifi சேவை அல்லது இலவச Wifi சேவை கிடைக்கிறது. இதைப் பயன்படுத்தும்போது பாதுகாப்பாக இருங்கள். இதில் யார் வேண்டுமானாலும் இணைய வாய்ப்பு உள்ளது என்பதால், வங்கி தொடர்பான முக்கியமான பரிவர்த்தனைகளை இதன்போது பயன்படுத்த வேண்டாம். மின்னஞ்சல் உள்ளிட்டவற்றின் இரகசியக் குறியீடுகளை வழங்க நேரிடும் சந்தர்ப்பம் ஏற்படும்போது, இவ்வாறான பொது வைபைகளை பயன்படுத்தும்போது வழங்க வேண்டாம். அதில் இணைப்பை ஏற்படுத்தியவுடன் வி.பி.என் (VPN) ஊடான இணையத்தை பயன்படுத்துவது சிறப்பாகும்.

சமூக வலைதளங்களின் பிரைவஸி செட்டிங்ஸ்!
தற்போதுள்ள அனைவருக்கும் வங்கிக் கணக்கு ஆரம்பிக்க முன்னர், சமூக வலைதளங்களில் கணக்கு ஆரம்பிக்கப்படுகின்றது. உங்களைப் பற்றிய அனைத்து தகவல்களையும் எவ்வித தங்கு தடையுமின்றி உங்கள் சமூக வலைதளக் கணக்குகள் ஊடாக பார்வையிடலாம்.

இந்தத் தளங்களில் அனைத்து விடயங்களும் 'Public' (அனைவராலும் பார்க்கலாம்) எனும் தகவல் வெளிப்பாடு இருப்பதுதான் இதற்குக் காரணம். இதனால் மொபைல் நம்பர் போன்ற முக்கிய தகவல்களை நண்பர்களுக்கு மட்டும் காண்பிக்கும்படியோ, அல்லது ‘only me' என யாருக்கும் எளிதில் தெரியாதபடியோ பிரைவஸி அமைப்பை மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

ட்ரக்கர்களைத் தவிர்க்கலாம்!
நீங்கள் ஓர் இணையதளத்துக்குச் செல்கிறீர்கள் என்றால், உங்கள் பிரவுசரிலிருந்தே உங்களைப் பற்றியும், உங்கள் விருப்பு, வெறுப்பு பற்றியும் தகவல்களைப் பெற்று அவற்றைக் குறி வைத்து விளம்பரங்களைக் காண்பிப்பார்கள். இதனை தவிர்ப்பதற்கு ‘Incognito’ மோடில் பிரவுஸ் செய்வதன் மூலம் தடுத்து விடலாம் என நீங்கள் கூறலாம். ஆயினும் அம்முறை மூலம் இதனை தடுத்துவிட முடியாது என்பதே உண்மையாகும். இதற்கென பிரத்தியேகமான ட்ரக்கர்களை பிளொக் செய்யும் (Trackers Blocking) மென்பொருள்கள் காணப்படுகின்றன. அவற்றைப் பயன்படுத்தி, நம் தனிப்பட்ட தகவல்களை பிரைவஸி தொடர்பான விவரங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கலாம்.

அனுமதி கொடுக்கும் முன்னர் யோசியுங்கள்!
செயலிகளை இன்ஸ்டோல் செய்யும்போது அல்லத செய்த பின்னர் அவை லொகேஷன், கெமரா, மைக், கான்டாக்ட்ஸ் போன்றவற்றைப் பெற அனுமதி கேட்கும். அவ்வாறான செயலிகள் உண்மையில் அவசியம்தானா என்பதை முதலில் யோசியுங்கள். இல்லை அது அவசியம்தான் என நீங்கள் எண்ணினால், அது கேட்கின்ற தகவல்களுக்கு யடடழற என்பதை கொடுப்பதற்கு முன்னர் ஒன்றுக்கு இரண்டு முறை யோசியுங்கள். உண்மையில் அந்த செயலியின் செயல்பாட்டுக்கு அந்த அனுமதி தேவைதானா என்று, அவ்வாறு தேவையென்றால் மட்டும் அதற்கு அனுமதி கொடுங்கள்.

லொக் ஸ்க்ரீன் நோட்டிபிகேஷன்!
தற்போது மொபைல்களில் பல்வேறு Lock முறைகள் காணப்படுகின்ற போதிலும் Lock Screen இல் நோட்டிபிகேஷன்களை பார்வையிட முடிகின்றது. இதை நிறுத்தி வைப்பது அவசியமாகும். இல்லையென்றால், யார் வேண்டுமானாலும் நோட்டிபிகேஷன்களை பார்க்கலாம்.

வட்ஸ்அப் செய்திப் பரிமாற்றம் முதல் வங்கி செயற்பாடுகள் முதல் செயலிகளை நிறுவுவதற்காக அந்நிறுவனம் அனுப்பும் கடவுச்சொல்லான ஓ.டி.பி (OTP) SMS வரை அனைத்தும் நோட்டிபிகேஷன்களாகவே வருகின்றமையால், மொபைலானது லொக் செய்து இருக்கின்ற வேளையில் ஸ்க்ரீன் நோட்டிபிகேஷன்களை உங்கள் மொபைலில் காண்பிக்காத வகையில் வைப்பதே பாதுகாப்பானது.

அது தவிர, முக்கியமான தகவல்களைப் பாதுகாப்பாகச் சேமித்தல், End-to-end encryption என்கிரிப்ஷன், பாஸ்வேர்டுகளை ஒழுங்குபடுத்துதல், pattern களில் கவனமாக இருத்தல் போன்றவற்றையும் கவனத்தில் எடுப்பதன் மூலம், ஓரளவுக்கேனும் எமது தகவல்களை நாம் பாதுகாப்பாக வைத்திருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...