மாணவியுடன் குடும்பம் நடாத்திய இளைஞருக்கு விளக்கமறியல் | தினகரன்


மாணவியுடன் குடும்பம் நடாத்திய இளைஞருக்கு விளக்கமறியல்

மாணவியுடன் குடும்பம் நடாத்திய இளைஞருக்கு விளக்கமறியல்-19Yr Old Arrested Living together with 13Yr Old Girl

- மாணவிக்கு 13 வயது; சந்தேகநபருக்கு 19 வயது
- சந்தேகநபர் போதைப் பொருளுக்கு அடிமையானவர்

மாணவியை அழைத்துச் சென்று குடும்பம் நடாத்தி வந்த இளைஞருக்கு விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

13 வயதுடைய பாடசாலை மாணவியை மாணவியின் பெற்றோருக்கு தெரியாமல் அழைத்துச் சென்று திஸ்ஸமகாராம பிரதேசத்தில் குடும்பம் நடாத்திய இளைஞரை இம்மாதம் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தமுத்தேகம நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் மஹிந்த கித்சிறி டி சில்வா உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர், இகிரிவெவ தமுத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞராவார்.

சந்தேகநபரான இளைஞர் தமுத்தேகம நகரில் பிரபல பாடசாலையொன்றில் 8 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் 13 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவருடன் காதல் தொடர்பை கொண்டிருந்தார்.

சந்தேகநபரான இளைஞர் தற்போது ஒரு மாத காலத்திற்கு முன்னர் இம்மாணவியை அம்மாணவியின் பெற்றோருக்கு தெரியாமல் திஸ்ஸமகாராம பிரதேசத்திலுள்ள தனது நண்பன் ஒருவனின் வீட்டுக்கு அழைத்துச் சென்று குடும்பம் நடாத்தி வந்துள்ளார்.

இம்மாணவியின் பெற்றோர் தனது மகளை காணவில்லை என தமுத்தேகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இதனையடுத்து தமுத்தேகம பொலிஸார் நாடு முழுவதும் உள்ள சகல பொலிஸ் நிலையத்திற்கும் இம்மாணவி பற்றிய விபரங்களை கொடுத்து கண்டுபிடிக்க உதவுமாறு கோரியுள்ளனர்.

இந்நிலையில், இச்சிறுமி தனது காதலனுடன் தனது காதலனின் நண்பர் ஒருவரின் வீட்டில் திஸ்ஸமகாராம பிரதேசத்தில் இருப்பதாக தனது பெற்றோருக்கு தொலைபேசியில் அறிவித்துள்ளார்.

இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் அவர்களை தமது வீட்டுக்கு வரவழைத்து தமுத்தேகம பொலிசில் ஒப்படைத்துள்ளனர். இதன் பின்னர் சந்தேகநபரான இளைஞரை தமுத்தேகம பொலிசார் கைது செய்து தமுத்தேகம நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். இதனையடுத்து இவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான இளைஞர் போதைவஸ்து பாவனைக்கு உள்ளானவர் என்றும்,எவ்வித தொழிலும் இல்லாதவர் என்றும் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை தமுத்தேகம பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் என்.ஜே. அத்துகோரளவின் ஆலோசனையின் பேரில் தமுத்தேகம பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

(கல்நேவ தினகரன் விசேட நிருபர் - நப்ரின் பைஸல்)


Add new comment

Or log in with...