கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சீனாவில் விடுமுறை நீடிப்பு: வர்த்தகங்கள் நிறுத்தம் | தினகரன்


கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சீனாவில் விடுமுறை நீடிப்பு: வர்த்தகங்கள் நிறுத்தம்

உயிரிழப்பு 81 ஆக அதிகரிப்பு

கொரோனா வைரஸினால் சீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்திருப்பதோடு இந்த வைரஸ் தொற்றியோர் எண்ணிக்கை 3,000 ஐ நெருங்கியுள்ளது.

இந்த நோய் பரவுவதை கட்டுப்படுத்தும் முயற்சியாக சீனாவின் தேசிய புத்தாண்டு விடுமுறை ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

புதிய வைரஸ் ஏற்பட்ட ஹுபெய் மாகாணத் தலைநகரான வுஹானுக்கு சீனப் பிரதமர் லீ கெகியாங் நேற்று விஜயம் மேற்கொண்டார். ஹுபெய் மாகாணத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 56 இல் இருந்து 76 ஆக அதிகரித்திருப்பதோடு, நாட்டின் ஏனைய பகுதிகளில் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

வுஹான் நகர் உட்பட பல நகரங்களும் மூடப்பட்டிருப்பதோடு அங்கு பயணத் தடைகளும் விதிக்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி 10 ஆம் திகதி பணிக்குத் திரும்பும் வரை ஷங்காய் நகரில் வர்த்தகங்களை அரசு நிறுத்தியுள்ளது. அடிப்படை பயன்பாடுகள், மருத்துவ நிறுவனங்கள், மருத்துவ விநியோகங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் தவிர்த்து அனைத்து நிறுவனங்களுக்கும் இந்த தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த நோய் தொற்று தொடர்பில் சீன அரசு மற்றும் சுகாதார நிபுணர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு உலக சுகாதார அமைப்பின் செயலாளர் நாயகம் டெட்ரோஸ் அதனோம் கெப்சியேசுஸ் பீஜிங் பயணமாகியுள்ளார்.

சீனாவில் ஆண்டின் பிரதான விடுமுறை நீடிக்கப்படுவது மிகவும் அசாதாரணமான நகர்வு என்று அங்கிருக்கும் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் புத்தாண்டுக்கு முன்னரான பயணத்திற்கு பின்னர், அரை மில்லியன் மக்கள் ரயில்கள், விமானங்கள் மற்றும் பஸ்கள் மூலம் மீண்டும் பணிக்குத் திரும்ப எதிர்பார்த்துள்ளனர்.

அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் தாய்லாந்து உட்பட வெளிநாடுகளில் புதிய கொரோனா வைரஸ் தொற்றிய குறைந்தது 44 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. சீனாவுக்கு வெளியில் இதுவரை எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை.

இந்த கொரோனா வைரஸினால் கடுமையான சுவாசத் தொற்று ஏற்படுவதோடு இதற்கு மருந்து அல்லது தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

எனவே, கொரோனா வைரஸை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவுவதைத் தடுப்பதே இப்போதைக்கு இருக்கும் ஒரே தெரிவாக உள்ளது.

இந்த வைரஸால் தாக்கப்பட்ட நான்கில் ஒருவருக்கு உடல்நிலை மிகவும் மோசமடைவதாக தெரிகிறது. வயது முதிர்ந்தவர்கள் அல்லது ஏற்கனவே சுவாசப் பிரச்சினை இருப்பவர்களே அதிகம் உயிரிழந்துள்ளனர்.

மூடப்பட்டுள்ள வுஹான் நகர்

11 மில்லியன் மக்கள் வசிக்கும் வுஹான் நகரில் இருந்து பயணங்கள் மேற்கொள்வதில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அவசிய தேவையின்றி பயணிக்கும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாகாணத்திற்குள் நுழைவதற்கு முன்னர் ஹுபெய் எல்லை பணியாளர்கள் மக்களின் உடல் உஷ்னத்தை சோதித்து வருகின்றனர். இந்த மாகாணத்தில் குடிவரவு சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருப்பதால் சீன பிரசைகளுக்கு புதிய விசா அல்லது கடவுச்சீட்டுகளை பெற முடியாதுள்ளது.

கடந்த நான்கு நாட்களில் நகரத்தில் இருந்து எவரும் சீனாவை விட்டு வெளியேறவில்லை என்று வுஹான் நகர நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. வுஹானைச் சேர்ந்த சுமார் 4,096 சுற்றுலா பயணிகள் தொடர்ந்தும் நாட்டில் இருந்து வெளியே உள்ளனர்.

வுஹானின் மருத்துவமனைகளில் அவசர நிலை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாகாணத்தில் நோய் தடுப்பு, கட்டுப்பாடு மற்றும் சிகிச்சைகளை வழங்க அரை மில்லியனுக்கும் அதிகமான மருத்துவ பணியாளர்கள் இணைந்துள்ளனர்.

நகரத்தில் இரு தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கப்பட்டிருப்பதோடு தொழிற்சாலைகள், முகக் கவசங்கள் மற்றும் பாதுகாப்பு ஆடைகளை தயாரிப்பதை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில் வுஹான் நகருக்கு சென்றிருக்கும் பிரதமர் லீ, அங்கு மேற்கொள்ளப்படும் சுகாதார நடவடிக்கைகளை பார்வையிட்டதாகவும் நோயாளர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை சந்தித்து பேசியதாகவும் சீன அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நோய் தொற்றியோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக வுஹான் நகர மேயர் சூ சியான்வங் தெரிவித்துள்ளார். இந்த நகரம் மூடப்படுவதற்கு முன்னர் சுமார் ஐந்து மில்லியன் புத்தாண்டு பயணிகள் நகரை விட்டு வெளியேறி இருப்பது பற்றியும் அவர் எச்சரித்துள்ளார்.

தவிர, ஹுபெய் மாகாணத்தில் உள்ள சிசியாங், சியான்டாவோ, ஹுவாங்காங் ஆகிய நகரங்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அந்த நடவடிக்கையால் சுமார் 56 மில்லியன் பேர் நகரைவிட்டு வெளியேறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வுஹான் நகருக்கு சுமார் 450 இராணுவ மருத்துவர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.

சீனாவில் நிலை என்ன?

சீனாவில் புத்தாண்டு அதிகம் களைகட்டாத நிலையில் பீஜிங், ஷங்காய், சியாங் மற்றும் டியான்ஜிங் ஆகிய நான்கு பிரதான நகரங்களில் நீண்டதூர பஸ் பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வரும் ஞாயிற்றுக்கிழமை வரை புத்தாண்டு விடுமுறை நீடிக்கப்பட்டிருப்பதால் பாடசாலைகள் மற்றும் அரச நிறுவனங்கள் இந்த வாரம் முழுவதும் மூடப்பட்டிருக்கும்.

பீஜிங் நகர் அதேபோன்று பெருஞ்சுவரின் ஒரு பகுதி சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குவாங்டொங் மாகாணம் மற்றும் பல நகரங்களிலும் பொதுமக்கள் முகக் கவசம் அணிவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. ஹொங்கொங் மற்றும் ஷங்காய் டிஸ்னி பூங்காக்கள் மூடப்பட்டுள்ளன.

ஹொங்கொங்கில் வைரஸ் தொற்றிய எட்டு சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு வரும் பெப்ரவரி 17 ஆம் திகதி வரை பாடசாலைகள் மூடப்பட்டு நகரில் அவசர நிலை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

நோயரும்பு காலத்திலேயே இந்த வைரஸ் பரவுவதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது இந்த நோயை கட்டுப்படுத்துவதை கடிமாக்கியுள்ளது.

நோய் தொற்றியவர்களிடம் நோய் அறிகுறியை வெளிக்காட்டாத நோயரும்பு காலமானது ஒன்று தொடக்கம் 14 நாட்கள் கொண்டது என சுகாதார அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

வைரஸ் தொற்று வேகமாகப் பரவும் ஆற்றலைக் கொண்டது என்று சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

சீனாவில் தங்கியிருக்கும் தமது குடிமக்களை திரும்ப அழைத்து வர, சில நாடுகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

பன்றிக்காய்ச்சல் மற்றும் எபோலாவை போன்று கொரோனா வைரஸ் தாக்குதலையும் சர்வதேச பொது சுகாதார அவசர நிலையாக பிரகடனம் செய்வதற்கு உலக சுகாதார அமைப்பு ஆலோசித்து வருகிறது.

வுஹான் நகரில் உள்ள வனவிலங்குகள் சட்டவிரோதமாக விற்கப்படும் கடலுணவுச் சந்தை ஒன்றில் இருந்தே இந்த வைரஸ் தோன்றியதாக நம்பப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து சீனாவில் வனவிலங்கு விற்பனைக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக மிருகங்களை பாதிக்கும் கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த புதிய அல்லது ‘நாவல்’ கொரோனா வைரஸ் என முன்னர் கண்டறியப்படாத இந்த வைரஸ் அழைக்கப்படுகிறது.

இதற்கு முன்னரும் சீனாவில் 2003 ஆம் ஆண்டு தோன்றி 774 பேரின் உயிர்களை பறித்த சார்ஸ் வைரஸை இந்த புதிய வைரஸ் ஒத்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...