'நான் ஒரு சமூகத்துக்குரிய அரச அதிபர் என நினைத்து விடக் கூடாது' | தினகரன்


'நான் ஒரு சமூகத்துக்குரிய அரச அதிபர் என நினைத்து விடக் கூடாது'

மட்டு. புதிய அரசாங்க அதிபர்

தமிழ் சமூகத்துக்கு மட்டுமுரிய அரசாங்க அதிபர் என முஸ்லிம்கள் நினைத்து விடக் கூடாது. தமிழர்கள், முஸ்லிம்கள் என அனைத்து சமூகங்களுக்குமான அரசாங்க அதிபராகவே நான் செயற்படுவேன் என மட்டக்களப்பு மாவட்டத்துக்கான புதிய அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.

அரசாங்க அதிபர் கடமைகளை நேற்று பொறுப்பேற்றதன் பின்னர் மட்டக்களப்பு நகரிலுள்ள சமயத்தலங்களுக்கு சென்ற புதிய அரசாங்க அதிபர் மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜும்ஆப்பள்ளிவாயலுக்கும் விஜயம் செய்தார்.

இவரை மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜும்ஆப்பள்ளிவாயலின் தலைவர் எம்.எச்.எம்.சியாம் தலைமையிலான பள்ளிவாயல் நிருவாகிகள் பிரமுகர்கள் வரவேற்றனர்.

இதன் போது பள்ளிவாயலுக்குள் சென்று பள்ளிவாயலை பார்வையிட்ட அரசாங்க அதிபர் அங்கு நடைபெற்ற பிராத்தனை நிகழ்வில் கலந்து கொண்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,..

எமது மட்டக்களப்பு மாவட்டம் தமிழ், முஸ்லிம் மக்கள் இணைந்து வாழுகின்ற ஒரு மாவட்டமாகும்.முஸ்லிம்களுக்குரிய கலாசாரம் அவர்களின் பண்புகள் என அனைத்தும் அவர்களுக்குரிய உரிமைகளாகும்.

அரசாங்க அதிபர் என்ற வகையில் முழு மட்டக்களப்பு மாவட்டத்துக்கும் நான் அரசாங்க அதிபராகும்.தமிழ் சமூகத்துக்கு மட்டுமுரிய அரசாங்க அதிபர் என முஸ்லிம்கள் நினைத்து விடக் கூடாது.

மட்டக்களப்பு நகரிலுள்ள முஸ்லிம் வர்த்தக சமூகத்தை நான் அறிவேன். ஏனெனில் நானும் மட்டக்களப்பைச் சேர்ந்தவள் என்பதால் எனக்கு பலரை நன்கு தெரியும்.நான் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளராக கடமையாற்றி பின்னர் கடந்த ஏழரை வருடங்கள் கிழக்கு மாகாண சபையில் கடமையாற்றினேன்.

எனது நிருவாக சேவையின் இறுதிக்கட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு சேவையாற்றுவதற்கு கிடைத்துள்ள அரிய சந்தர்ப்பமாக நான் இதனை பார்க்கின்றேன்.

எனது கடமையை சிறப்பாக செய்தவற்குரிய ஒத்துழைப்பை உங்களிடமிருந்து எதிர்பாரக்கின்றேன். அதற்கான ஒத்துழைப்பையும் ஒத்தாசையும் நீங்கள் வழங்க வேண்டும்.

உங்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் ஏற்படுகின்ற போது என்னோடு நீங்கள் தொடர்பு கொண்டு பரஸ்பரம் கலந்துரையாடி அவைகளை தீர்த்துக் கொள்ள முடியும்.நீங்கள் என்னுடன் பேச முடியும். உங்களது தேவைகள் என்னிடம் முன் வைத்தால் அவைகளை தீர்த்து வைப்பதற்கு நான் நடவடிக்கை எடுப்பேன் என மேலும் தெரிவித்தார்.

புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்


Add new comment

Or log in with...