11 தமிழ் இளைஞர்கள் கடத்தல் வழக்கு: அரசியல் தலையீட்டுக்கு சுமந்திரன் கண்டனம் | தினகரன்


11 தமிழ் இளைஞர்கள் கடத்தல் வழக்கு: அரசியல் தலையீட்டுக்கு சுமந்திரன் கண்டனம்

11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் இருந்து முன்னால் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் கடற்படையின் முன்னால் பேச்சாளர் டி.கே.பி. தஸநாயக்க ஆகிய இருவரையும் வழக்கில் இருந்து விடுதலை செய்யுமாறு அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு பணிப்புரை வழங்கியிருப்பது சட்ட விரோதமானது என்று கண்டிப்பதோடு இதற்கு எதிராக சட்டநடவடிக்கைக்கு செல்லவுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

11 இளைஞர்கள் கொழும்பில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் சம்பந்தமாக விசேட மேல் நீதிமன்ற அமர்வில் பல இராணுவ அல்லது கடற்படை புலனாய்வாளர்கள், தளபதிகள்  குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கு. இந்த வழக்கு சில தினங்களுக்கு முன்னர் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது, குற்றப்பத்திரிகை சமர்பிக்கவேண்டாம். இது தொடர்பில் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு ஒரு பணிப்புரை விடுக்க உள்ளது. ஆணைக்குழு என்ன பணிப்புரை விடுக்க இருக்கிறது என்பதை தெரிந்துகொண்டு விசாரணையினை முன்னெடுக்கலாம் என்று எதிரிகள் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்திற்கு தெரிவித்திருக்கிறார்கள். ஆனாலும் நீதிமன்றம் அதனை ஏற்க மறுத்தது. குற்றப்பத்திரங்களை எதிரிகளுக்கு சமர்ப்பித்திருந்தது.

அன்றைய வழக்கு தவணையின் போது முக்கிய எதிரி முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட நீதிமன்றில் ஆஜராகவில்லை. அவருக்கு குற்றப்பத்திரம் வழங்கப்படவில்லை. அடுத்த தவணைக்கு சமூகம் அளிக்கும்படி தகவல் வழங்குமாறு உத்தரவு பிறப்பிக்கபட்டது.

இது நடந்து சில நாட்களுக்குள்ளே நேற்றைய தினம் (27) அரசியல் பழிவாங்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு சட்டமாஅதிபர் திணைக்களத்திற்கு ஒரு அறிவித்தலை கொடுத்திருக்கிறது. முன்னால் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் கடற்படையின் முன்னாள் ஊடக பேச்சாளர் டி.கே.பி. தஸநாயக்க ஆகிய இருவரையும் வழக்கில் இருந்து விடுதலை செய்யுமாறு சிபார்சு செய்து ஒரு அறிவித்தலை சட்டமா அதிபருக்கு கொடுத்துள்ளது. இது ஒரு மோசமான அரசியல் தலையீடு. சட்டமாஅதிபர் திணைக்களம் சுயாதீனமாக இயங்குகிற திணைக்களம்.

வழமையாக சட்டமாஅதிபர் திணைக்களம் அரச இயந்திரமாக அல்லது அரச கைக்கூலியாக இயங்குகிறது என்ற குற்றச்சாட்டை தான் முன்வைப்பபோம், ஆனால் இங்கே சட்டமா அதிபர் முன்னெடுத்த வழக்கை கூட ஜனாதிபதி ஆணைக்குழுவை வைத்து அதன் செயற்பாட்டை தடுக்க முயற்சிகள் இடம்பெறுகிறது.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரம் மிகப்பெரிய விவகாரம். நேரடி சாட்சியத்தோடு அரச படையிடம் கையளிக்கப்பட்டவர்கள் ஆயிரம் ஆயிரம் பேர் உள்ளனர். அதில் ஒரு விடயம் கூட நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படவில்லை. ஐக்கிய நாடுகளுக்கும் ஏனைய நாடுகளுக்கும் வெறும் கண்துடைப்பாக இந்த 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட விடயத்தை மட்டும் அரசாங்கம் முன்னெடுத்தது. மற்றவிடயங்கள் செய்யப்படாமல் இருந்தபோது இந்த விடயமாவது சரியாக நடக்கிறதா? நடத்தப்படுகிறதா? என்பதை கவனித்து வந்தோம். கொழும்பில் கடத்தப்பட்ட இந்த இளைஞர்கள் கப்பம் பெறுவதற்கு கடத்தப்பட்டவர்கள். சிலரால் கப்பம் கொடுக்கப்பட்டும் இருந்தது. இருந்தும் இவர்கள் திருகோணமலை கடற்படை முகாமில் கொல்லப்பட்டு உள்ளனர் என்ற தகவலை குற்றப்புலனாய்வு துறை ஏற்கனவே நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

இதனோடு சம்பந்தப்பட்டவர்களாக இந்த கடற்படை புலனாய்வாளர்களும் தளபதியாக இருந்தவர் மீதும் குற்றப்பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் சுயாதீனத்தில் தலையீடுவது மட்டுமல்லாது நீதிதுறையின் சுதந்திரத்தை பாதிப்பது தலையீடு செய்வதான ஒரு மோசமான செயற்பாடு கண்டனத்திற்குரிய செயற்பாடு. இவ்வாறு தலையீடு செய்வதை உடனடியாக நிறுத்தவேண்டும். ஆணைக்குழுக்களை வைத்து இவ்வாறு செயற்படுவது. சட்டவிரோதமான செயற்பாடு. இதற்கு நாம் சட்டநடவடிக்கை எடுப்போம்.

(ரூபன் - கொக்குவில் குறுப் நிருபர்)


Add new comment

Or log in with...