பலாங்கொடையில் போக்குவரத்து சட்டங்களை மீறியவர்களிடமிருந்து ரூ. 13 லட்சம் தண்டப்பணம்

கடந்த வருடம் டிசம்பர் மாதம் பலாங்கொடை பொலிஸ் பிரிவில் பல்வேறுபட்ட போக்குவரத்து சட்டங்களை மீறிய சாரதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்து அவர்களை பலாங்கொடை மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்திற்கு ஆஜர்படுத்திய பின் தண்ட பணமாக பதிமூன்று லட்சத்து 12,600 ரூபா அரசாங்கத்திற்கு வருமானமாக பெற்றுக்கொடுக்க முடிந்ததாக பலாங்கொடை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

குடிபோதையில் வாகனம் செலுத்தியமை, வாகன காப்புறுதி மற்றும் வருமானவரி அனுமதிப்பத்திரம் இல்லாமல் வாகனத்தை செலுத்தியமை, பொலிசாரின் சட்டத்தை மீறி வாகனத்தை செலுத்தியமை, கவனயீனமாக வாகனம் ஓட்டியமை உட்பட பல்வேறுபட்ட குற்றங்களுக்காக சாரதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு இந்தத் தண்டப் பணத்தை போக்குவரத்து பொலிஸார் பெற்றுக் கொடுத்துள்ளனர்.

பலாங்கொடை பிரதிப் பொலிஸ் அதிகாரி துமிந்து சேனாநாயக்கவின் பணிப்புரையின் பேரில் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி டி. என். எல். சேனாநாயக்க உட்பட பொலிஸ் அதிகாரிகள் குழு டிசம்பர் மாதத்தில் சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர்.

(அப்துஸ் ஸலாம் - பலாங்கொடை தினகரன் நிருபர்)


Add new comment

Or log in with...