ராஜித சேனாரத்ன சி.ஐ.டியில் 4 மணி நேரம் வாக்குமூலம்

பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நேற்று ஆஜராகியதுடன் சுமார் 4 மணிநேரம் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுகயினம் காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை யொன்றில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்றுமுன்தினமிரவு வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய நிலையிலேயே குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியிருந்தார். வெள்ளை வான் கடத்தல் தொடர்பான ஊடக சந்திப்பு நடத்தி சர்ச்சைக்குரிய விடயங்களை வெளியிட்டமைக்காக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்கான பிடியாணையைப் பிறப்பிக்குமாறு சட்ட மாஅதிபர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதற்கமைய கடந்த 24ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அதற்கான அனுமதியை வழங்குமாறு நீதிமன்றத்திடம் கோரியிருந்தனர். அந்த கோரிக்கையைப் பரிசீலித்த நீதிமன்றம் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்கான பிடியாணையைப் பிறப்பித்தது.

இத்தகைய சூழ்நிலையிலேயே கடந்த 26 ஆம் திகதி ராஜித சேனாரத்ன கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றின் இருதய சிகிச்சை தொடர்பான பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இதற்கிணங்க சிகிச்சை பெற்று வந்த அவரை கடந்த 27 ஆம் திகதி பிற்பகல் 2.30 மணியளவில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு பிணை வழங்கினால் அது அவர் தொடர்பான விசாரணைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம் என குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்திற்குத் தெரிவித்திருந்தனர். அனைக் கருத்திற்கொண்டு அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடுமாறு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தைக் கோரியிருந்தனர்.

அதற்கிணங்க அவரை கடந்த 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதற்கு கொழும்பு மேலதிக நீதிமன்ற நீதிபதி சலனி பெரேரா உத்தரவிட்டார்.

அதேவேளை கடந்த 28 ஆம் திகதி சிறைச்சாலை மருத்துவர்கள் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவைப் பரிசோதனைக்கு உட்படுத்தினர். இந் நிலையில் ராஜிதவை சிறைச்சாலை வைத்தியசாலையிலோ அல்லது தேசிய வைத்தியசாலையிலோ சிகிச்சைக்காக அனுமதிக்க முடியும் என்றும் அவர்கள் பரிந்துரைத்தனர்.

எனினும் கடந்த 29 ஆம் திகதி மாலை முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் உடல் நிலை பாதிப்படைந்ததனால் அவர் தனியார் வைத்தியசாலையொன்றில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அவரை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்காக தனியார் வைத்தியசாலைக்கு வந்திருந்த அம்புலன்ஸ் வண்டியும் அவர் அங்கு இல்லாததால் திரும்பிச் சென்றது.

இதற்கிடையில் கடந்த 23 ஆம் திகதி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தாக்கல்செய்த மனு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் கடந்த 30 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அன்றைய தினம் அவர் ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீர பிணைகளில் விடுதலை செய்யப்பட்டார்.


Add new comment

Or log in with...