சீனாவிலுள்ள இலங்கையர் எவருக்கும் கொரோனா பாதிப்பில்லை | தினகரன்


சீனாவிலுள்ள இலங்கையர் எவருக்கும் கொரோனா பாதிப்பில்லை

சீனாவிலுள்ள இலங்கையர் எவருக்கும் கொரோனா பாதிப்பில்லை-No Sri Lankan Affected by Corona in China

- வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பு
- முதற் கட்டமாக இன்று 21 மாணவர்கள் நாடு திரும்புகின்றனர்

சீனாவின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள சுமார் 860 இலங்கையர்களில் எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என, வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் சீனாவிலுள்ள தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடர்பான ஆபத்தை கருத்திற்கொண்டு, சீனாவின் பீஜிங் மற்றும் கென்டனில் இருந்து வழக்கமாக வரும் விமானங்களின் மூலம் நாடு திரும்ப விரும்பும் மாணவர்களுக்கு 50% தள்ளுபடியை வழங்குவதாக ஶ்ரீலங்கன் விமான சேவை அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அறிந்து கொள்ள சீனாவிலுள்ள மாணவர்கள் ஶ்ரீலங்கன் விமான சேவையை +94 777771979 எனும் இலக்கம் மூலம் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சீனாவிலுள்ள இலங்கையர்களின் தகவல்களை பெற்றுக் கொள்ளும் வகையில், பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகத்தில் 24 மணி நேரம் இயங்கும் +86-10-65321861/2 எனும் இரு தொலைபேசி  இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், இன்று (27) பிற்பகல் சீனாவின் தியான்ஜினில் இருந்து 21 மாணவர்கள் இலங்கைக்கு புறப்பட்டுள்ளதாக சீனாவில் உள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சீனாவிலிருந்து வரும் விமானப் பயணிகளுக்கு, விமான நிலையத்தில் தனி வாயிலும் அமைக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...