கிளிநொச்சி மாவட்ட புதிய அரசாங்க அதிபர் பதவியேற்பு | தினகரன்


கிளிநொச்சி மாவட்ட புதிய அரசாங்க அதிபர் பதவியேற்பு

கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு புதிய அரசாங்க அதிபர் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர்கள் இன்று கடமைகளை பொறுப்புற்றனர். இன்று (27) காலை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் புதிய அரசாங்க அதிபராக ரூபவதி கேதீஸ்வரன் தனது கடமைகளை பொறுப்பேற்றார். மீள்குடியேற்றம் முதல் 2015ம் ஆண்டுவரை கிளிநொச்சி மாவடட அரசாங்க அதிபராக செயற்பட்ட அவர் பின்னர் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றி வந்தார். தொடர்ந்து இன்று மீண்டும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக தனது கடமைகளை பொறுப்பேற்றார். கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய சுந்தரம் அருமைநாயகம் அமைச்சின் செயலாளராக கடமைகளை பொறுப்பேற்று வந்த நிலையில் வெற்றிடம் காணப்பட்டது. இதுவரை பதில் அரசாங்க அதிபராக கடமையாற்றிய எஸ். சத்தியசீலன் புதிய அரசாங்க அதிபரிடம் பொறுப்புக்களை ஒப்படைத்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்தி பணிகள் மற்றம் அத்தியாவசிய விடயங்கள் தொடர்பில் தான் நீண்ட கவனம் செலுத்தி, மக்களிற்கு வேண்டிய சகல விடயங்களையும் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாக அரசா்க அதிபர் இதன்போது தெரிவித்தார். விடுபட்டுள்ள அபிவிருத்தி பணிகளையும், குறைநிலையில் காணப்படும் விடயங்களையும் முன் கொண்டு செல்வதற்கு தன்னால் இயன்ற முயற்சிகளை மேற்கொள்வதாகவும், அதற்கான ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கனகராஜா சிறிமோகனன் தனது கடமைகளை பொறுப்பேற்றார். கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றிவந்த எஸ் சத்தியசீலன் திரைசேரிக்கு மாற்றம் பெற்று செல்லும் நிலையில் குறித்த வெற்றிடத்திற்காக வடமாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளராகவும், தேசிய அருங்கலைகள் பேரவையின் வடமாகாண ஒருங்கிணைப்பு உத்தியோகத்தராகவும் செயற்பட்ட கனகராஜா சிறிமோகனன் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

குறித்த இருவரையும் வரவேற்கும் நிகழ்வு இன்று காலை 11மணியளவில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன்படி மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் ஆகியோர் உத்தியோகபூர்வமாக தமது கடமைகளை பொறுப்பேற்றனர்.

மு. தமிழ்செல்வன்


Add new comment

Or log in with...