அரசாங்கம் முறையான திட்டம் ஒன்றை முன்வைத்தால் ரூ. 1000 வழங்க தயார் | தினகரன்


அரசாங்கம் முறையான திட்டம் ஒன்றை முன்வைத்தால் ரூ. 1000 வழங்க தயார்

பெருந்தோட்ட கம்பனிகளின் முகாமைத்துவ பணிப்பாளர் ரொசான் ராஜதுரை தெரிவிப்பு

அரசாங்கம் இன்று ஆயிரம் ரூபா சம்பள வழங்குவது தொடர்பாக அறிவித்துள்ளது அதற்கான ஆலோசனைகளையும் எம்முடன் வினாவியுள்ளது. நாங்கள் அதற்கான கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகிறோம். ஆகவே அரசாங்கம் முறையான திட்டங்களை முன்வைக்கும் என்றால் நாங்கள் ஆயிரம் ரூபா சம்பளம் வழங்க தயார் என பெருந்தோட்ட கம்பனிகளின் முகாமைத்துவ பணிப்பாளர் ரொசான் ராஜதுரை தெரிவித்தார். 

தோட்டத்தொழிலாளர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் தாங்கள் செய்கின்ற தொழிலினை பாதுகாத்து அதனை மேம்படுத்தும் முகமாகவும் ஒழுங்கு செய்யப்பட்ட மாபெரும் தேயிலை கொழுந்து பறிக்கும் இறுதிப் போட்டி நேற்று முன்தினம்  நானுஓயா ரதல்ல தோட்டத்தில் நடைபெற்றது. 

ஹேலியஸ் கம்பனிக்கு சொந்தமான களனிவெலி, வட்டவளை,ஹொரண பெருந்தோட்டங்களைச் சேர்ந்த 13 தோட்டங்களில் போட்டியிட்டு முதல் மூன்று இடங்களை பெற்றுக்கொண்ட போட்டியாளர்கள் இதில் கலந்து கொண்டனர். 

இப்போட்டியில் வெற்றி பெற்ற தோட்டத்தொழிலாளர்கள்ளுக்கு பெறுமதிமிக்க பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. 

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்.. 

சர்வதேச சந்தையில் தேயிலையின் விலைகள் கூடி குறைகின்றன. இவ்வாறான ஒரு நிலையில் தோட்டங்களை கொண்டு நடத்துவது மிகவும் கடினமாக உள்ளது. எங்களுக்கு தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அல்லது 1600 ரூபாவை கூட வழங்குவதற்கு விருப்பம். சில தொழிலாளர்களில் நாள் ஒன்றுக்கு 30,35 கிலோ தேயிலை கொழுந்தினை பறிப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நல்ல சம்பளத்தினை பெறுகிறார்கிறார்கள்.

இன்று அரசாங்கம் தோட்டங்களை பொறுப்பேற்பதாக கூறியிருக்கிறது. ஆனால் அரசாங்கம் பொறுப்பேற்குமாக இருந்தால் அதனை சட்டத்திட்டங்கள் படியே பொறுப்பேற்க வேண்டும். ஒரு சிலர் கூறுவதை போல் செய்ய முடியாது. அத்தோடு இன்று ஒரு சிலர் முன் வைக்கும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது. 50 வீதம் நிர்வாகச் செலவு செய்வதாக சொல்லியிருக்கிறார்கள். 9 சதவீதமே நிர்வாக செலவு செய்யப்பகின்றது. 67 சதவீதம் தொழிலாளர்களின் உற்பத்தி செலவே காணப்படுகின்றன. ஆகவே தேயிலை துறை பற்றி தெரியாதவர்களே இவ்வாறு கூறுகின்றனர். தோட்டங்களில் மரங்கள் தறிப்பதாக பலர் எம்மீது குற்றம் சுமத்தியுள்ளனர். தோட்டங்களில் உள்ள தரிசு நிலங்களில் நாங்கள் விறகுக்கு மற்றும் இதர தேவைகளுக்காக மரங்களை வெட்டியுள்ளோம்.  வேறு ஒன்றுக்கும் அல்ல. ஆகவே தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பாக நல்ல முடிவு எட்டப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். 

ஹட்டன் கே.சுந்தரலிங்கம் விசேட நிருபர்  


Add new comment

Or log in with...