போராட்ட காலங்களிலும் கல்விக்கு பல அர்ப்பணிப்புக்களைச் செய்தோம் | தினகரன்

போராட்ட காலங்களிலும் கல்விக்கு பல அர்ப்பணிப்புக்களைச் செய்தோம்

போராட்ட காலங்களிலும் கல்விக்கான பல வேலைத் திட்டங்களை முன்னெடுத்ததான, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும்,முன்னாள் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார்.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஏற்பாட்டில் வாகரைப் பிரதேசத்திலுள்ள மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பாற்சேனை தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.இதில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது:

கல்வி என்பது விலைமதிப்பில்லாத சொத்து. போராட்ட காலங்களில் கூட கல்விக்கான பல வேலைத் திட்டங்களை நாம் செய்தோம். போராட்டத்தில் கல்விக்கென தனி பிரிவையே  உருவாக்கிச்  செயற்பட்டோம்.

வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் கூடியளவு கல்வி வளர்ச்சிக்காக கல்விக் கழகங்கள் என பல கழகங்கள்,  அமைப்புக்கள் செயற்பட்டன. போராட்ட காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரைப் பிரதேசத்தில் கல்வி அபிவிருத்திக் குழு ஒன்றையும் முதல் முதலாக ஆரம்பித்தோம். வாகரைப் பிரதேசத்திலுள்ள பல பாடசாலைகளை தரமுயர்த்தி உள்ளோம். இன்னும் தரமுயர்த்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றேன். இதில் கூடுதல் கவனம் எடுத்து செயற்படப்போவதாகவும் அவர் தெரிவித்தார். வாகரை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.துரைராஜசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் மேலதிக செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.ஜெயானந்தமூர்த்தி, வாகரை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.ரசிக்காந்தன், வாகரைப் பிரதேச பாடசாலை அதிபர்கள், மாணவர்கள், கட்சி பிரதிநிதிகள், உறுப்பினர்கள், எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது  புணாணை, வட்டவான், காயான்கேணி, மாங்கேணி, மதுரங்குளம், கிருமிச்சை, வாகரை, பாற்சேனை, கதிரவெளி, ஆலங்குளம், கட்டுமுறிவு, பனிச்சங்கேணி போன்ற பிரதேத்திலுள்ள பாடசாலையிலிருந்து தெரிவு செய்யப்பட்ட வறிய மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

கல்குடா தினகரன் நிருபர்


Add new comment

Or log in with...