படகு கவிழ்ந்ததில் காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு | தினகரன்


படகு கவிழ்ந்ததில் காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு

புத்தளம் சிறுகடலில் படகு கவிழ்ந்ததில் காணாமல் போன மீனவர், இரு தினங்களுக்கு பின்னர் இன்று (25) அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம், முள்ளிபுரத்தில் வசிக்கும் 60 வயதுடைய எஸ்.ஜீ.எம். ரபீக் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

புத்தளம், முள்ளிபுரம் பகுதியைச் சேர்ந்த தந்தை மற்றும் மகன் ஆகியோர் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற வேளையில் கடந்த23ஆம் திகதி படகு கவிழ்ந்ததில் தந்தை காணாமல் போயிருந்ததோடு,   மகன் நீந்தி உயிர் பிழைத்துள்ளார்.

கடந்த 22ஆம் திகதி இரவு புத்தளம் சிறுகடலில் மீன் பிடிப்பதற்காக விரிக்கப்பட்ட வலையை மீட்பதற்காக கடந்த 23ஆம் திகதிஅதிகாலை தந்தையும் மகனும் கடலுக்கு சென்ற போது அதிகரித்த காற்றின் வேகம் காரணமாக படகு கவிழ்ந்தது.

தந்தையும் மகனும் நீந்தி கரையை அடைய முற்பட்ட போதிலும் தந்தைக்கு நீந்த முடியாமல் போனதால் கடலில் மூழ்கியுள்ளார். இதேவேளை மகன் நீந்தி மாம்புரி கடற்கரையை அடைந்துள்ளார்.

மீனவர்கள் மற்றும் புத்தளம் கடற்படையினர் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில், குறித்த மீனவர் இன்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட சடலம் புத்தளம் பொலிஸாரின் உதவியுடன் புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, புத்தளம் மற்றும் கல்பிட்டி பிரதேசத்துக்கான திடீர் மரண விசாரணை அதிகாரி பீ.எம். ஹிஸாம் முன்னிலையில் பிரேத பரிசோதனை இடம்பெற்று பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

(புத்தளம் தினகரன் நிருபர் எம்.யூ.எம். சனூன்)


Add new comment

Or log in with...