எழுத்தியக்கவாதி பி.வி. அகிலாண்டம் | தினகரன்


எழுத்தியக்கவாதி பி.வி. அகிலாண்டம்

அகிலன் என்று எழுத்துலகில் அறியப்படும் பி.வி. அகிலாண்டம் தமிழ் படைப்பிலக்கிய உலகின் மறக்க முடியாத ஆளுமையாவார். சிறுகதையாசிரியராகவும், நாவலாசிரியராகவும், சிறுவர் இலக்கியம், கட்டுரை, மொழிபெயர்ப்பு என அனைத்து துறையிலும் தன்னை நிலை நாட்டிக் கொண்டவர். இவருடைய படைப்புக்கள் சீனம், மலாய், ஜேர்மன், ஆங்கிலம் ஆகிய பல்வேறு மொழிகளில் வெளிவந்துள்ளன. இவரது கதைகள் பாவை விளக்கு, மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் போன்ற திரைப்படங்களாக வெளிவந்திருக்கின்றன. குமுதம், ஆனந்த விகடன், கலை மகள், தினமணி போன்றவற்றில் எழுதியுமுள்ளார். எண்ணற்ற சிறுகதைகளை எழுதிய அகிலனின் படைப்புக்கள் காலத்தால் அழியாத பொக்கிஷங்களாகும். இவ்வாறானவர்களின் உருவாக்கமே காலத்திற்கு காலம் இலக்கியப் பரப்பு மிக வேகமாக இயங்குவதற்கு காரணமாய் அமைகிறது எனலாம். அகிலன் பற்றிய பல ஏராளமான நினைவுக் கட்டுரைகளை பல எழுத்தாளர்கள் எழுதியுள்ளனர். அகிலன் வாழ்கின்ற போதிலும் சரி, இறந்து போன போதிலும் சரி தன்னுடைய எழுத்துக்களின் கம்பீரம் மூலம் பேசப்பட்டு வருகின்ற ஒரு அதிசயமான படைப்பாளன். இலக்கிய உரையாடல்கள், விழாக்கள், கவிதை பாடும் நிகழ்வுகள் போன்ற பல இலக்கிய நிகழ்வுகளை தன் சொந்த முயற்சியில் உருவாக்கி எதிர்வரும் இலக்கிய தலைமுறைகளுக்கு புதிய வழியினை காட்டித் தந்த அகிலன் எம்மை விட்டு பிரிந்து சென்றாலும் எம் மனதினை விட்டு அகலாத ஒரு சுதந்திரப் படைப்பாளனாவான். 

படைப்பாளர்களின் போக்கு என்பது சமூக விடியலுடன் சார்ந்து நிற்கும் முறைமைகளாகும். அவ்வகையான படைப்புக்களே காலத்தின் விலையினை நிர்மாணிக்கின்றன. ஒரு செயற்பாட்டு முறையிலான எழுத்துருவாக்கங்களை அப்படைப்புக்களில் நாம் நுகர முடியும். ஒரு படைப்பினுடைய உயர்ந்த செல்வாக்கிற்கும், அதன் நீட்சித்தன்மைக்கும், படைப்பாளர்களின் திறந்த செயற்பாட்டிற்கும் இவை தவிர்க்க முடியாத காரணிகளாகின்றன. ஒரு படைப்பு தன்னுடைய இருப்பிலிருந்து விலகுவதில்லை.

அதற்கு முழுமையான காரணி அப்படைப்பினுடைய உரிமையாளன்தான். உயிரோட்டமான ஒரு படைப்பினை அணுகி, அதனுடைய அரசியல் வகைப்பாட்டினை யூகிக்கின்ற போதுதான் எழுத்துக்களினுடைய காத்திரத்தினை எம்மால் புரிந்து கொள்ள முடியும். அவ்வகையில் அகிலனின் படைப்புக்களும் நீங்காததும், காத்திரமானதுமான இடத்தினை தனித்துவமாக வகுத்திருக்கின்றன.

 சாகித்திய அகெடமி விருது, ஞான பீட விருது, ராஜா அண்ணாமலை விருது போன்ற பல விருதுகளை வென்ற அகிலன் காலத்தின் மீதேற்றி வாசிக்கப்படும் படைப்பாளனாவார். 


Add new comment

Or log in with...