மக்களின் அபிலாஷைகளை கட்சிகள் உள்வாங்க வேண்டும்

இரண்டு மாத காலத்தில் நாடு பொதுத் தேர்தலை எதிர்கொள்ள விருக்கின்றது. ஜனாதிபதி தேர்தலை விட மக்களுக்கு இந்தத் தேர்தல் மிக முக்கியமானதாகவே அமைகின்றது. தமக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கின்ற தேர்தல் இது. ஒரு வகையில் நாட்டு மக்களுக்கு இது வசந்த காலகமாகக் கூட பார்க்கப்படுகின்றது. நான்கரை வருடங்களுக்குப் பின்னர் வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய கதைபோன்று நகரங்களிலும், கிராமங்களிலும் தெருக் கூத்துக்களை தாராளமாகப் பார்க்கக் கூடிய காலமாகவே இத் தேர்தலை நோக்க முடியும்.

அரசியல் கட்சிகள், அரசியல் வாதிகள் தமது எண்ணங்களையும், கட்சிகள் தமது கொள்கை கோட்பாடுகளையும், விவாதங்களாகவும், மேடை போட்டும் அறிக்கைகளை விடுத்தும் வாக்கு வேட்டைக்குத் தயாராகி வருகின்றனர். பிரசாரப் பீரங்கிகள் வீதிதோறும் முழங்குவதாக காணக் கூடியதாக இருக்கும். மீண்டும் வாக்குறுதிக் கலாசாரம் கொடிகட்டிப் பறக்கப் போகின்றது.

இந்தத் தேர்தலை நாம் பொது வெளியிலிருந்து பார்ப்பதை விட சிறுபான்மை தமிழ் பேசும் சமூகங்களை முன்னிறுத்திப் பார்ப்பது சாலவும் பொருத்தமாக இருக்கும் என்ற நிலைப்பாட்டில் அலச விளைகின்றோம். தமிழ், முஸ்லிம் அரிசயல் தலைமைகளும், அரசியல்வாதிகளும் தமிழ் பேசும் சமூகங்களின் அரசியல் இருப்பை உத்தரவாதப்படுத்த எவ்வகையான பாதையில் பயணிக்கப் போகின்றார்கள். இதுவரை காலமும் பயணித்த பாதையில் அல்லது புதுப் பாதை அமைத்து புது வழியில் பயணிக்கப் போகின்றனரா என்பதே இன்றைய கேள்வியாகும்.

தமிழ் பேசும் சமூகங்களின் உரிமை, ஐக்கியம், பலம் என கோஷமெழுப்புவதால் உரிய பயனை அடைந்து கொள்ள முடியுமா? தமது அரசியல் இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்கான வர்த்தக அரசியலாகவே சிறுபான்மை தமிழ், முஸ்லிம் அரசியல் சக்திகளின் செயற்பாடுகளை நோக்க முடிகிறது. தமது சமூகங்களின் இருப்புக்கும், அரசியல் விடுதலைக்கும் ஜனநாயக ரீதியில் போராடுவதற்காக அந்த மக்களின் வாக்கு என்ற ஆயுதம் சரியான முறையில் பயன்படுத்தப்பட்டதா என்பதை ஒரு தடவை மீட்டிப் பார்க்க வேண்டியுள்ளது. சிறுபான்மை சமூகங்களின் அரசியல் செல் நெறியானது சுயலாப நோக்கம் நிறைந்ததாகவும் காணப்பட்டது.

ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் தமிழ் பேசும் சிறுபான்மைச் சமூகங்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டுக் கொண்டே இருக்கின்றனர். காலாதி காலமாக இந்த ஏமாற்று அரசியல் சகதிக்குள் மக்கள் அமிழ்த்தப்பட்ட வண்ணமே இருப்பதை காண முடிகிறது. மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதற்கான காத்திரமான செயற்பாடுகள் என்று ஒன்றையாவது சுட்டிக் காட்ட முடியாதுள்ளதா? சிறுபான்மைச் சமூகங்களின் அரசியல் பிரதிநிதித்துவங்களை அதிகரிப்பதற்கு மக்கள் மத்தியில் பேரம் பேசப்படுகின்றது.

இந்த அதிகரித்த பிரதிநிதித்துவத்தை முன்வைத்து பெரும்பான்மைத் தரப்பிடம் பேரம் பேசி தமக்கான அரசியல் இருப்பதை தக்க வைத்துக் கொள்வதற்கு மட்டும்தான் இது பயன்படுத்தப்படுகின்றது. வாக்கு வங்கிகளை தம்வசப்படுத்துவதன் மூலம் தங்களது கஜானாக்களை முழுமையாக நிரப்பிக் கொள்ளவே இது பயன்பட்டு வந்துள்ளன. இங்கே சுயநலம் ஒன்றைத் தவிர வேறெதனையும் காண முடிவதில்லை.

தேசிய அரசியல் கூட இன்று இனவாத அரசியல் சக்திகளிடம் மண்டியிடும் அவலத்தையே பார்க்க முடிகிறது. இத்தகைய அரசியல் செயற்பாடுகள் மூலம் தமது அரசியல் உரிமைகளுக்கு அப்பால் அந்த அரசியல் மூலம் கிட்டக் கூடிய சலுகைகளை முழுமையாக அனுபவித்துக் கொள்கின்றனர். இந்த அனுபவிப்பின் ருசியானது. இவர்களுக்கு தெவிட்டுவதே இல்லை. இப்போது அது பசியாக மாறியுள்ளது. தீராத பசியாக உருவெடுத்துள்ளது.

சிறுபான்மை சமூகங்களை வழிநடத்தும் அரசியல் தலைமைகள் தமது அரசியல் நிலைப்பாடுகளை சமூகங்கள் மீது திணிப்பதை விடுத்து மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கான செயற்பாடுகளில் ஈடுபட தவறினால் வரக் கூடிய தேர்தல் அந்தக் கட்சிகளுக்கு ஒரு சவால் மிக்கதாகவே அமையுமென்ற அபாயம் உருவாகியுள்ளது.

தேர்தல் வரலாற்றை எடுத்துக் கொண்டால் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் துளியளவேனும் இதுகால வரையும் நிறைவேறவே இல்லை. தமிழ் கட்சிகள் கொடுக்கின்ற வாக்குறுதிகள் ஒன்றைக் கூட அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை. தமிழ் சமூகத்தின் அரசியல் இருப்பு வெறும் போராட்ட அரசியலாக மட்டுமே காணப்படுகின்றதே தவிர அவர்களின் இருப்புக்காக எதனையுமே வென்றெடுக்க முடியாத அவலம்தான் தொடர்கின்றது. இதனை நாம் வெளிப்படையாகவே காணமுடிகின்றது.

அதேபோன்று முஸ்லிம் அரசியல் தலைமைகளும் முஸ்லிம் சமூகத்தின் வாக்கு வங்கியை தம் வசப்படுத்தும் ஒரு கொள்கையற்ற அரசியலேயே நடத்திக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம் சமூகத்துக்கிடையே கட்சிகள் பல காணப்படுகின்றன. அதன் பிரதிபலன்கள் சமூகத்தின் வாக்கு வங்கி சிதறடிக்கப்படுவதற்கே பயன்படுகின்றது. இதனால் ஏற்படக் கூடிய பலவீனத்தை சரி செய்ய வேண்டுமாயிருந்தால் முஸ்லிம் கட்சிகள் ஒன்றுபட்டாக வேண்டும். சமூகத்தை மட்டும் மையப்படுத்தி ஒன்றாக இணைந்து செயற்படுவதன் மூலம் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்ளக் கூடிய வாய்ப்பு ஏற்படலாம்.

மற்றொரு வகையில் தேசிய அரசியல் கட்சிகளோடு இணைந்து போகும் முஸ்லிம் சமூகம் இது விடயத்தில் கூடுதல் அவதானம் செலுத்த வேண்டியது மிக முக்கியமானதாகும். முஸ்லிம் வாக்குகள் வீணடிக்கப்படாமல் அமைவதற்கான சரியான ஒரு தலத்தை தேசிய அரசியலில் முஸ்லிம் சமூகம் அமைத்துக் கொள்ள வேண்டியது மிக முக்கியமானதாகும்.


Add new comment

Or log in with...