அரச ஊழியர், ஓய்வூதியக்காரர்கள் சம்பள அதிகரிப்பு இடை நிறுத்தம்

அமைச்சரவையின் தீர்மானத்துக்கமைய நடவடிக்கை

அரசாங்க ஊழியர்களுக்கு ஜனவரி முதலாம் திகதி முதல் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த சம்பள உயர்வு, ஓய்வூதியக்காரர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு மற்றும் நிறைவேற்று அதிகாரிகளுக்கான 15,000 ரூபா கொடுப்பனவு ஆகியவை அமைச்சரவையின் தீர்மானத்துக்கிணங்க இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கடந்த அரசாங்கம் தேர்தலை அண்மித்த காலத்திலேயே மேற்படி சம்பள  அதிகரிப்புக்கான தீர்மானத்தை எடுத்ததாக குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர் அதற்கான நிதி ஒதுக்கீடு இல்லாத காரணத்தினால் அமைச்சரவை அதனை இடை நிறுத்தியதாக தெளிவுபடுத்தினார். பாராளுமன்றத்தில் நேற்று நிலையியற் கட்டளை 27/2இன் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

அனுரகுமார திசாநாயக்க

இந்த அரசாங்கத்தினால் கடந்த டிசம்பர் மாதம் 10ஆம் திகதி அமைச்சரவை எடுத்த தீர்மானத்தை இந்த மாதம் 20ஆம் திகதி அரசாங்கமே இடை நிறுத்தியுள்ளது.

இதனால் இந்த ஜனவரி மாதம் தமது சம்பளம் அதிகரிக்கும் என்றும் தமது ஓய்வூதியம் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்த்த மக்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர். அவர்களின் தலைமையில் தங்கி வாழும் குடும்பங்களும் பாதிப்படைந்துள்ளனர்.

தற்போதைய அரசாங்கமே கடந்த மாதம் அமைச்சரவையில் எடுத்த தீர்மானத்தை இந்த மாதம் 20ஆம் திகதி இடைநிறுத்த தீர்மானித்தமை ஏற்க முடியாதது என்றார்.

முன்னாள் பொது நிர்வாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார

இந்த ஜனவரி மாதத்திலிருந்து அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை 3,000 ரூபா முதல் 24 ஆயிரம் ரூபா வரை ஒவ்வொரு மட்டத்திலும் அதிகரிக்கச் செய்யவும் அத்துடன் நிறைவேற்று அதிகாரிகளுக்கு 15,000 ரூபா கொடுப்பனவு வழங்கவும் எமது அரசாங்கம் தீர்மானித்திருந்தது. அதனை தற்போதைய அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது. ஏற்கனவே இது தொடர்பில் வெளியிடப்பட்ட சுற்று நிருபத்திற்கு இணங்க அதனை விரைவாக பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க

ஜனாதிபதியினால் இது தொடர்பில் ஆராய்ந்து சிபாரிசு செய்வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சேவை பிரிவுக்கும் இணங்க சம்பள அளவு தயாரிக்கப்பட்டு வருகிறது. அதனை அடுத்து அதற்கான நடவடிக்கைகளை விரைவு படுத்துமாறு சம்பள ஆணைக்குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம், சுப்பிரமணியம் நிஷாந்தன் 

 


Add new comment

Or log in with...