ஐ.தே.க தலைவராகிறார் கரு; முன்னணியின் தலைவர் சஜித்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ நெருக்கடி தற்காலிகமாகத் தீர்க்கப்பட்டுள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தினகரனுக்குத் தெரிவித்தன. கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்குமிடையில் நடந்த பேச்சுவார்த்தையின் விளைவாக இழுபறி நிலை தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளதாக அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன.

ஏற்படுத்தப்பட்டுள்ள இணக்கப்பாட்டின்படி தினகரனின் நேற்றைய செய்தியின் பிரகாரம், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக சபாநாயகர் கரு ஜயசூரியவும் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் நியமிக்கப்படுகின்றனர்.

இரண்டு அமைப்புக்குமான சிரேஷ்ட தலைவராக ரணில் விக்கிரமசிங்க செயற்படுவார். சபாநாயகருக்கும் கட்சியின் தலைவருக்குமிடையில் நடைபெற்ற சந்திப்பில் எட்டப்பட்டுள்ள இந்த இணக்கப்பாடு தொடர்பில், இன்றைய தினம் எதிர்க் கட்சித் தலைவருக்கு இருவரும் விளக்கமளிப்பார்கள் என்றும் தகவல்கள் தெரிவித்தன.

இந்நிலையில், சஜித் பிரேமதாச அணியிலிருந்து 38 பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்க தரப்புக்கு மாறியுள்ளதாகவும் தெரியவருகிறது.

இதேவேளை, தலைமைத்துவ நெருக்கடிக்குப் புறம்பாகப் புதிதாக ஏற்பட்டிருந்த பிரதமர் வேட்பாளர் சர்ச்சை குறித்துத் தற்போதைக்குப் பேச்சுவார்த்தை நடத்துவதில்லையென்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதலில் தலைமைத்துவ பிரச்சினையைத் தீர்த்துவிட்டுப் பின்னர் தேர்தல் நெருங்கும்வேளை அதுபற்றிச் சிந்தித்து முடிவெடுக்க முடியும் என்று ரணில் விக்கிரமசிங்க கட்சி உறுப்பினர்களுக்குத் தெரிவித்துள்ளார்.

தற்போது ஏற்பட்டுள்ள இப் புதிய இணக்கத்திற்கமைய ஐக்கிய தேசிய கட்சியின் புதிய செயற்குழுவைத் தெரிவுசெய்யும் பணி எதிர்வரும் திங்கட்கிழமை மேற்கொள்ளப்படுமெனவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தொடர்பாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோருக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விளக்கமளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் பி.பெரேராவும் விஜயபால ஹெட்டியாராச்சியும் பாராளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் அறிவித்தனர்.

தமது எதிர்கால செயற்பாடுகள் குறித்தும் தேர்தல் நடவடிக்கை பற்றியும் சஜித் பிரேமதாச ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் கூட்டத்தில் எடுத்துரைப்பாரென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும், எட்டப்பட்டுள்ள இணக்கப்பாடுகள் தொடர்பில் தமது தரப்பிற்கு எவ்விதமான உத்தியோகபூர்வ அறிவித்தலும் கிடைக்கப்பெறவில்லையென்று சஜித் பிரேமதாச தரப்பின் ஊடகப் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தினகரனுக்குத் தெரிவித்தார்.(வி)

எம்.ஏ.எம்.நிலாம்


Add new comment

Or log in with...