போர்க் களமாகும் விண்வெளி!

உலகின் புதிய போர்க்களமாக விண்வெளி உருவாகி வருகிறது. வலலரசு நாடுகள் விண்வெளியை தத்தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பகீரதப் பிரயத்தனங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. உலக சமாதானத்துக்கு மற்றொரு அச்சுறுத்தல் இதன் மூலம் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

உலகின் பொதுவெளியான விண்வெளியைக் கூட இந்த ஆதிக்க வல்லரசுகள் விட்டு வைப்பதாகத் தெரியவில்லை. அமெரிக்கா ஆரம்பித்த விண்வெளிப் பாதுகாப்புப் படையையொத்த மற்றொரு விண்வெளி பாதுகாப்புப் படையை ஜப்பான் நாடும் அமைக்கவிருப்பதாக ஜப்பானியப் பிரதமர் ஷின்ஸோ அபே அறிவித்திருக்கின்றார்.

உலகம் அமைதி, சமாதானத்திற்காக ஏங்கிக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், மறுபுறம் ஆதிக்க வல்லரசுகள் தங்களது இறுக்கமான பிடியை மேலும் வலுப்படுத்தும் பொருட்டு கண்களை மூடிக் கொண்டு தம் இஷ்டப்படி உலகை ஆட்டுவிக்கும் ஒரு கைங்கரியத்தில் ஈடுபட்டு வருவதை அண்மித்த காலங்களில் கண்கூடாகக் காணக் கூடியதாக இருக்கின்றது. இதன் ஒரு படியாகவே அமெரிக்காவைப் போன்று ஜப்பானும் விண்வெளிப் பாதுகாப்புப் படையை உருவாக்கும் பணியைத் தொடங்கியிருக்கின்றது. விண்வெளியில் தமது நாடுகள் எதிர்கொள்ளக் கூடிய அச்சுறுத்தல்கள், சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கு இப்படை உருவாக்கப்படுவதாக அந்நாடுகள் தெரிவித்து வருகின்றன.

அமெரிக்கா, ஜப்பான் நாடுகள் மட்டுமன்றி ஆதிக்க வல்லரசுகளாகக் காணப்படும் சீனா, இந்தியா, ரஷ்யாவும் கூட இந்த வழியைப் பின்பற்றத் தொடங்கினால் உலகில் அமைதி, சமாதானம் என்பது எண்ணிப் பார்க்கக் கூட முடியாத ஒன்றாகவே அமையப் போகின்றது. விண்வெளியில் தத்தமது நாடுகளின் செயற்கைக்கோள்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று இந்த ஆதிக்க வல்லரசு நாடுகள் நோட்டம் இடுகின்றன.

அமெரிக்காவும், ஜப்பானும் விண்வெளி ஆதிக்கத்தில் இறங்கியமைக்குக் காரணம் சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் தாக்கலாம் என்ற கவலை அவர்களுக்கு உருவாகி இருப்பதனாலாகும். செயற்கைக் கோள்களை அழிக்கும் தொழில்நுட்பங்களை சீனாவும் ரஷ்யாவும் உருவாக்கி வருவது இந்த அச்சத்துக்கு ஒரு காரணமாக இருக்கலாம். விண்வெளியில் தமது பாதுகாப்புத் திறனை வலுப்படுத்துவதே அமெரிக்காவினதும் ஜப்பானினதும் நோக்கமாக இருந்தாலும், அதனால் ஏற்படக் கூடிய பின்விளைவுகள் குறித்து இவர்கள் எண்ணிப் பார்க்க தவறியிருக்கின்றன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் விண்வெளிப் பாதுகாப்பை உருவாக்கும் போதே கூறிய ஒரு கருத்து சமாதானத்தை விரும்பும் உலகை சற்று திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

“உலகின் புதிய போர்க்களமாக விண்வெளி உருவாகி வருகிறது, அமெரிக்காவின் பாதுகாப்புக்கு உருவாகும் அச்சுறுத்தலை எதிர்கொள்ள விண்வெளியில் நாம் கவனம் செலுத்துவது அவசியமாகிறது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த படைப்பிரிவு விண்வெளியை நமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவும்” என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இதே நிலைப்பாட்டை ஜப்பானும் கொண்டிருக்கிறது. விண்வெளியை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் நோக்கத்துடன் ஏனைய ஆதிக்க வல்லரசுகளும் செயற்பட முனைந்தால் அதன் தாக்கத்தை உலகம் தாங்கிக் கொள்ள முடியுமா என்ற ஒரு கேள்வி எழுகின்றது.

அமெரிக்கா, ஜப்பானுக்கு அடுத்தபடியாக வல்லரசுகளாக காணப்படுகின்ற சீனா, இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகளும் விண்வெளி ஆதிக்கத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்குமேயானால் அதனால் ஏற்படக் கூடிய விளைவுகள் மிக மோசமானதாகவே மாறி விடலாம். அமெரிக்கா முழு விண்வெளி ஆதிக்கத்தையும் தனது கைக்குள் கொண்டு வருவதற்கு நீ்ண்ட காலமாகவே திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றது. தமக்கு வரக் கூடிய அச்சுறுத்தலை முறியடிப்பதற்கு விண்வெளி பாதுகாப்புப் படையை அமைக்கும் அமெரிக்காவும் ஜப்பானும் ஏனைய வல்லரசுகளின் ஆதிக்கத்தை முறியடிக்கின்ற முயற்சியொன்றில் ஈடுபட்டிருப்பது அந்த நாடுகளை மட்டும் பாதிப்பதாக அமைந்து விடாது. அது முழு உலகத்திற்குமே விடுக்கப்படுகின்ற பெரும் அச்சுறுத்தலாகும்.

பூமிப் பந்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக கையாண்டு வரும் ஆதிக்க வல்லரசுகள் உலகின் பொதுவெளியான விண்வெளியைக் கூட விட்டு வைக்காமல் தத்தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியானது உலக அமைதிக்கும் சமாதானத்திற்கும் விடுக்கப்படுகின்ற பெரும் அச்சுறுத்தலாகும். இந்த சவாலை அமைதியையும் சமாதானத்தையும் விரும்புகின்ற உலகம் எப்படி எதிர்கொள்ள போகின்றது புரியாத புதிராகவே காணப்படுகின்றது.

உலகில் அனைத்து நாடுகளிலும் சமாதானமும் அமைதியும் கேள்விக்குள்ளாக்கப்பட்டதாகவே காணப்படுகின்றன. ஆயுதங்களைக் கொண்டு உலகில் சமாதானத்தையோ அமைதியையோ உறுதிப்படுத்தி விட முடியாது. நல்லிணக்கம், சமாதானம், சகவாழ்வு மிக முக்கியமானதாக கருதப்படுகின்ற மிக முக்கிய காலகட்டத்தில் தங்களது சக்தியை விண்வெளியிலும் பிரகடனப்படுத்துவதற்கு ஆதிக்க வல்லரசுகள் முயற்சிப்பதால் சில சமயங்களில் உலகம் எதிர்பாராத விளைவுகளுக்கு முகம் கொடுக்க நேரிடலாம்.

ஒருபுறம் ஆயுதங்களை ஏந்திக் கொண்டு மறுபுறம் அமைதி சமாதானத்திற்காக குரல் கொடுக்கின்ற ஒரு அபத்தமான கைங்கரியத்தையே நாம் உலகில் கண்டு வருகின்றோம். இந்த இருதலைப் போக்கை உலகம் எவ்வாறு சமாளிக்கப் போகின்றது? மற்றொரு உலகப் போருக்கு நாடுகள் முகங்கொடுக்க நேரிட்டால் உலக அழிவுக்கானதொரு சவாலாகவே அதனை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இவ்வாறான ஒரு நிலையில், விண்வெளியில் பாதுகாப்புப் படையை உருவாக்கும் வல்லரசுகளின் முயற்சி ஆரோக்கியமானதா என்பதையிட்டு உலகம் விழிப்புடன் ஆராய வேண்டிய அவசியம் இன்று ஏற்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...