ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு; பெப் 26 முதல் நேர்முகப் பரீட்சை | தினகரன்

ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு; பெப் 26 முதல் நேர்முகப் பரீட்சை

ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு; பெப் 26 முதல் நேர்முகப் பரீட்சை-One Lakh Job for Low Income Family

- மாதிரி விண்ணப்பப்படிவம் ஜனவரி 20ஆம் திகதி தினகரன் பத்திரிகையில்
- நேர்முகப் பரீட்சை பெப்ரவரி 26ஆம் திகதி முதல் 05 நாட்களுக்குள்
- தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரிகளுக்கு 06 மாதகால பயிற்சி
- பயிற்சிக் காலத்தில் ரூ. 22,500 மாதாந்தக் கொடுப்பனவு
- பயிற்சியின் பின்னர் ஒக்டோபர் 01ஆம் திகதி முதல் நிரந்தர அரச வேலைவாய்ப்பு

மக்களை மையப்படுத்திய பொருளாதாரத்தின் உயர்ந்தபட்ச சமூக நலன்பேணலைக் கருத்திற்கொண்டு குறைந்த வருமானமுடைய குடும்பங்களின் அங்கத்தவர்களுக்கு நிரந்தர வருமானத்தை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் துரித கதியில் அரச வேலைவாய்ப்புகளை வழங்கும் செயற்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கிராம உத்தியோகத்தரிடம் கையளிக்கவும்
விண்ணப்பதாரிகள் கடந்த ஜனவரி 20ஆம் திகதி செய்திப் பத்திரிகைகளில் பிரசுரமான அறிவித்தலில் குறிப்பிட்டுள்ள மாதிரி படிவத்திற்கமைய தயாரிக்கப்பட்ட விண்ணப்பப்படிவங்களை 2020.02.15ஆம் திகதிக்கு முன்னர் தமது பிரதேசத்தின் கிராம உத்தியோகத்தரிடம் கையளிக்க வேண்டும்.

தகவல் உறுதிப்படுத்தல்
கிராம உத்தியோகத்தரினால் குறித்த தகவல்கள் உறுதிப்படுத்தப்படும்போது பிரதேசத்தில் கீழ் மட்டத்திலுள்ள சமூர்த்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட ஏனைய உத்தியோகத்தர்களிடமும் பிரதேச மத குருமார்கள் பிரிவிற்குப் பொறுப்பான மக்கள் பிரதிநிதிகள் ஆகியோரிடமும் விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும். பிழையான தகவல்களை உறுதிப்படுத்துதலானது, உத்தியோகத்திலிருந்து இடைநிறுத்தப்படுதல் உள்ளிட்ட ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு உட்பட்டதாகும்.

பிரதேச செயலாளருக்கு அனுப்பப்படும்
கிராம உத்தியோகத்தர் அத்தகவல்களை உறுதிப்படுத்தி 2020.02.20 ஆம் திகதிக்கு முன்னர் தமது பிரதேச செயலாளரிடம் கையளித்தல் வேண்டும்.

பிரதேச செயலாளர்கள் தொடர்ச்சியாக இந்த நடவடிக்கைகளை மேற்பார்வை செய்து தொழிலில் ஈடுபடக்கூடிய வறிய குடும்பங்களுக்கு முன்னுரிமையளிக்கக்கூடிய வகையில் செயற்திட்டம் முன்னெடுக்கப்படுவதற்கு உறுதியளித்தல் வேண்டும்.

கிராம உத்தியோகத்தரிடமிருந்து கிடைக்கப்பெறும் தகவல்கள்/ விண்ணப்பப்படிவங்கள் 2020.02.25ஆம் திகதிக்கு முன்னர் பிரதேச செயலாளரினால் உரியவாறு ஆவணப்படுத்தப்படல் வேண்டும்.

நேர்முகப் பரீட்சை
பிரதேச செயலகத்தில் அல்லது பிரதேச செயலாளரினால் குறிப்பிடப்படும் வேறு பொது இடமொன்றில் தெரிவு செய்யப்படுவதற்கான நேர்முகப் பரீட்சைகள் பல்நோக்கு அபிவிருத்தி செயலணியினால் 2020.02.26ஆம் திகதி முதல் 05 நாட்களுக்குள் நடாத்தப்படும். விண்ணப்பதாரிகள் நேர்முகப் பரீட்சைக்கு வருகைத் தரும்போது கிராம உத்தியோகத்தர் சான்றிதழ் மற்றும் ஏனைய ஆவணங்கள் இருப்பின் அவற்றை சமர்ப்பித்தல் வேண்டும்.

நியமனக் கடிதம்
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கு பல்நோக்கு அபிவிருத்தி செயலணியின் பயிற்சிகால நியமனக் கடிதம் உரிய பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்களின் ஊடாக வழங்கப்படும்.

பயிற்சி
பயிற்சி நடவடிக்கைகள் 2020.03.02ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும். பயிற்சிக் காலத்தில் 22,500 ரூபா மாதாந்தக் கொடுப்பனவாக செலுத்தப்படும்.

நிரந்தர நியமனம்
முறையான பயிற்சியின் பின்னர் 2020.10.01ஆம் திகதி முதல் ஓய்வூதிய உரித்துடைய நிரந்தர உத்தியோகத்தர்களாக நியமனம் வழங்கப்படும்.

விசேட செயற்குழு
குறித்த செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் விசேட செயற் குழுவொன்று உருவாக்கப்படும். தொழில் நிபுணர்களினால் முகாமைத்துவம் செய்யப்படும் இந்த குழுவானது, குறைந்த கல்வித் தகைமைகளைக் கொண்ட குறைந்த வருமானமுடைய மக்களை தொழில் தேர்ச்சி பெற்றவர்களாக உருவாக்கி அரச மற்றும் அரச சார்பற்ற சேவை வழங்குநர்களாக உருவாக்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

தகைமை
இதற்காக க.பொ.த சாதாரண தரத்திற்கு குறைந்த கல்வித் தகைமையுடைய 18-45 வயதிற்குட்பட்ட வேலைவாய்ப்பற்றோர் மாத்திரம் உள்ளீர்க்கப்படுவர்.

வசிக்கும் பிரதேசத்திலேயே தொழில்
இணைத்துக் கொள்ளப்படுபவர்கள் தொழிற்பயிற்சி வழங்கப்பட்டதன் பின்னர் சேவையில் நிரந்தரமாக்கப்படுவர். இவர்கள் தமது குடும்ப உறவுகளிடமிருந்து பிரிந்து தொலை தூரத்தில் தொழில்புரியக்கூடிய நிலைமை ஏற்படாதவண்ணம் அவர்கள் வசிக்கும் பிரதேசத்திற்கு அருகாமையிலேயே அமைந்துள்ள சேவை நிலையங்களில் தொழில்வாய்ப்புகள் பெற்றுக்கொடுக்கப்படும்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கும் திட்டம்
அவர்களது திருப்திகரமான சேவை, ஒழுக்கம் மற்றும் உயர் செயற்திறன் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு பின்னர் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 


There are 2 Comments

Job super

is that suitable for tamil residential places?

Add new comment

Or log in with...