மட்டு. காணாமல் போனோர் அலுவகலத்தை மூடுமாறு பேரணி

மட்டு. காணாமல் போனோர் அலுவகலத்தை மூடுமாறு பேரணி-Protest Against Missing Person Office-OMP-Batticaloa

மட்டக்களப்பில் திறக்கப்பட்டுள்ள காணாமல்போனவர்கள் தொடர்பான அலுவலகத்தினை மூடுமாறு கோரியும், காணாமல்போனவர்கள் தொடர்பில் சர்வதேச நீதி விசாரணையை வலியுறுத்தியும், மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு பேரணியும், போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

வடகிழக்கு மாகாண வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டு. காணாமல் போனோர் அலுவகலத்தை மூடுமாறு பேரணி-Protest Against Missing Person Office-OMP-Batticaloa

மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ. முன்பாக கவன ஈர்ப்பு பேரணி ஆரம்பமாகி மட்டக்களப்பு நகர் ஊடாக சென்று மட்டக்களப்பு மத்திய வீதியில் திறக்கப்பட்டுள்ள காணாமல்போனவர்கள் தொடர்பான அலுவலகத்திற்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா.மனித உரிமைகள் மாநாடு ஆரம்பமாகவுள்ள நிலையில் அதற்கு கண்துடைப்பாகவே இந்த அலுவலகம் இரகசியமான முறையில் திறக்கப்பட்டுள்ளதாக இங்கு குற்றஞ்சாட்டப்பட்டது.

மட்டு. காணாமல் போனோர் அலுவகலத்தை மூடுமாறு பேரணி-Protest Against Missing Person Office-OMP-Batticaloa

யாருக்கும் அறிவிக்கப்படாமல், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கத்திற்கு அறிவிக்கப்படாமல், ஊடகங்களுக்கு அறிவிக்கப்படாமல் குறித்த அலுவலகம் இரகசியமான முறையில் திறக்கப்பட்டுள்ளமையானது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவும் இதன்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அமைப்பினர் குற்றஞ்சாட்டினர்.

மட்டு. காணாமல் போனோர் அலுவகலத்தை மூடுமாறு பேரணி-Protest Against Missing Person Office-OMP-Batticaloa

"வெள்ளை வானில் கடத்தியவர்கள் யுத்தத்தில் இறந்தார்கள் என்றால் நீயா கொன்றாய்..?, "6000ருபா கொடுத்து மக்களை ஏமாற்றாதே.? ,"எங்களுக்கு சர்வதேச விசாரணையே வேண்டும்", உள்ளூர் விசாரணை அல்ல, இரவோடிரவாக ஓ.எம்.பியை (OMP) அமைத்து இலங்கை அரசு எதனை சாதிக்கப்போகின்றது?, வீதியில் நின்று போராடும் தாய்மார்களை மேலும் மேலும் சாகடிக்காதே, நாம் இறக்குமுன் எமது உறவுகளை எம்முடன் இணைந்து வாழவிடு, (OMP) ஓம்பியே! ஆறு மாதங்கள் கடந்தும் ஒருவரையேனும் தேடித்தர முடியாத உனக்கு அலுவலகம் எதற்கு, போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளையும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

மட்டு. காணாமல் போனோர் அலுவகலத்தை மூடுமாறு பேரணி-Protest Against Missing Person Office-OMP-Batticaloa

ஆறு மாதங்களுக்கு முன்னர் காணாமல்போனவர்கள் தொடர்பான அலுவலகத்தில் காணாமல்போன ஐந்து பேர் தொடர்பான அனைத்து விபரங்களும் வழங்கப்பட்ட நிலையிலும் இதுவரையில் ஒருவர் தொடர்பிலும் எந்த பதிலையும் வழங்கமுடியாத காணாமல்போனவர்கள் தொடர்பான அலுவலகம் தமக்கு தேவையில்லையெனவும் இங்கு கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.

இந்த போராட்டத்தில் வடகிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அமைப்பின் தலைவி திருமதி. யோகராஜா கனகரஞ்சினி, செயலாளர் லீலாதேவி அனந்தராஜா, மட்டக்களப்பு மாவட்ட தலைவி திருமதி. அமலதாஸ் அமலநாயகி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரும் இறந்துவிட்டார் என அண்மையில் ஜனாதிபதி தெரிவித்திருந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பினை தெரிவித்த வடகிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அமைப்பினர் யுத்ததின் பின்னர் தாங்கள் படையினரிடம் வழங்கிய பிள்ளைகள் எந்த யுத்தத்தில் உயிரிழந்தார்கள் என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்தனர்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் படையினரிடம் சரணடைந்த பிள்ளைகளின் நிலைமைகளை உரிய அதிகாரிகள் வெளிப்படுத்த வேண்டும். காணாமல்போனவர்களை கண்டுபிடித்து தரவேண்டும். இதற்கான அழுத்தங்களை சர்வதேசம் வழங்கவேண்டும் எனவும் இங்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

எமது பிள்ளைகள் இறந்துவிட்டது என்றால் எவ்வாறு இறந்தது,யாரால் கொல்லப்பட்டனர் என்ற விபரங்கள் பகிரங்கப்படுத்தப்படவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்ததுடன் தமக்கு உள்நாட்டு பொறிமுறையில் எந்த நம்பிக்கையும் இல்லையெனவும் சர்வதேச பொறிமுறையொன்றின் ஊடாக தமது உறவுகள் தொடர்பான நிலையினை கண்டுபிடித்து தமக்கு வழங்கவேண்டும் எனவும் இங்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

(வெல்லாவெளி தினகரன் நிருபர் - க. விஜயரெத்தினம்)


Add new comment

Or log in with...