சமூகத்தை சீர்குலைக்கும் தலைவர்களை நிராகரிக்க வேண்டும் | தினகரன்


சமூகத்தை சீர்குலைக்கும் தலைவர்களை நிராகரிக்க வேண்டும்

முன்னாள் அமைச்சர் ஹசன் அலி வலியுறுத்து

சமூகத்தை சீர்குலைக்கும் தலைவர்களை நிராகரித்து, நாம் இலங்கையர் என்ற அடிப்படையில் சமூக அபிவிருத்தியை முதன்மைப்படுத்தும் உண்மையான தலைவர்களை இனம் கண்டு, அவர்களை எமது மக்கள் பிரதிநிதிகளாக ஆக்குதல் வேண்டும் என்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் சுகாதார மற்றும் போசாக்கு துறை முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். ரி ஹசன் அலி முஸ்லிம் சமூகத்துக்கு அழைப்பு விடுத்து உள்ளார்.

ஐக்கிய சமதான கூட்டமைப்பின் கொலன்னாவ பிரதேசத்துக்கான பெண்கள் மத்திய குழு கூட்டம் அப்பிரதேசத்துக்கான அமைப்பாளர்  என். எம். உவைஸ் தலைமையில் இடம்பெற்றபோது இதில் பிரதம உரை ஆற்றுகையில் ஹசன் அலி இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்:

கடந்த ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் நிபந்தனை அற்ற முறையில் ஒரு பொது கூட்டுக்கு ஆதரவு வழங்கினர். ஆனால் தலைவர் அஷ்ரபின் சிந்தனையில் பயணிக்கும் நாம் நிதானமாக முடிவெடுத்து முஸ்லிம்கள் சம்மந்தமான பொது விடயங்களை உள்ளடக்கிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டு மொட்டுக்கு ஆதரவு வழங்கி ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷவின் வெற்றியில் பங்காளி ஆகி இருக்கின்றோம். உங்கள் தேவைகளை அறிந்து அவரின் சேவைகளை உங்கள் காலடிக்கு நிச்சயம் கொண்டு வருவோம்.

கடந்த காலங்களில் தனித்துவ கட்சி கட்டமைப்புக்கள் சிதைக்கப்பட்டன. அங்கு தனிநபர்களின் ஆதிக்கங்கள் மேலோங்கின. மக்களுக்கான வள பங்கீடுகள் பறி போயின. அவ்வாறான ஒழுக்கம் அற்றவர்கள் எமது கட்சியில் உள்வாங்கப்பட மாட்டார்கள். அதற்கு ஏற்றபடி நேர்த்தியான பொறிமுறையை உருவாக்கவே கிராம மட்டத்தில் இருந்து கட்சியை கட்டமைத்து வருகின்றோம்.

கிராம மட்டத்தில் குறிப்பாக மேல் மாகாணத்தில் வாழும் முஸ்லிம்கள் மிகவும் பின் தங்கிய நிலையில்தான் உள்ளனர். அவர்களின் அடிப்படை உரிமைகளை அரச வள பங்கீட்டின் ஊடாக பெற முடியாத அளவுக்கு  உள்ளனர். உதாரணத்துக்கு சமுர்த்தி நிவாரணம் கிடைக்கும் தகுதி இருந்தும் அவற்றை பெற முடியாமல் உள்ளனர். ஏனென்றால் அவை தொடர்பான தகவல், அறிவு, விழிப்பு ஆகியவற்றை பெற முடியாதவர்களாக இருக்கின்றனர். அரச அதிகாரிகளுக்கும், மக்களுக்குமான தொடர்புகள் நெருக்கமாகுதல் வேண்டும்.

மூவின சமூகங்களும் ஒன்றாக செயற்பட்டு, அவர்களுக்குள் தகவல்களை வெளிப்படையாக பரிமாறுகின்ற காலம் மலர்தல் வேண்டும். சமூகத்தை சீர் குலைக்கும் தலைவர்களை நிராகரித்து, இலங்கையர் என்ற அடிப்படையில் சமூக அபிவிருத்தியை முதன்மைப்படுத்தும் உண்மையான தலைவர்களை நாம் இனம் கண்டு, எமது மக்கள் பிரதிநிதிகளாக ஆக்க வேண்டும். இதன் மூலமாக சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கும் சரியான தீர்வுகள் கிடைக்க பெறும்எனக் கூறினார்.

(எம்.ஏ.ஆர்.எம்.முஸ்தபா - நாவிதன்வெளி தினகரன் நிருபர்)


Add new comment

Or log in with...